– தொகுப்பு: வீ. குமரேசன்
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்
மாநாட்டு வளாகத்தில் “பெரியார் பிஞ்சு” புத்தாக்க இணையதளத்தை புலவர் முரசு நெடுமாறன் வெளியிடுகிறார்
மாநாட்டின் நிறைவு நாளான 23.07.2023 அன்று ஆய்வுரைகள் சொற்பொழிவுகள் என பல அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 11-ஆம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற பாடுபட்ட, உறுதுணையாக இருந்த பெருமக்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என தமிழர் தலைவர் மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்தார்.
‘பெரியார் பிஞ்சு’ குழந்தைகளுக்கான மாத இதழின் புதிய வடிவமைப்பிலான இணையதள வெளியீடு
1998 ஆம் ஆண்டு முதல் ‘பெரியார் பிஞ்சு’ குழந்தைகளுக் கான மாத இதழ் (மொத்தம் 36 பக்கங்களும் வண்ணமிகு அச்சில்) தமிழர் தலைவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. இதழின் பொறுப்பாசிரியர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் அதனை குழந்தைகள் பார்க்க, படிக்க, இதழுக்கு படைக்க ஏதுவாக பல்வேறு கூறு களைக் கொண்டு வெளிவர துணை நிற்கிறார். இணைய தளத்திலும் வெளிவரும் ‘பெரியார் பிஞ்சு’ இதழ் உலகெங்கி லும் உள்ள தமிழ்க் குழந்தைகள், சிறார்கள் படித்து மகிழும் வகையில் வெளிவருகிறது. மாறிவரும் செய்தி தொழில் நுட்பத்தில் ‘பெரியார் பிஞ்சு’ இதழின் இணைய தளத்தை புத் தாக்கம் செய்து அதனை வெளியிடுகின்ற நிகழ்வு- மாநாட்டு புத்தக விற்பனை அரங்கில் நடைபெற்றது. தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் ‘பெரியார் பிஞ்சு’ இதழின் புத்தாக்க இணைய தளத்தினை குழந்தைகள் கவிஞர், முதுபெரும் புலவர் முரசு நெடுமாறன் அவர்கள் வெளியிட்டார்கள். அந்த இணைய தளத்தை அறிமுகப்படுத் தும் முகமாக அய்பேட், திறன்பேசி கருவிகளில் இணைய பக்கத்தை திறந்து சிங்கப்பூரைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு களிடம் வழங்கினார். சிங்கப்பூரிலிருந்து பெற்றோருடன் மாநாட்டிற்கு வந்திருந்த பெரியார் பிஞ்சு வாசகர் யாழ் பாரதி (வயது 10) நன்றி கூறினார். பெரியார் பிஞ்சு இதழில் தொடர்ந்து தனது படைப்புகளை வழங்கி வருபவரும் குழந்தைகளுக்கான எழுத்தாளருமான விழியன் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டு பேராசிரியர் டத்தோ சிறீ த. மாரிமுத்து
பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பேராசிரியர் டத்தோ சிறீ த. மாரிமுத்து அவர்கள்தான் 11ஆம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவராக செயலாற்றி அனைவ ரையும் ஒருங்கிணைத்தவர். உலகில் உள்ள பல நாடுகளி லிருந்தும் தமிழ் அறிஞர்களை, தமிழ் ஆர்வலர்களை, கணினி செயல் பாட்டாளர்களை வரவழைத்து மாநாட்டில் பெருந்திரள் பங்கேற்பிற்கு காரணமான பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, மாநாட்டு வளாகத்தி லேயே சால்வை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டினார். தந்தை பெரியாரின் புத்தகங் களை நினைவுப் பரிசாகவும் வழங்கினார். தகைசான்ற தமிழர் தலைவரிடமிருந்து அந்தப் பாராட்டு தலையும் பெற்றதற்கு நன்றி தெரிவித்ததுடன், மலேசியாவில் உலகத் தமிழ்நாடு நடைபெறும் பொழுதெல்லாம், தங்களின் அழைப்பினை ஏற்று வருகை தரும் தமிழர் தலைவருக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
மலேசிய திராவிடர் கழக பொதுக்குழுவில் தமிழர் தலைவரால் பாராட்டப்பட்ட பொறுப்பாளர்கள்
நந்தன் மாசிலாமணி
மாநாட்டுச் செயலாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.நந்தன் மாசிலாமணி, தமிழ்நாட்டு பேராளர்களுக்கு விசா, பயணம், தங்குமிடம், உணவு இவற்றோடு மாநாட்டு ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்தவர். வெளிநாட்டுப் பேராளர்களுக்கும் உரியவற்றை செய்து முடித்து அவர்களது பங்கேற்பிற்கும் உறுதுணையாக இருந்தவர். மாநாட்டு மலர் தயாரிப்பிலும் முழுமையான ஈடுபாடு கொண்டு தமக்கே உரிய பதிப்பக அனுபவங்களைக் கொண்டு, பல ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியதாக 11ஆம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மலர் நல்லமுறையில் வெளிவரப் பாடுபட்டவர் நந்தன் மாசிலாமணி அவர்களுக்கும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டி, தந்தை பெரியார் எழுதிய புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.
