சென்னை, ஜூன் 23– நகர்ப்புற பகுதிகளில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள், ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்ப ரசன் அறிவித்தார்.
வீட்டுவசதி துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப் பேரவையில் 21.6.2024 அன்று நடந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு களின் சீரமைப்புப் பணிகள் ரூ.70 கோடியில் மேற்கொள்ளப்படும். நகர்ப்புற பகுதிகளில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள் தாமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின்கீழ், மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகளில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நாவலூர் திட்டப் பகுதியில் ரூ.1.25 கோடியில் விளையாட்டுத் திடல் அமைக்கப்படும். பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதியில் ரூ.1 கோடியில் தொழிற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும்.
வாரிய திட்டப் பகுதியில் வசிக்கும் மகளிர் மேம்பாட்டுக்காக 2 ஆயிரம் மகளிருக்கு சிறப்புசுய தொழில் பயிற்சி வழங்கப்படும். ஈரோடு மாவட்டம் நல்லக்கவுண்டன் பாளையம் திட்டப் பகுதியில் ரூ.1 கோடியில் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். வாரிய திட்டப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
– இவ்வாறு அவர் தெரிவித்தார்.