கங்கை கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்ட சோழபுரம் இடையில் உள்பகுதியில் உள்ள ஒரு கிராமம் உட்கோட்டை என்பது. அதில் ஒரு குடும்பத்தில் உள்ள 54 வயதான ஒருவர் – ‘தாத்தாவாகி’ இரண்டு பேரப் பிள்ளைகளோடு மகிழவேண்டிய வயது முதிர்ந்த பருவத்தில். ஜோதிடம் மற்றும் மூடநம்பிக்கை, கிரக பலன் போன்றவற்றை நம்பி, பாச மழை பொழிந்து, பிறந்த பேரனைக் கொஞ்சி மகிழவேண்டியதற்குப் பதிலாக, தனக்கு இந்தப் பேரக் குழந்தையால் துன்பம், தொல்லைகளே வரும் என்று ஜோதிடர், மற்றவர்கள் கூறியதை நம்பி, மன உளைச்சலில் சில நாள்கள் இருந்து வந்துள்ளார்!
‘காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது’ என்ற பழமொழிக் கதைக்கொப்ப, இவருக்குக் கடன் கொடுத்தவர்கள், கொடுத்த கடனை வசூலிக்க நெருக்கடி கொடுத்ததை பேரக் குழந்தை பிறந்ததின் காரணமாகவே அது என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு, குடும்பத்தினர் எல்லோரும் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்தப் பச்சிளம் குழந்தையை எடுத்து வந்து, தன் வீட்டுத் தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டுத் தண்ணீரில் மூழ்கடித்து மூடியுள்ளார். (அக்குழந்தை மூச்சுத் திணறி இறந்துள்ளது). பிறகு குழந்தையைக் காணோம் என்று ஒப்பாரி வைத்து, அலறியும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்த நிலையில், இவரையும் விசாரித்து, உண்மையை அவரிடமிருந்து கறந்துள்ளனர்.
தான்தான் அந்தக் குழந்தையை, தனது ‘நம்பிக்கையினால் கொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்று ஒப்புக்கொண்டுள்ளார்!
Confession Statement–இல் தெரி வித்துள்ளார்!
என்னே கொடுமை! எவ்வளவு பாதகச் செயல்! மூடநம்பிக்கைகள் நல்ல மனிதர்களைக் கூட எப்படி கொலைகாரக் கொடூரன்களாக மாற்றி விடுகிறது பார்த்தீர்களா?
ஜோதிடப் புரட்டு நம்பிக்கைதான் பல மோசடிகளுக்குக் கார ணம். திருட்டு, புரட்டு, கொள்ளை, ஊழல் முதலியவற்றிற்கு மூல காரணங்களாக அமைந்துள்ளன. மீண்டும் மீண்டும் ஜோதிடத்தையே நம்பி மோசம் போகின்றனர். நாளே டுகள் பலவும் சிறிதும் வெட்கமின்றி ‘கரு வாடு விற்ற காசு நாறாது’ என்பதற்கொப்ப, குறுக்குவழியில் நாளும் ராசி பலன் போட்டு, தங்களது காசு பலனைப் பெருக்கிக் கொண்டு வாழுகின்றன.
ஒரு ஜோதிடர், ‘‘ஒரு பிரபல சினிமா சூப்பர் ஸ்டார், அரசியலுக்கு வந்து, அரசி யல் கட்சி தொடங்கி, தகதகவென்று ஜொலிக்கப் போகிறார்; எனது ஜோதிடம் பலிக்கும். இல்லையானால், நானே தொழில் செய்வதையே விட்டுவிடுவேன்’’ என்று ‘‘வீரசபதம்’’ போட்டுவிட்டு, வெட்கமில்லாமல், தொலைக்காட்சியில் பா.ஜ.க.வுக்காக வாதாடுகிறார். ஜோதிடத் தொழிலை விடவே இல்லை. (அந்த நடிகர் மிகவும் புத்திசாலித்தனமாக தன்னை அரசி யல் சூழலில் மாட்டிக் கொள்ளாமல் தப்ப வைத்துக்கொண்டு, பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்!) இவர்களைவிட கொடும் சமூக விரோதிகள் யார்?
குற்றம் புரிந்தவர்களைவிட, குற்றம் புரிய அவர்களைத் தூண்டியவர்கள்தானே முதலில் தண்டிக்கப்படவேண்டிய மிகப்பெரிய குற்றவாளிகள்.
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் அப்பகுதியில் ஒரு மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு விளக்கப் பிரச்சாரப் பரப்புரைக் கூட்டத்தினை மாநாடுபோல் நடத்த ஏற்பாடு செய்து, இனியாவது இப்படிப்பட்ட கொடுமைகள் நாட்டில் நிகழாமல் தடுக்கப்பட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட நல்ல பிரச்சாரத்தை விரைவி்ல் நடத்துவார்கள்!
ஒரு பக்கம் கோபம் இருந்தாலும், அந்த கொலையாளியிடமுள்ள மூடநம்பிக்கையைக் கண்டு பரிதாபமும்கூட – மனிதாபிமான அடிப்படையில் ஏற்படுகிறது என்றாலும், சட்டம் தன் கடமையை தயவு தாட்சண்யமின்றி செய்தே தீரவேண்டியது அவசரம், அவசியம்!
மற்றவர்களுக்கு அதுவே தக்க பாடமாகும்!