ஓம்ஸ் தியாகராஜன்
மாநாட்டு ஏற்பாடுகளுக்கு மலேசிய அரசின் ஆதரவினை – குறிப்பாக மலேசியப் பிரதமர் அலுவலகத்துடனான ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு ஆதரவாக இருந்து மாநாட்டு வெற்றிக்குப் பாடுபட்டவர் ஓம்ஸ் தியாகராஜன். தமிழ்ப் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் வாங்கியோர் மற்றும் தமிழ்மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கியோர் மற்றும் தமிழ்க் குடும்பப் பிள்ளைகளில் பள்ளி இறுதி வகுப்பில் அதிகமாக மொத்த மதிப்பெண் வாங்கியோர் என மாணவர்களுக்கு, மாநாட்டு மேடையிலேயே மலேசியப் பிரதமரிடம் பாராட்டுப் பெறும் சூழலை ஏற்படுத்தியவரும் ஒம்ஸ் அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவருமான ஓம் ஓம்ஸ் தியாகராஜன் அவர்களுக்கு சால்வை அணிவித்து, அவரது தமிழ்ப்பணிகள்- தமிழுருக் கான பணிகள் தொடர வேண்டும் என வாழ்த்தி தமிழர் தலைவர் சிறப்பு செய்தார். உணர்ச்சிப் பெருக்கில் வணங்கிடக் குனிந்த அவரை, தமிழர் தலைவர் நிமிர்த்தி, என்றைக்கும் சுயமரியாதை உணர்வுடன் நெஞ்சை நிமிர்த்தி இருந்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மாநாட்டில் பங்கேற்பு, தகைசான்ற உரை அளிப்பு, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு தனித்துவ முறையில் பாராட்டு என தமிழர் தலைவரின் மலேசியா பயணம் – உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு அவசியத் தேவையாக விளங்கியது. பேராளர்களை, பங்கேற்பாளர்களை சந்திக்க மாநாட்டு வளாகம் வாய்ப்பு என்றால் மாநாடு ஒவ்வொரு நாளும் முடிந்ததற்கு பிறகு, மலேசிய நாட்டைச் சேர்ந்த பெருமக்கள் பலரைச் சந்திக்க, கலந்துரையாட உணவுக் கூடங்கள் பயன்பட்டன.
மாநாட்டு வளாகத்திலிருந்து முக்கிய தமிழ் உணவகமான ‘தாமரை’ உணவகத்திற்கு தமிழர் தலைவரை தோழர்கள் அழைத்துச் சென்றனர். உணவகத்திற்குள் தமிழர் தலைவர் நுழைவதற்கும் அதன் உரிமையாளர் டத்தோ ராமலிங்கம் அவர்கள் வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது. தமிழர் தலைவரைப் பார்த்தவர் அய்யா வாங்க வாங்க!’ என அன்பொழுக உள்ளே அழைத்துச் சென்று தனி அறையில் தமிழர் தலைவரையும், உடன் வந்தோரையும் அமரச் செய்தார். அங்கிருந்த பணி யாளர்களிடம் தேவை அறிந்து, எங்களது நோக்கம் அறிந்து உணவு வழங்கிடப் பணித்தார். அந்த உணவகத்தின் உரிமை யாளர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி நிறுவனர்தம் குடும்பத்தின் வழித்தோன்றல் ஆவார். ‘திருப்பத்தூரில் உங்கள் இல்லத்திற்கு வந்துள்ளேன்’ என தமிழர் தலைவர் நினைவு கூர்ந்தார்.
உணவு அருந்தியதும் நேராக தங்கும் விடுதிக்குச் சென்று சற்று நேரம் இளைப்பாறிய பின்னர், உடனே கோலாலம்பூர் – புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள ஸ்டே வித் பிந்தாங்’ விடுதி யில் நடைபெற்றுக்கொண்டிருந்த மலேசிய திராவிடர் கழகத்தின் 77ஆம் ஆண்டு பொதுக்குழுவில் பங்கேற்க கிளம்பினார். பொதுக் குழுவில், தமிழர் தலைவரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிறைவுரை ஆற்றிட, மலேசிய திராவிடர் கழகத்தின் தலைவரும், இதர பொறுப்பாளர்களும் வேண்டியிருந்தனர். அரை மணி நேரப் பயணத்தில் பொதுக் குழு நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தோம்.
