விவாகரத்து பெற்ற வழக்கில் குழந்தையின்
பிறந்தநாளை நீதிமன்ற வளாகத்தில்
கொண்டாட நீதிமன்றம் அனுமதி
சென்னை ஜூன் 24- சென்னையைச் சேர்ந்த இணையர் பிரேம்-மாலா. இவர்களுக்கு 4 வயது மகள் உள்ளார். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து வாங்கினர்.
அந்த தீர்ப்பில், ‘குழந்தையை அதன் தந்தை, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3ஆம் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை குடும்பநல நீதிமன்ற வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பார்க்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது குழந்தையை பிரேம் பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாலா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.பிரசன்னா, ‘குடும்ப நல நீதிமன்ற உத்தரவை மாலா அமல்படுத்துவதில்லை. குழந்தையை பிரேம் பார்ப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. குழந்தைக்கு ஜூன் 24ஆம் தேதி பிறந்தநாள். அதனால், அந்த பிறந்தநாளில் பிரேம் கலந்துகொள்ள அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு மாலா தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குழந்தையின் பிறந்தநாளை மனுதாரர் மாலா, எதிர்மனுதாரர் பிரேம், தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி என்று அனைத்து உற்றார், உறவினர்களுடன் சென்னை குடும்பநல நீதிமன்ற வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 24.6.2024 அன்று கொண்டாடலாம். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியை கவனிக்க தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். பின்னர், இந்த நிகழ்வு குறித்து 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.