புதுடில்லி, ஜூன் 24- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவாலின் பிணை மனுவை ஏற்ற விசாரணை நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி பிணை வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.
டில்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்து, கெஜ்ரிவாலின் பிணையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து கடந்த 21ஆம் தேதி வெளியேறுவதாக இருந்த நிலையில், இந்த திடீர் உத்தரவு வந்தது.
எனவே, மதுபான கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட பிணை உத்தரவுக்கு டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (23.6.2024) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மோடியின் திறமையின்மையால்
முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு
காங்கிரஸ் விமர்சனம்
புதுடில்லி, ஜூன் 24- பிரதமர் மோடியின் திறமையின்மையால் இன்றைய முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளில் குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதுகலைலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டி ருப்பது பிரதமரின் திறமையின்மையை காட்டுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.