எவ்வளவு வேதனை பாருங்கள்! 1971 ஆம் ஆண்டு திருமணம் நடைபெறுகிறது. 1978 இல் இணையர் இறந்து விடுகிறார். குழந்தைகள் முறையே 4 வயது, 2 வயது மற்றும் 7 மாதக் குழந்தை ஒன்று! மறைந்த இணையருக்கு வயது 33, அந்த அம்மாவின் வயது 24. மனிதகுலத்திற்கே இதுபோன்ற இழப்புகள் பொதுவானது என்றாலும், அதற்குப் பிறகான அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் எனக் கணிக்க முடியாது! இதுபோன்ற சூழலில் நம் இயக்க மகளிர் எப்படி கடந்து வருகின்றனர் என்பதை
இந்நேர்காணலில் காண்போம்!
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலோடு, இயக்க மகளிர் சந்திப்பு நடந்து வருகிறது! அந்த வகையில் இது 19 ஆவது சந்திப்பாகும்! அதாவது 19 ஆவது நேர்காணல்! ஒரு சிலரின் சொந்த வாழ்க்கையைக் கேட்கும் போது நெஞ்சம் கனத்து விடுகிறது! தொடர்ந்து மகளிர் சந்திப்புகளைப் படிப்பவர்கள் இதனை அறியலாம்!
ஒரு அம்மாவை நேர்காணல் செய்தோம். “தங்கள் இணையர் என்ன செய்கிறார்?”, எனக் கேட்டோம். அவர் மறைந்துவிட்டார் என்றார்கள். எத்தனைப் பிள்ளைகள் என்றோம்? மூன்று பிள்ளைகள், அவர்களும் உயிருடன் இல்லை என்றார்கள். கேட்டதும் பெரும் அதிர்ச்சி! பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை! கணவர் மற்றும் 3 குழந்தைகளை இழந்த பின்னரும், அந்த அம்மா இந்தச் சமூகம் பயன் பட வாழ்ந்து வருகிறார். ஆம்! கருப்புடை அணிந்து கலந்துரையாடல் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், குடும்பச் சந்திப்புகள் என ஒன்றுவிடாமல் பங்கேற்கிறார்! இந்த இயக்கமும், தோழர்களும், “எனது அண்ணன் கி.வீரமணி” அவர்களும் துணையாய் இருப்பதால், இன்னமும் நம்பிக்கையுடன் உயிர் வாழ்கிறேன் என்கிறார்! அதேவேளையில் சிறப்பாகவும், முன்மாதிரி மனிதராகவும் ஜொலித்து வருகிறார் அந்த மண்ணச்சநல்லூர் அம்மா!
இப்படியான புரட்சிகரமான மகளிரைக் கொண்டதுதான் இந்தத் திராவிடர் கழகம்! இப்படியான புரட்சிகரமான மகளிரை உருவாக்குவதுதான் பெரியார் கொள்கை! அந்த வகையில் இந்த வாரம் நெடுவாக்கோட்டை கு.ஜெயமணி அம்மாவைச் சந்தித்தோம்!
அம்மா வணக்கம்!
தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் ஜெயமணி. வயது 71 ஆகிறது. நான் பிறந்த ஊர் தெலுங்கன் குடிகாடு. 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். பெற்றோர் பெயர் ஜோதிகிருஷ்ணன் – கமலம். எனது தந்தையார் “மணியார் பட்டா” என்கிற பதவியில் இருந்தவர். பட்டா இடங்கள் ஏராளம் இருப்பவர்கள் இந்தப் பொறுப்பில் அமர்த்தப்படுவார்கள். சுருக்கமாக இதனை “மணியார்” என்று அழைப்பார்கள். இதுவே எம்ஜிஆர் ஆட்சியில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) எனும் பதவியாக மாறியது. பொதுவாக மணியார் பதவியில் இருப்பவர்கள், அவர்களுக்கு இடையேதான் திருமணம் செய்து கொள்வார்கள்.
உங்கள் திருமண வாழ்க்கைக்
குறித்துக் கூறுங்கள்?
எனது தந்தையார் ஆன்மீகவாதியாக இருந்தாலும், திராவிட இயக்கச் சிந்தனை கொண்டவர். அந்த வகையில் திராவிடர் கழகத்தின் நெடுவாக்கோட்டை கிளைக் கழகத் தலைவராக இருந்த அய்யா பழனிவேல் அவர்களின் மகன் குழந்தைவேலு அவர்களை எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்! இணையர் மத்தியக் கூட்டுறவு வங்கியில் வேலை செய்தார்கள். மாமனார் வீட்டில் அனைவருமே பெரியார் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள். தந்தை பெரியார் அவர்கள் அஞ்சல் அட்டையில் எங்களுக்குத் திருமண வாழ்த்து அனுப்பி இருந்தார்கள்!எனினும் வாரம்தோறும் கோயிலுக்குப் போகும் பழக்கம் என்னிடம் இருந்தது.
