3.04 கோடிக்கும் அதிகமான வீடுகள் வெறும் காகிதத்தில்தான்!
டில்லியில் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களில் 80 விழுக்காட்டினர் வீடற்றவர்கள்
புதுடில்லி, ஜூன் 22- தேர்தல் அறிக்கையின்படி கடந்த 2015 ஜூன் 25 அன்று நாட்டின் ஒவ்வொரு ஏழைகளுக்கும் வீடு என்ற பெயரில் ‘‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’’ என்ற பெயரில் ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் 3.04 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ள தாக மோடி அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்து, 18ஆவது மக்களவை தேர்தலுக்கான அரசியல் ஆதாய பிரச்சாரப் பொருளாக மாற்றிக் கொண்டது. ஆனால் எந்த மாநிலத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டன என்ற விவரத்தை மோடி அரசு உறுதியாக கூறவில்லை.
இந்நிலையில், வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்பு விவகாரத்தில் மோடி அரசின் ‘‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’’ திட்டத்தின் தன்மை விமர்சனப் பொருளாக மாறியுள்ளது.
நாட்டின் மிதவெப்ப மண்டல பகுதியான டில்லியில் கடந்த 2 மாத காலமாக வெயில் புரட்டியெடுத்து வருகிறது. வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாத நிலையில், ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை வெப்ப அலையின் தாக்கத்தால் 192 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “தேசத்தின் தலைநகர் டில்லியில் வெப்ப அலை க்கு பலியானோரில் 80 சதவீதத்தினர் வீடற்றவர்கள்” என என்ஜிஓ அமைப்பு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தத் தரவு உள்துறை அமைச்ச கத்தின் ஒருங்கிணைந்த மண்டல நெட் வொர்க்கிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், “வீடற்ற மற்றும் வீட்டு உரிமைகளுக்கான தேசிய மன்றம்” என்ற அரசு சாரா அமைப்பின் உறுப்பினரான சுனில் குமார் அலேடியா என்பவரால் விவரம் அட்டவணைப்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பின் ஆய்வில், “டில்லியில் வெப்ப அலையால் இறந்தவர்களின் உரிமை கோரப்ப டாத உடல்களில் 80 சதவீதம் பேர் வீடற்றவர்கள்” என்றும் கண்டறி யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையின்படி பார்த்தால் அதிக நகர்ப்புற அமைப்பை கொண்டுள்ள நாட்டின் தலைநகர் டில்லியிலும் வீடற்ற மக்களின் எண்ணிக்கை குறையாமல் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதை வெப்ப அலை அம்பலப்படுத்தியுள்ளது.
வீடற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களில் 80விழுக்காட்டினர் வீடற்றவர்கள் என்று ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வறிக்கை மூலம் மோடி அரசின் ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தில் டில்லியில் கொஞ்சம்கூட மோடி அரசு வீடு கட்டித் தரவில்லையா? 9 ஆண்டுகளில் 3.04 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், டில்லியில் எத்தனை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன? நாடு முழுவதும் 3.04 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டும் ஏன் டில்லி மக்கள் வீடற்றவர்களாக வெப்ப அலையில் சிக்கி அனாதைப் பிணங்களாக சாலையில் கிடப்பது ஏன்? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
வடமாநிலங்களில் நிலவரம் மோசமாக இருக்கலாம்
70விழுக்காட்டளவில் நகர்ப்புற அமைப்பை கொண்ட டில்லியின் நிலைமையே இப்படி என்றால், பின்தங்கிய நிலையில் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வீடற்றவர்களின் நிலைமை படுமோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் வாழ்வு நிலைமையை கணக்கீடு செய்தால் மோடி அரசின் ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் உண்மைத் தன்மை தெரியவரும். வெப்ப அலை காரணமாக வட மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-அய் கடந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.