நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் அப்துல்லா தடுத்து நிறுத்தம்!

Viduthalai
3 Min Read

மன்னிப்பு கோரியது சி.அய். எஸ்.எஃப்.

புதுடில்லி, ஜூன் 20- நாடாளுமன்றத்துக்குள் சென்ற மாநிலங்களவை திமுக நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் முகமது அப்துல்லாவை ஒன்றிய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஅய்எஸ்எஃப்) தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவரிடம் சிஅய்எஸ்எஃப் அதிகாரி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவரும் மாநிலங்களவை திமுக உறுப்பினருமான எம்.முகமது அப்துல்லா கடந்த 18.6.2024 அன்று பிற்பகலில் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் சென்றார்.

தடுத்து நிறுத்தம்
அவர் நாடாளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக மின்கல வாகனத்தில் தால்கடோரா சாலை நுழைவு வாயில் வழியாக (டிகேஆர் – 2) செல்லும்போது, பூம் தடுப்புக்கு (மின்னணு முறையில் மேலே கீழே இயங்கும் தடுப்பு) முன்பாக ஒன்றிய தொழிலகப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, அவர் அடையாள அட்டையைக் காட்டி னார்.

புகார் கடிதம்
இந்த நிகழ்வு குறித்து குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு முகமது அப்துல்லா எழுதிய புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நாடாளுமன்றத்துக்கு நான் செல்லும்போது சிஅய்எஸ்எஃப் காவலர்கள் என்னை தடுத்துக் கேள்வி கேட்டனர். மக்களையும், தமிழ்நாடு நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இடமான நாடாளுமன்றத்துக்கு நான் சென்றதன் நோக்கம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பிய சிஅய்எஸ்எஃப் வீரர்களின் நடத்தையால் நான் திகைப்படைந்தேன்.
நாடாளுமன்றத்தில் முன்பு நாடாளு மன்ற பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஸ்) பொறுப்பில் இருந்தபோது இதுபோன்று தவறான நடத்தைகள் ஏற்பட்டதில்லை.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்றாலும், அதிகாரபூர்வமான நிகழ்ச்சிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் செல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் தவறான நடத்தையை மேற்கொண்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
-இவ்வாறு கடிதத்தில் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தின் நகலை மாநிலங்களவைச் செயலகத்துக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் முகமது அப்துல்லா அனுப்பினார். இதைத் தொடர்ந்து உடனடியாக மாநிலங்களவைச் செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட சிஅய்எஸ்எஃப் காவலர் விசாரிக்கப்பட்டார். மேலும், சிஅய்எஸ்எஃப் துணை கமாண்டன்ட் மணி பாரதியும், முகமது அப்துல்லாவை தொடர்புகொண்டு நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கோரினார்.

காங்கிரஸ், திரிணாமூல் கண்டனம்
இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்கு நாடாளுமன்றத்தை அடிபணியச் செய்வது என்பது நமது அரசமைப்புச் சட்டத்தின்மீதான தாக்குதலாகும்.
தேசிய அரசியல் பிரதிநிதிகள் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்படைந்ததற்கு மத்தியில் அரசமைப்புச் சட்டத்தின்மீது ஒரு தலைப்பட்சமான தாக்குதல் நடந்துள்ளது. நாடாளுமன்றப் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அபகரித்ததை அனுமதிக்க முடியாது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்கேட் கோகுலே வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில்,
நாடாளுமன்றம் சென்ற எம்.எம்.அப்துல்லாவை சிஅய்எஸ்எஃப் வீரர்கள் தடுத்து நிறுத்தி எதற்காக உள்ளே செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினரை ஏன் நாடாளுமன்றம் செல்கிறீர்கள் என கேட்டது. திமுக நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

நாடாளுமன்றம் செல்வதற்கு அனைத்து உரிமைகளும் உறுப்பினருக்கு உள்ளது. இந்தியா கூட்டணி நாடாளு மன்ற உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே நாடாளு மன்ற பாதுகாப்பு சிஅய்எஸ்எஃப்-க்கு மாற்றப்பட்டதா? நாடாளுமன்றம் என்பது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிப்பட்ட சொத்து அல்ல. நாடாளு மன்ற உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தி விசாரிப்பதற்கு மோடி, அமித் ஷாவின் தனிப்பட்ட சொத்து அல்ல நாடாளுமன்றம். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா எதற்காக தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது பற்றி சிஅய்எஸ்எஃப் இயக்குநர் பதில் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினரைத் தடுத்து நிறுத்திய சிஅய்எஸ்எஃப் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

பின்னணி
நாடாளுமன்றத்துக்கு வெளியே சிஆர்பிஎஃப் படையினரும், உள்ளே பிஎஸ்எஸ் என்கிற நாடாளுமன்றப் பாதுகாப்பு சேவைப் பிரிவும் (டில்லி காவல்துறையிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்) பாதுகாப்பில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், புதியவர்களை தங்கள் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் அடையாளம் காணக்கூடியவர்கள் இவர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *