அய்தராபாத், ஜூன் 22 அய்தராபாத்தை சேர்ந்தவர் பிரகலாத் ரெட்டி (32). இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த சுனிதா (27)என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரகலாத் அய்தராபாத்தில் சிறு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் மீண்டும் சுனிதா கர்ப்பம் தரித்தார். 9 மாத கர்ப்பிணியான சுனிதாவை கடந்த 8-ஆம் தேதி, கணவர் பிரகலாத் இரு சக்கர வாகனத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓரிரு நாட்களில் பிரசவம் ஆகிவிடும், பிரசவ வலி வந்தால் உடனே அaழைத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியில் இவர்களின் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் ஒரு ஆட்டோ வேகமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுனிதாவுக்கு அதிகமாக அடிபட்டு ரத்தப் போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுனிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதை அறிந்து, உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அழகான பெண் சிசுவை வெளியே எடுத்தனர். பின்னர் சுனிதா மூளைச்சாவு அடைந்த விடயத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்து, உடல் உறுப்பு கொடை குறித்தும் விளக்கினர்.
இறந்தும் சுனிதா உயிர் வாழ்வார் என கூறியதை கணவரும்உறவினர்களும் ஏற்றுக் கொண்டனர். பிறகு சுனிதாவின் கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்களை அகற்றி,அவற்றை உயிருக்கு போராடும் மூவருக்கு பொருத்தினர். சுனிதா மரணம் அடைந்தாலும், ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்ததுடன், மேலும் 2 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார். சுனிதாவின் குடும்பத்தினருக்கு உடல் உறுப்பு கொடை பெற்றவர்களின் குடும்பத்தினர் நெகழ்ச்சியுடன் நன்றி கூறினர்.