சென்னை, ஜூன் 25- இந்த கல்வியாண்டு முதல் கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது என்று சட்டப் பேரவையில் நேற்று (24.6.2024) உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் க.பொன்முடி வெளி யிட்டார்.
அதில், 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் அச்சு தொழில்நுட்பம் பயிலகத்தில் பொதி கட்டுதல், தோல் தொழில்நுட்ப பயிலகத்தில் காலணி, தோல் மற்றும் அலங்காரம், நெசவு தொழில்நுட்ப பயிலகத்தில் அலங்காரம், ஆடை, ஆயத்தஆடை உள்ளிட்ட 6 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகப் படுத்தப்படும்.
கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டடம் ரூ.21 கோடியில் கட்டப்படும். ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டடம் ரூ.14 கோடியில் கட்டப்படும்.
சென்னை தரமணியில் உள்ள மய்ய பலவகை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் சிறப்பு பயில கங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியை ஏற்படுத்தி தருவதற்காக, மய்ய பாலிடெக்னிக் கல்லூரி வளா கத்தில் (சிஅய்டி கேம்பஸ்) ரூ.21 கோடியில் 300 மாணவர்கள் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டப்படும்.
அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கென தனி ஓய்வறைக் கட்டடம் ரூ.8.55 கோடியில் கட்டப்படும்.
கோயம்புத்தூர், சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரவியல் ஆய்வகம் நிறுவப்படும்.
திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் நிறுவப்படும்.
காரைக்குடி மற்றும் போடி நாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரி களில் பொருட்களின் இணையம் ஆய்வகம் நிறுவப்படும்.
வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் நிறுவப்படும். GATE, IES, CAT, GMAT, GRE, IELTS, TOEFL உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 500இல் இருந்து 1,400 ஆக உயர்த்தப்படும். இதற்காக, கூடுதலாக ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப் படும்.
அரசு பொறியியல் மற்றும் பல வகை தொழில்நுட்பக் கல் லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம் பாட்டு பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீளுருவாக்கம் செய்யப்படும். திருச்சி அண்ணா அறிவியல் மய்யம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
2023-2024ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதிக மதிப் பெண்கள் பெற்றிருந்தும் பல மாண வர்களால் கல்லூரிகளில் சேர முடியவில்லை.
இந்த மாணவர்கள் வேறு கல்லூரி களிலும் சேர்ந்திட வாய்ப்பில்லாத நிலையில், இந்த கல்வியாண்டு வீணாகும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதமும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படுகிறது என மொத்தம் 15 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.