புதுடில்லி, ஜூன் 18- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுங்கள் அல்லது அவற்றை ஒழித்து விடுங்கள் என தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
மும்பை வட மேற்கு நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம், அந்த தொகு தியில் வெற்றிபெற்ற சிவசேனா ஷிண்டே பிரிவு மக்களவை உறுப்பினரின் உறவினர் ஒருவரின் அலைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இது மேலும் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நேற்று (17.6.2024) வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும் கைப்பற்றப்படும்போது, நாட்டு மக்களுக்கு வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஒரு கருப்புபெட்டியாக இருக்கிறது. எனவே, வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழித்து விட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்ட கருத்தை ராகுல் காந்தி ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.