பாட்னா, ஜூன் 25- நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் மேலும் 5 வழக்குகள் பதிவு செய்து விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு
நாட்டையே உலுக்கிய நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை ஒன்றிய அரசு சி.பி.அய். வசம் ஒப்படைத்தது. உடனடியாக விசாரணையை தொடங்கிய சி.பி.அய். அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள் அடிப்படையிலும், ஒன்றிய கல்வி அமைச்சகம் வழங்கிய குறிப்புகளின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்தனர்.
முன்னதாக நீட் முறைகேடுகள் தொடர்பாக குஜராத், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் காவல்துறையினர் வேறு வழக்குகளை பதிவு செய்து பலரை கைதும் செய்திருந்தனர்.
எனவே, அந்த வழக்குகளை தன்வசம் எடுக்க சி.பி.அய். முடிவு செய்தது. இதற்காக அந்தந்த மாநிலங்களுக்கு அதிகாரிகள் குழுக்கள் சென்றனர்.
அதன்படி டில்லியில் இருந்து ஒரு குழுவினர் நேற்று (24.6.2024) பீகார் தலைநகர் பாட்னா விரைந்தனர். அங்கு அந்த மாநில பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் இருந்து விசாரணையை ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள் பதிவு செய்திருந்த வழக்கின் அடிப்படையில் சி.பி.அய். புதிதாக வழக்கு பதிவு செய்தது. அத்துடன் அவர்கள் சேகரித்து இருந்த ஆதாரங்களை பெற்றுக் கொண்ட சி.பி.அய். அதிகாரிகள் அவற்றை தங் கள் வழக் குக்கு ஆதாரமாக வைத்து உள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக பீகார் காவல்துறையினர் 18 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்திருந்தனர். அவர்களை டில்லிக்கு அழைத்து செல்லவும் சி.பி.அய். அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மொத்தம் 6 வழக்குகள்
இதைப்போல குஜராத்தில் ஒரு வழக்கும், ராஜஸ்தானில் 3 வழக்கும் புதிதாக சி.பி.அய். அதிகாரிகளால் பதிவு செய்யப் பட்டு உள்ளது. இவ்வாறு 5 புதிய வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
ஏற்கெனவே கல்வி அமைச் சகம் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் தாக்கல் செய்த பொதுவான வழக்குடன் சேர்த்து மொத்தம் 6 வழக்குகளை சி.பி.அய். அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
இதைத்தவிர மராட்டியத்தின் லாத்தூரில் நடந்த முறைகேடு தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அங்கு தனியார் பயிற்சி மய்யம் நடத்தி வந்த ஜலீல்கான் உமர்கான் பதான் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி ஆசிரியரான அவர்மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எனவே, இந்த வழக்கை யும் சி.பி.அய். கையில் எடுக்கும் என தெரிகிறது.