தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூக மாணவர் களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டிய இந்த ஆண்டுக்கான பள்ளிப்பாடநூல்கள் லட்சக் கணக்கானவை பழைய காகிதம் வாங்குபவர்களுக்கு விற்கப்பட்டுள்ள கொடுமை உ.பி. பி.ஜே.பி. சாமியார் ஆட்சியில் நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் ஒரு பழைய காகிதம் சேகரிக்கும் குடோனுக்குள் டன் கணக்கில் கட்டுகள்கூட பிரிக்கப்படாத வகையில் நூல்கள் குவிக்கப்பட்டிருந்தன. என்ன நூல்கள் என்று அருகில் சென்று பார்த்தபோது, மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
உத்தரப்பிரதேசத்தின் பள்ளிக்கல்விப் பாடநூல்கள் – அனைத்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகப் பிரிவு மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்படவேண்டிய நூல்கள் – என்று நூலின் மேல் அச்சிடப்பட்டிருந்தது.
விளக்கம் கேட்ட போது, அம்மாநில கல்வி அதிகாரி, “நூல்களில் தவறுகள் உள்ளன; அவற்றை அகற்றிவிட்டு புதிய நூல்களுக்கு டெண்டர் கோரியுள்ளோம். அவ்வாறு அகற்றப்பட்ட நூல்கள்தான் பழைய பேப்பர் கடைக்குச் சென்றுள்ளன” என்று சர்வ சாதாரணமாகக் கூறியுள்ளார்.
அது என்ன, சாமானிய மக்களின் பிள்ளைகள் மட்டும் பயன்படுத்தும் பாடநூல்களில் மட்டுமே தவறு நேர்கிறது – என்று யாரும் கேள்வி கேட்பாரில்லை.
மனுதர்மம் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக் காதே என்று கூறுகிறது, உத்தரப்பிரதேச சாமியார் அரசு அதை அப்படியே கடைப்பிடிக்கிறது.
உ.பி. முதல் அமைச்சர் ஆதித்யநாத் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு வருகிறார் என்றால், அதற்கு முதல் நாளே அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் சென்று ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சோப்பு, பவுடர், வாசனைத் திரவியங்களை வழங்குவார்கள்.
எதற்குத் தெரியுமா? தாழ்த்தப்பட்டவர்கள் என்றால், அசிங்கமானவர்கள், குளிக்காதவர்கள், கெட்ட வாடை வீசும் என்ற உயர்ஜாதி ஆதிக்கக் கொழுப்பு எண்ணம் தான் இதற்குக் காரணம்.
அம்மக்களின் கல்வி நிலையோ, அதல பாதாளத்தில் கிடக்கிறது. பிஜேபி அரசுக்கு மனிதர்கள் முக்கியமல்ல; மாடுகள், அதிலும் பசு மாடுகள்தான் முக்கியம். இரவு நேரங்களில் மாடுகள் ஓய்வு எடுக்க பள்ளிக்கூடங்கள் தான் பஞ்சு மெத்தை!
மாயாவதி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்கி மரியாதையை உயர்த்திக் காட்டினார் கான்சிராம், அவர் ஏற்படுத்திய கட்சி – பகுஜன் சமாஜ் கட்சி.
அதாவது – வெகு மக்களுக்கான கட்சி! ஒடுக்கப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும்தான் நியாயமாக இந்நாட்டின் பெரும்பான் மையினர் – இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் கையில் தான் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக சமத்துவப்பாதை அவருக்கானது.
அந்த வகையில், மாயாவதியை முதல் அமைச்ச ராக்கிக் காட்டினார் – அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட வில்லை என்பது வேதனைக்குரியது.
இப்பொழுதுகூட மாயாவதி எடுக்கும் அரசியல் நிலைப்பாடு உயர்ஜாதி பார்ப்பனீய ஆதிக்கக் கட்சியான பா.ஜ.க.வுக்குச் சாதகமானதுதானே!
இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பாடப் புத்தகங்கள் பழைய பேப்பர் வியாபாரிக்குச் செல்லுவதில் ஆச்சரியமென்ன?
வெட்கக் கேடு!
விழிப்புணர்வு இல்லை எனின் வீழ்ச்சி – வீழ்ச்சியே!