பாஜக vs இந்தியா கூட்டணி

உத்தரப்பிரதேசத்தில் எந்தப் பிரிவினர் யாருக்கு வாக்களித்தனர்?

சஞ்சய் குமார்
இணை இயக்குநர், சிஎஸ்டிஎஸ்

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் ‘இந்தியா’ கூட்டணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்தக் கூட்டணி உயர் ஜாதிகளைத் தவிர எல்லா முக்கிய சமூக வர்க்கங்களிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 75 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகள் அய்ந்து இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.
75 இடங்களில் 33 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 2 இடங்களையும், அப்னா தளம் (சோனேவால்) ஓரிடத்தையும் வென்றன.

மறுபுறம் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது.
பொது அல்லது முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்த வாக்காளர்களான பார்ப்பனர்கள், ராஜபுத்திரர்கள், வைசியர்கள் பெரும்பாலும் பாஜகவை ஆதரித்தனர், அதே சமயம் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், பட்டியல் சாதியினர் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு முன்னுரிமை தந்தனர் என்று லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் அமைப்பின் தேர்தலுக்கு பிந்தைய கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
யார் யாருக்கு வாக்களித்தார்கள்?
ராஜபுத்திர வாக்காளர்களுக்கு பாஜக மீது அதிருப்தி இருப்பதாக வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் கூறப்பட்டது. ஆனால் அது ஆய்வு தரவுகளில் தெரியவில்லை.

பத்தில் ஒன்பது பேர் (சுமார் 90 சதவிகிதம்) பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
யாதவ்-முஸ்லிம் வாக்காளர்கள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தி ருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும் ஜாடவ் அல்லாத வர்களின் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளும் ‘இந்தியா’ கூட்டணிக்குக் கிடைத்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு முக்கியமாக வாக்க ளிக்கும் ஜாதவ் சமூகத்தினர் உட்பட எல்லா சமூக வகுப்பினரிடையேயும் அக்கட்சிக்கான ஆதரவு குறைந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் இழப்பு ‘இந்தியா’ கூட்டணிக்கு லாபகரமாக அமைந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் ‘இந்தியா’ கூட்டணிக்குச் சென்றன.

17 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது.
அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பின் விளைவு அடிமட்ட நிலையில் உள்ள அவர்களது தொண்டர்களை சென்றடைந்தது. இது அவர்கள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் பிரதிபலித்தது.
பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மை யினரால் பாஜகவுக்குப் பின்னடைவு
பாஜக அதன் சமூக பொறியியலுக்குப் பெயர் பெற்றது. ஆனால் அகிலேஷ் யாதவின் ’பிடிஏ மாற்று சமூக பொறியியல் சூத்திரம்’ காரணமாக அது தோற்கடிக்கப்பட்டது.

பிடிஏ என்பதன் அர்த்தத்தை அகிலேஷ் தனது அறிக்கைகளில் விளக்குகிறார். “பிடிஏ என்றால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்.”
இதன் கீழ் அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளர்களுக்குப் பெரும்பாலான இடங்களை வழங்கினார்.
சமாஜ்வாதி கட்சி, ’எம்.ஒய்’ (முஸ்லிம் மற்றும் யாதவ்) கட்சி என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் யாதவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் குறைவான இடங்களை அவர் வழங்கினார்.
32 ஓபிசி, 16 தாழ்த்தப்பட்ட சமூக, 10 உயர் ஜாதி வேட்பாளர்கள் மற்றும் 4 முஸ்லிம்களுக்கு சமாஜ்வாதி கட்சி வாய்ப்பு வழங்கியது.
அரசியல் சாசனத்தை மாற்றுவது குறித்த பாஜக தலைவர்கள் சிலரின் அறிக்கைகள், ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தின.
400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் இலக்கால் அவர்களின் அச்சம் மேலும் அதிகரித்தது.
பாஜக அரசமைப்பை மாற்ற விரும்புகிறது மற்றும் ஓபிசி உடன் கூடவே எஸ்.சி/எஸ்.டி இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை பாரதிய ஜனதாவால் முறியடிக்க முடியவில்லை.

நன்றி: பிபிசி தமிழ் இணையம், 18.6.2024

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *