புதுடெல்லி ஜூன் 25 தேர்தலுக்குப் பிறகு 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.6.2024) தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், அமைச்சர்களும் பதவியேற்கும்போது ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தை உயர்த்திக் காட்டினர்.
இதுகுறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் கூறிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனம் மீது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நிகழ நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம். எனவே நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது நாங்கள் அரசியல் சாசனத்தை கையில் ஏந்துவோம். இதன்மூலம், எந்த சக்தியாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது என உணர்த்த விரும்புகிறோம்” என்றார்.
உ.பி.யில் 37 உறுப்பினர்களைப் பெற்ற சமாஜ்வாதி கட்சி மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இக்கட்சி மக்களவை உறுப்பினர்களின் கைகளிலும் அரசியல் சாசனம் இருந்தது. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்திய அரசியல் சாசனத்தை எவராலும் மாற்றிவிட முடியாது என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம்” என்று அகிலேஷும் கூறினார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அரசியல் சாசனம் மீதான விவாதம் முக்கிய இடம்பெற்றிருந்தது. பாஜகவின் அயோத்தி வேட்பாளர் லல்லுசிங், “பாஜக ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் போதுமானது. ஆனால், அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற 3-இல் 2 பங்கு பெரும்பான்மை தேவை” என்றார்.
இதையடுத்து இவரது கருத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தில் முன்னெடுத்தனர். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மறுப்பு தெரிவித்தாலும் உ.பி.யில் பாஜகவுக்கு தொகுதிகள் குறைய இது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை கண்ட அகிலேஷ், தங்கள் கட்சியின் அயோத்தி மக்களவை உறுப்பினரான அவதேஷ் பிரசாத்தின் கைகளை பிடித்து முன்னே அழைத்து வந்தார். இவர்தான் அயோத்தியில் பாஜகவை தோல்வியுறச் செய்தவர் என்று அறிமுகப்படுத்தினார். பிறகு மக்களவைக்கு சென்றபோதும், சோனியா,ராகுல், கார்கே உள்ளிட்டோரிடமும் அவதேஷை அறிமுகப்படுத்தினார். உ.பி.யில் தொடக்கம் முதலாக யாதவர் சமூகத்தின் ஆதரவு பெற்ற கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. இக்கட்சிக்கு முஸ்லிம்களும் ஆதரவளிப்பதால் அதனை எம்-ஒய் (யாதவர்-முஸ்லிம்) கட்சி என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தினரை சமாஜ்வாதி புறக்கணிப்பதாக புகார்கள் அதிகரித்ததால், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த அவதேஷ் பிரசாத் நிறுத்தப்பட்டார்.