தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்
தற்காலிக மக்களவைத் தலைவராக கொட்டிக்குன்னில் சுரேைஷ புறக்கணிப்பதா?
திருவனந்தபுரம், ஜூன் 22 சங்பரிவாரின் அப்பட்டமான ஜாதி அரசியல் அமைப்புப்படி மூத்த உறுப்பினரான தாழ்த்தப்பட்டவகுப்பைச் சேர்ந்தவரை தற்காலிக மக்களவைத் தலைவராக்காமல், வேறு ஒருவரை அவைத்தலைவராக்கியது அவைத்தலைவர் நியமனத்தில் அப்பட்டமான ஜாதி வெறி அரசியல் என்று மோடி அரசை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியுள்ளார்.
17 ஆவது மக்களவை முழுவதும், வழக்கமாக எதிர்க்கட்சிக்குச் செல்லும் மக்களவைத் துணைத்தலைவர் பதவியை, வேண்டுமென்றே நிரப்பப்படாமல் இருந்ததை போன்று இப்பொழுதும் பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக பினராயி விஜயன் சுட்டிக்காட்டினார்.
மக்களவையின் இடைக்காலத் தலைவராக ஒடிசாவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று (21.6.2024) கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக கேரள முதலமைச்சர் வெளியிட்டுள்ள அக்கண்டன அறிக்கையில், ‘‘தற்காலிக மக்களவைத் தலைவர் நியமனம் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறுவதாக உள்ளது. விதிகளின் படி நீண்ட காலம் மக்களவை உறுப்பினராக இருந்த மாவேலிக்கரை நாடாளுமன்ற உறுப்பினர், தலித் சமூகத்தைச் சேர்ந்த கொட்டிகுன்னில் சுரேஷை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும்.
நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் அவரை ஏன் பாஜக அரசு புறக்கணித்தது என்பதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த முடிவின் பின்னணியில் சங்பரிவாரின் அப்பட்டமான ஜாதி அரசியல் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை சாந்தப்படுத்தவே மோடி அரசு ஜாதி அரசியலில் இறங்கி உள்ளது மிகவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரசின் கொட்டிக்குன்னில் சுரேஷுக்குப் பதிலாக மக்களவை தற்காலிக தலைவர் பதவிக்கு பிஜு ஜனதா தளத்திலிருந்து சமீபத்தில் பாஜகவிற்குத் தாவிய மஹ்தாப் நியமிக்கப்பட்டது தவறு மற்றும் விதிமீறல் ஆகும்
தற்போதுள்ள மக்களவையில் மிகவும் மூத்த உறுப்பினர் கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கொட்டிக்குன்னில் சுரேஷ் ஆகும். இவர் ஏழு முறை உறுப்பினராக இருந்துள்ளார். கட்சி தாவிய மஹ்தாரப் 6 முறை மட்டுமே உறுப்பினராக இருந்துள்ளார்” என்று கேரள முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
இது குறித்து ஜெயராம் ரமேஷ் கூறியதாவது: ‘‘மக்களவையில் ஜாதி அரசியல் நடப்பது மிகவும் மோசமான எடுத்துக்காட்டு ஆகும். மூத்த உறுப்பினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒருவரை தற்காலிக அவைத்தலைவராக்குவது வருத்தத்திற்குறிய ஒன்று” என்று கூறினார்.