கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – நான்கு பக்தர்கள் எங்கே?
பாட்னா, ஜூன் 17- கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் பக்தர்கள் நான்கு பேரைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
‘கங்கா தசரா’ விழா
கங்கை நதியை புனித நதியாகவும், கடவுளாகவும் இந்துக்கள் கூறிக்கொள்கின்றனர். அந்த வகையில் கங்கை நதி பூமிக்கு வந்த நாள் என்று கூறிக்கொண்டு, ‘கங்கா தசரா’ என வடமாநிலங்களில் கொண்டா டப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் பீகார் மற்றும் மேற்குவங்காளம் ஆகிய வடமாநிலங்களில் ‘கங்கா தசரா’ விழா கொண்டாடப்படுவது வழக்கமாம், அன்றைய நாளில் மக்கள் கங்கை நதியில் நீராடுவ துடன் அந்த நதிக்கு பல்வேறு வகையான பூஜைகளையும் செய்வார்களாம்.
வடமாநிலங்களில் நேற்று (16.6.2024) ‘கங்கா தசரா’ விழா கொண் டாடப்பட்டது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பக்தர்கள் கங்கையில் நீராடி அதை வழிபட்டனர்.
அந்தவகையில் பீகார் தலை நகர் பாட்னா அருகே உள்ள உமாநாத் கங்கை கரையில் புனிதநீராடிய பக்தர்கள் சிலர் பின்னர் அங்கிருந்து படகில் புறப்பட்டனர். படகில்பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட 17 பேர் இருந்துள்ளனர்.
கங்கை ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
அவர்களில் சிலர் தாமாகவே நீந்தி கரை சேர்ந்தனர்.
இன்னும் சிலரை உள்ளூர் மக்கள் போராடி மீட்டனர். இப்படி மொத்தம் 13 பேர் உயிர் தப்பினர்.
அதேசமயம் 4பேர் ஆற்றில் மூழ்கி காணாமல் போயினர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்புக் குழுவினர் நீச்சல் வீரர்களின் உதவியுடன் காணாமல் போன நான்கு பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் அவர்களின் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இருப்பினும் அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.