ஓட்டு அரசியலும் – ஓட்டை அயோத்தி இராமன் கோவிலும்!

Viduthalai
2 Min Read

ஊசிமிளகாய்

‘அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதை’ என்பது பழைய பழமொழி!
‘அவசர ஓட்டு வேட்டையும் – அயோத்தி அலங்கோல இராமன் கோவிலும்’ என்பது இப்போதைய புதிய அரசியல் மொழியாகும்!
கட்டி முடிக்கப்படாத அரைகுறை அயோத்தி இராமன் கோவிலைத் திறந்து, அளவற்ற ஆர்ப்பாட்ட அமோக விளம்பர வெளிச்சம், அனைத்து இந்தியாவிலும் இராமன் காலத்தில் அவர்களுக்கே தெரியாத, புரியாத மின்னணுவியல் தொழில்நுட்ப விளம்பர வெளிச்சத்தில், அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பாமர பக்தர்களின் காட்சிகள்!
– இத்தனை டம்பங்களும் பிம்பங்களும் உரு வாக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவு – அயோத்தியில் திடீர் ‘‘ஏர்போர்ட்’’ – திசை எட்டுமுள்ளோருக்கு அழைப்பு மேல் அழைப்பு!
என்றாலும், எதிர்பார்த்த வாக்கு விளைச்சல் கிட்டவில்லை என்பதோடு, இராமன் கோவில் கட்டப்பட்ட அயோத்தி பால இராமன் தொகுதியாகிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தோல்வி. சுற்றுவட்டாரம் மட்டுமல்ல, இராமேசுவரம் வரை எங்கெங்கும் இராமன் கோவில்களும், சேத்திரங்களும் அடேயப்பா, என்ன, என்ன? நம் ‘அவதாரப்’ பிரதமர் மோடி அவர்களின் தீர்த்தங்கள் குளியல், யாத்திரை ஸ்தலங்கள் பல சென்றும் எல்லா தொகுதிகளிலும்கூட தோல்வி! தோல்வி!! தோல்வி!!!

மோடி மீது பால இராம பிரானுக்கு ரெளத்திரம் மிக அதிகம் போலும்! காரணம், ஓட்டை ஒழுகல் உள்ள திட்ட மிடாத திடீர் 777 கோவில் – அதில் எல்லாமுமே நானே என்ற மோடி ஜியின் முதன்மை ஸ்தானம்! முக்கல், முணுகல் குரல்களுக்கிடையே!
அரை குறையாகக் கட்டி முடிக்கப்பட முடியாத பால இராமன் கர்ப்பக்கிருகத்தில் சாக்கடை அமைப்பில்லா மையால், தினசரி பாலாபிஷேகம் பண்ண முடியவில்லை என்று தலைமை அர்ச்சகர் அங்கலாய்க்கிறார்!
முந்தைய மூத்த அர்ச்சகர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்!
‘‘எங்கள் யாரையும் கலக்காமலேயே கோவில் – கர்ப்பக்கிரக மூலஸ்தானம் எல்லாம் கட்டப்பட்டதன் கொடூர விளைவு” என்று குற்றப் பத்திரிகை வாசிக்கிறார் அந்தத் தலைமைப் பூசாரி!

ஆலாபனை, ஆரோகணம், அவரோகணம் எல்லாம் நடந்தேறுகின்றன – அவலங்களுக்கிடையே!
இதற்குமுன் சங்கராச்சாரிகளின் சாபங்கள் வேறு; குத்தல் – குடைச்சல்!
எனவே, மோடிஜிக்கு இராமன் மேல் என்ன கோபமோ! அவரை விட்டுவிட்டு ‘‘ஜெய் சிறீராம்’’ போய், ‘‘ஜெய் ஜெகன்னாத்’’ என்ற பூரி ஒடிசா கடவுளுக்கு மாறிவிட்டார்!

இராமனுக்குப் போட்டியாக தன்னை ‘அவதாரம’ என்று பிரகடனப்படுத்தியமைக்காகவோ என்னவோ அவருக்குப் போதிய பலம் நாடாளுமன்றத்தில் தேர்தலில் தராத மறைமுக சாபம் தந்துவிட்டார் போலும்!
இனி என்ன? எவ்வளவு காலத்திற்கு ‘‘ஜெய் ஜெகன்னாத்’’ – இராஜ்ய சபையிலும் – இனி அங்கும் ஜெகன்னாதர் அருள்பாலிக்க மாட்டார் போலும்!
ஆந்திரா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் இராஜ்ய சபை எம்.பி.,க்கள், ஒடிசா நவீன்பட்நாயக்கின் கட்சி எம்.பி.,க்கள் எல்லாம் சேர்ந்தால், அங்கு மீண்டும் சிக்கல் – இடியாப்ப சிக்கல் அல்லவா ஏற்பட வாய்ப்புள்ளது!
நோ ேஹராம்! ஜெய், ஜெகன்னாத்!
வேறு கடவுள் புது அவதாரம் தேட வேண்டுமோ?
என்னா விநோதம் பாரு!
எவ்வளவு ஜோக்கு பாரு! பாரு!! பாரு!!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *