புதுடில்லி, ஜூன் 22 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஆய்வுப் படிப்பு உதவித் தொகைக்கான தகுதியை தீர்மானிக்க யுஜிசி – நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்தஆண்டு யுஜிசி – நெட் தேர்வு கடந்த 18.6.2024 அன்று நடைபெற்றது.
இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தேசிய சைபர் கிரைம் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள் இத்தேர்வை ஒன்றிய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 16.6.2024 அன்று அதாவது தேர்வு நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன் யுஜிசி-நெட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும் டார்க் வெப் மற்றும் என்கிரிப்ட் செய்யப்பட்ட சமூக வலைதளங்களில் ரூ.6 லட்சத்துக்கு வினாத் தாள் விற்பனை செய்யப்பட்டதாகவும் சிபிஅய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிபிஅய் வட்டாரங்கள் மேலும் கூறும்போது, “வினாத் தாள் எங்கிருந்து கசிந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இது தொடர்பாக என்டிஏ உடன் சிபிஅய் இணைந்து செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள பயிற்சி மய்யங்களின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. வினாத் தாள் கசிவின் பின்னணியில் பெரிய அளவிலான மோசடி இருப்பதாக நம்பப்படுகிறது. வினாத் தாள் தயாரித்தவர்கள் உட்பட தேர்வு நடத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்தன.
லக்னோ பல்கலைக்கழக மாணவர்கள் கூறும்போது, “கசிந்த ஒரு வினாத்தாள் வெறும் ரூ.5 ஆயிரத்துக்கு கிடைத்தது. ஜூன் 16 முதல் இந்த வினாத்தாள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்பட்டது” என்றுதெரிவித்தனர். இளநிலை மருத்துவப் படிப்புக்கான இந்த ஆண்டுக்கான நீட் தேர்விலும் வினாத் தாள்கசிவு, கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக என்டிஏ சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.