திருமணத்திற்குப் பிறகும் அந்த எண்ணம் நீடித்தது. எனது இணையர் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து அவ்வப்போது எடுத்துக் கூறுவார்! பிறகு வீட்டிற்கு வரும் விடுதலை நாளிதழை வாசிக்கத் தொடங்கினேன். பிறகு நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்குச் சென்றேன். நாளைடைவில் நானும் நாத்திகராக மாறினேன்!
உங்களுக்கு எத்தனைப் பிள்ளைகள்,
அவர்கள் குறித்துக் கூறுங்கள்?
1971ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற போது, எனது வயது 18. சரியாக ஆறரை ஆண்டுகளில் எனது இணையர் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார்! அதுசமயம் 4 மற்றும் 2 வயதில் இரண்டு பிள்ளைகளும், 7 மாதக் குழந்தை ஒன்றும் இருந்தார்கள். திருமணமான ஆறரை ஆண்டுகளிலேயே கணவர் இறப்பும், கையில் 3 குழந்தைகளும் இருந்த நிலையில் உலகமே இருண்டு, கலங்கிப் போனேன்!
பிறகு எப்படி மீண்டு வந்தீர்கள்?
இணையரோடு “வாழ”த் தொடங்கும் முன்னரே, அதுவும் சரியாகப் புரிந்துக் கொள்ளும் முன்னரே இழப்பைச் சந்தித்துவிட்டேன். இச்சூழலில் பிள்ளைகளோடு பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். மீள்வதற்குக் காலங்கள் தேவைப்பட்டது. பிள்ளைகள் கவுதமன், இலெனின், இளந்திராவிடன் மூவரையும் தந்தை வீட்டில் இருந்து படிக்க வைத்தேன். நான் தையல் வேலைக் கற்றுக் கொண்டேன். எனது இணையர் மத்தியக் கூட்டுறவு வங்கியில் பார்த்த வேலையை, என் பிள்ளைகளில் ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன். அப்போது எனது பிள்ளை ஒன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார். பின்னாளில், பெரும் போராட்டத்திற்குப் பிறகு, மூத்த பிள்ளை கவுதமனுக்கு அந்த வேலையை வாங்கினோம்!
பெற்றோர் இல்லத்தில் இருந்து, இணையர் வீட்டிற்கு எப்போது திரும்பினீர்கள்?
இடையிடையே நெடுவாக்கோட்டைக்கு வந்து போனாலும், 1982 ஆம் ஆண்டு பிள்ளைகளோடு மாமனார் இல்லம் வந்தேன். மாமனார் அவர்கள் சிறந்த இயக்கவாதி, நல்ல நிர்வாகத் திறன் கொண்டவர்கள். 1985 ஆம் ஆண்டு அவரும் மறைந்துவிட்டார். நான் இயல்பிலேயே சற்றுத் துணிச்சலோடு இருப்பவர். அத்தோடு மாமனார் குடும்பம் திராவிடர் கழகத்தில் இருந்ததால், மேலும் பக்குவமான சூழலை விரைவிலேயே பெற்றேன். விவசாய வேலைகளை மேற்பார்வையிட அடிக்கடி வயலுக்குச் செல்வேன். சில நேரங்களில் இரவு 10 மணியாகிவிடும். வயல் வெளியில் இருந்து, தனியாகவே வீட்டிற்கு வருவேன்! இப்படியான சூழலில் தான் என் பிள்ளைகளையும் வளர்த்து உருவாக்கினேன்! எங்கள் குடும்பத்திற்குப் பக்கபலமாய் இருந்து, பிள்ளைகளை உருவாக்கத் துணையாய் இருந்தவர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள். அவருக்கும் நெடுவாக்கோட்டை தான் சொந்த ஊர். அதேபோல இக்கிராமத்தில் வசித்த வெங்கடாசலம், விஜயா, குப்புச்சாமி, குஞ்சம்மாள், முருகையன் ஆகியோரும் எங்களுக்குப் பல வகைகளில் உதவி செய்தனர்!
கணவர் இறந்த நிலையில், கிராமத்தில் இருப்பவர்கள் அதை எப்படி அணுகினார்கள்?
இளம் வயதிலேயே கணவரை இழந்ததால், கிராமமே கதறி அழுதது. எனினும் சிறிது நாட்களிலே “விதவை” எனும் பெயரால் என்னைப் புறக்கணித்தது. எந்த நிகழ்வுகளுக்கும் என்னை அழைக்க மாட்டார்கள். ஆனால் எனது பெற்றோர் என் முன்னிலையிலே அனைத்து நிகழ்ச்சிகளும் செய்வார்கள். அதைவிட இயக்கக் குடும்பங்களின் நிகழ்ச்சிகளில், எனக்கு முன்னுரிமைக் கொடுப்பார்கள். அதேபோன்று என் பிள்ளைகளும், மருமகள்களும் சிறப்பாக மரியாதை செய்வார்கள். எனினும் தொடக்கக் காலங்களில் நிறைய துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். எனது பையன் திருமணத்தில், “சோதனையைக் கடந்து சாதனைப் படைத்தவர் ஜெயமணி”, என ஆசிரியர் குறிப்பிட்டதை என்னால் மறக்கவே முடியாது!
பின்னாட்களில் உங்கள் கொள்கைப் பயணம் எப்படி இருந்தது?
வலி மிகுந்த வாழ்க்கையி லும் கொள்கை உணர்வை நான் இழக்கவில்லை. அதேபோல பிறந்தது முதற்கொண்டு, இன்று வரை என் பிள்ளைகளும் நாத்திகர்களாகவே வாழ்ந்தனர்! பிள்ளைகள் மூவருக்குமே சுயமரியாதைத் திருமணம்தான் செய்து வைத்தேன். முதல் திருமணத்தை ஆசிரியர் அவர் களும், இரண்டாவதை வி.கே.என்.கண்ணப்பன் அவர்களும், மூன்றாவதை சட்டமன்ற உறுப்பி னர் தங்கமுத்து அவர்களும் நடத்தி வைத்தார்கள்.
பொதுவாகவே நான் நூல்கள் நிறைய படிப்பேன். தொலைக்காட்சி பார்ப்பதைவிட, வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மு.வ, பெரியார், ஆசிரியர் நூல்கள் அதிகம் படித்துள்ளேன். வாழ்வியல் சிந்தனைகள் தவறாமல் படிப்பேன். வீட்டு வேலை தவிர்த்து, படிப்பதே எனது பொழுதுபோக்கு!
எங்கள் கிராமத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடந்தது. அதற்கு வந்த போது, துரை.சக்ரவர்த்தி அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார்கள். குடும்பத்தின் நெருங்கிய தோழரும் கூட! புதுக்கோட்டையில் எனது பிள்ளை கவுதமன் வீட்டை அவர்தான் திறந்து வைத்தார். எனது கணவர் மற்றும் பெற்றோர் மறைவிற்கு அடுத்து துரை.சக்ரவர்த்தி அவர்கள் இறப்பிற்குத் தான் நான் வாய்விட்டு அழுதேன்!
கிராமத்தில் இயக்கச் செயல்பாடுகள்
எப்படி இருந்தன?
சுற்று வட்டாரக் கிராமங்கள் முழுவதுமே திராவிடர் கழகம்தான்! ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெரியார் சிலை இருக்கும்! கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியால் மக்கள் வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடுகள் என முன்னேறிச் சென்றுவிட்டனர்! அந்தக் காலத்தில் பெரியார் பெருந்தொண்டர்கள் வாங்கிய ஒரு ஏக்கர் இடத்தில் தான், இன்றைக்கு அரசுப் பள்ளியும், பஞ்சாயத்து அலுவலகமும் செயற்பட்டு வருகிறது. அருகிலேயே பெரியார் படிப்பகமும் உள்ளது!
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்து, உங்கள் எண்ணவோட்டங்களைக் கூறுங்கள்?
இளம் வயதிலேயே என்னை “விதவை” என்று அழைத்தார்கள். நானும் யாருடனும் பேசாமல் ஒதுங்கியே இருந்தேன். ஆனால் ஆசிரியரை எங்காவது சந்தித்தால், அருகில் சென்று பேசி வருவேன். கனிவான பேச்சு, அன்பான வார்த்தைகள், பிள்ளைகளை நலம் விசாரிப்பது என என் தந்தையைப் போலவே ஆசிரியரை உணர்வேன்! ஒருமுறை வாக்களிக்கப் போயிருந்தேன்.
வாக்குச்சாவடி அருகே ஒருவர், “அம்மா! இந்தச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்”, என்றார். நான் பதில் சொல்வதற்கு முன்பே அருகில் இருந்த ஒருவர், “அவர்கள் எல்லாம் தி.க. தலைவர் யாருக்குச் சொல்கிறாரோ, அவர்களுக்குத் தான் வாக்களிப்பார்கள்”, என்றார். அதைக் கேட்க மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது!
பல நிலைகளைக் கடந்து, இன்றைக்கு என் பிள்ளைகள் அனைவரும் மகிழ்வோடு வாழ்கிறார்கள். பேரன், பேத்திகள் என நான்கு தலைமுறையாக இந்த இயக்கத்தில் தொடர்கிறோம்! ஒன்றிய மகளிரணி தலைவர், மத்தியக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புக்களில் இருந்து, தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறேன்”, என ஜெயமணி அவர்கள் கூறினார்!