பூமியின் உள் மய்யமானது கோளின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்வதாக புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டு உள்ளது.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் (யுஎஸ்சி) விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் பூமியின் உள் மய்யமானது கோளின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு கோள் இயக்கவியல் பற்றிய முக்கியமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பூமியின் காந்தப்புலத்தின் நிலைத்தன்மை, இரவு – பகல் மாற்றம், நாட்கள் நகரும் வேகம் உள்ளிட்ட பல விடயங்களில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்த ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.
மெதுவாக சுழலும் உள்வட்டம்:
வெளியிடப்பட்ட ஆய்வுப்படி, 2010ஆம் ஆண்டில் பூமியின் உள் மய்யமானது அதன் வேகத்தைக் குறைக்கத் தொடங்கியது என்று கூறப்பட்டு உள்ளது. வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து.. தற்போது மேல்மட்டத்தின் வேகத்தை விட குறைவாகிவிட்டது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுமார் பல ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக பூமியின் மேல் மட்டத்தை விட மெதுவாக நகர்கிறது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், உட்புற மய்யமானது – அதிக வெப்பமான, அதிக அடர்த்தியான இரும்பு மற்றும் நிக்கல் மூலம் உருவாக்கப்பட்டது. உட்புற மய்யமானது நமது கால்களுக்குக் கீழே 4,800 கிமீ தொலைவில் பூமியின் மய்யத்தில் அமைந்துள்ளது.
எப்படி கண்டுபிடித்தனர்?
ஆராய்ச்சி யாளர் ஜான் விடேல் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த கண்டு பிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.
தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி 1991 மற்றும் 2023க்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்களை அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
1971 மற்றும் 1974க்கு இடையில் நடத்தப் பட்ட சோவியத் அணுசக்தி சோதனைகள் மற்றும் உள் மய்யத்தின் பிற ஆய்வுகளின் முடிவுகள், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அணுசக்தி சோதனைகளின் தரவுகளையும் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பூமியின் உட்கரு வேகம் குறைய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாகி பல பத்தாண்டுகளில் முதல்முறையாக உள் மய்யத்தின் வேகம் குறைந்துவிட்டது.
மற்ற விஞ்ஞானிகள் சமீபத்தில் இதே போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளனர். அவர்களின் ஆய்வுகளிலும் இதே முடிவுகள் வந்துள்ளது.
எப்படி குறைந்தது?
உள் மய்யத்தின் சுழற்சியின் வேகம் குறைவது, சுற்றியுள்ள திரவ வெளிப்புற மய்யத்தின் இயக்கத்தால்தான் என்று கூறப்படுகிறது. திரவ வெளிப்புற மய்யம் உராய்வை ஏற்படுத்தி உள் மய்யத்தின் சுழற்சியின் வேகத்தை குறைத்துள்ளது.
இது பூமியின் காந்தப்புலத்தை பாதிக்கிறது. மேலும் பாறைகள் நிறைந்த மேலோட்டத்தில் உள்ள அடர்த்தியான பகுதிகள் கடுமையான உராய்வை ஏற்படுத்துகிறது.
இதுதான் உள் மய்யத்தின் சுழற்சியின் வேகம் குறையக் காரணமாக மாறி உள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. இது இறுதியில் முழுக் கோளின் சுழற்சியையும் மாற்றி, நமது நாள்களை நீட்டிக்கும். சுமார் பல ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக பூமியின் மேல் மட்டத்தை விட மெதுவாக நகர்கிறது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இனிமேல் இரவு- பகல் நேரங்கள் அதிகரிக்கலாம். நாள்களின் நேரம் நீடிக்கலாம் என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக 24 மணி நேரம் ஒரு நாளுக்கு என்பது இல்லாமல்.. நாளின் அளவு நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.