சென்னை, ஆக. 27 சென்னை காவல்துறை ஆணை யாளர் உத்தரவின்பேரில், கடந்த ஒரு மாதத்தில் மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் இருந்த 86 நீதி மன்ற பிடிவாரன்ட் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை காவல், மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும், நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட குற்ற வாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் உத்தரவிட்டார்.
அதன்பேரில், கடந்த 17.7.2023 முதல் 16.8.2023 வரை மத்திய குற்றப்பிரிவின் சைபர் குற்றப்பிரிவு, வங்கி மோசடி, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி, நில மோசடி, போலி பாஸ்போர்ட், கந்துவட்டி, சீட்டு மோசடி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குகளில் தொடர்புடைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 86 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவின் 86 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 7 குற்றவாளிகளின் நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு கவனம் செலுத்தி, சிறப்பாக பணிபுரிந்து, நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றிய மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களை காவல் ஆணையாளர் சந்தீப் ராய்ரத்தோர் பாராட்டினார்.