சென்னை, ஜூன் 20- ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்குதேவையில்லை என வலியுறுத்திதி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னையில் வருகிற 24.6.2024 ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
‘நீட்’ தேர்வில் குளறுபடிகள்
தி.மு.க. மாணவர் அணி செய லாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘நீட்’ தேர்வு என்பது ஏழை- எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி படிக்கவிடாமல் ஓரங்கட்ட பா.ஜனதா அரசால் கொண்டு வரப்பட்ட தேர்வு. ‘நீட்’ தேர்வு என்பதே ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை.
ஆள்மாறாட்டம் செய்வது, வினாத்தாள்களை திருடுவது, விடைத்தாள்களை மாற்றி வைப்பது. மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் தி.மு.க. ‘நீட்’ தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.
”நீட்’ தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. ‘நீட்’ தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத்தான் தி.மு.க. தலைவர் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வே தமிழ்நாட் டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியும், ‘நீட்’தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ‘நீட்’ எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், ‘நீட்’ தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் ஒன்றிய பா.ஜனதா அரசை கண்டித்தும் தி.மு.க. மாணவர் அணி சார்பில் வருகிற 24ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடைய செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.