மலேசிய திராவிடர் கழகத்தின்
77ஆம் ஆண்டு பொதுக்குழு
பொதுக்குழுவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை மலேசிய திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர் களும், தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை அவர்களும், பொதுச்செயலாளர் பொன். பொன்வாசகம் அவர்களும் தமிழர் தலைவரை அழைத்துச் சென்றனர். பொதுக்குழு நடைபெறும் அரங்கத்திற்குள் தமிழர் தலைவர் நுழைந்ததும் சுமார் 150 கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் இருபால் தோழர்கள் எழுந்து நின்று கர வொலி எழுப்பி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பொதுக்குழுக் கூட்டம் என்பதால் மலேசியா வின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தலைவர்களும், செயலாளர்களும் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் என ஒட்டு மொத்த பிரதிநிதித்துவத்தின் வருகை இருந்தது. தமிழர் தலைவர் தனது முதல் பயணமான 1968 முதல் மலேசியாவிற்கு வந்த பொழுதிலிருந்து பழகிய உறவுகள் என பெரும்பாலா னவரும் தமிழர் தலைவருக்கு அறிமுகமானவர்கள். இடை யில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்துப் பழகியவர்கள்தான். ஈபோ கெங் கையா, தாபா அர்ஜுனன், சுங்கைப்பட்டாணி வ. கதிரவன் என அறிமுகமானோர் பட்டியல் நீண்டு கொண்டே போனது. மேலும் ‘பெரியார்’ திரைப்பட உருவாக்கத்தின் பொழுது ‘மலேசியாவில் பெரியார் வருகை, தமிழர்களைச் சந்தித்தது உட்பட பல காட்சிகள் மலேசியாவில்தான் படப்பிடிப்பு நடந்தன. அதற்கு உறுதுணையாக இருந்த தோழர்களும் வந்திருந்தனர். மலேசிய திராவிடர் கழகத்தினர் நடத்திய பல்வேறு கூட்டங்களில் தமிழர் தலைவர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தாலும், பொதுக்குழுவில் பங்கேற்றுப் பேசுவது என்பது இதுதான் முதல் முறை. உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழர் தலைவரின் வருகையை அறிந்து, அதற்கேற்ப தலைவர் பங்கேற்றிடும் வகையில் பொதுக்குழுவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மலேசியத் திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
தமிழர் தலைவர் பாராட்டிய டத்தோ சகாதேவன் அவர்களுடன் தோழர்கள்
மாநாட்டு ஏற்பாட்டுச் செயலாளர் நந்தன் மாசிலலாமணிக்கு தமிழர் தலைவர் சிறப்புச் செய்தார்.
தமிழர் தலைவரை வரவேற்று உரையாற்றி அந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை பேசினார்.
அவருக்கு மலேசிய அரசு அண்மையில் டத்தோ விரு தினை வழங்கி பெருமைப்படுத்தியது. மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் முதன் முதலாக டத்தோ விருதினைப் பெற்றவர் ச.த. அண்ணாமலை அவர்கள்தான். உரையாற்றுவதற்கு முன்பாக டத்தோ விருது பெற்ற ச.த. அண்ணாமலை அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டினார். அடுத்து தமிழர் தலைவருடன் அவர் மலேசியாவிற்கு வந்த நாள் முதல் பழகிய மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் மதியுரை ஞர் ரெ.சு. முத்தையா அவர்களுக்கும் அதன் தலைவர் நாக. பஞ்சு அவர்களுக்கும் அவர்தம் பணிகளைப் பாராட்டி தமிழர் தலைவர் பட்டாடை அணிவித்து சிறப்புச் செய்தார். ரெ.சு. முத்தையா – நாக.பஞ்சு ஆகிய இருவரும் மலேசிய திராவிடர் கழகப் பொது குழுவிற்கு சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்றிட வேண்டப்பட்டிருந்தனர்.
பொதுக்குழுவில் தமிழர் தலைவரின் உரை
மலேசிய திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சி, அதன் அந்நாள் தலைவர்களையும் அறிந்திருக்கும் – கழகத் தோடு பயணப்பட்டிருக்கும் தமிழர் தலைவர் பொதுக்குழுவில் நிறைவுரை ஆற்றினார்.
“மலேசிய திராவிடர் கழக பொதுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களையும், தோழர்களையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். ஒட்டு மொத்தமாக அனைவரையும் ஒன்றுசேரப் பார்ப்பது வாழ்வில் எனக்கு ஒரு அரிய நிகழ் வாகும். பல்வேறு இன்னல்கள், சோதனையான காலக்கட் டங்களைக் கடந்து கழகம் இன்று இருக்கும் நிலையினை எட்டியுள்ளது. முதியவர் முதல், இளைஞர்கள் பலர் இந்தக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளீர்கள். அந்த நாளில் தந்தை பெரியாரும் அன்னை நாகம்மையாரும் அடுத்து தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் மலேயா விற்கு வந்து இரப்பர் தோட்டங்களில் உழைத்து வந்த தொழி லாளர்களான தமிழர்களைச் சந்தித்து ‘உங்களது பிள்ளை களுக்கு கல்வி கற்பியுங்கள். அதுதான் உண்மையான முன் னேற்றத்தைத் தரும்.’ என கூறியது கேட்டு அந்தத் தொழிலா ளர்களின் சந்ததியினர் இன்று சுயமரியாதையோடு, பல்வேறு வசதி வாய்ப்போடு வாழ்ந்து வருகின்றனர். தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பி, அமைப்பு ரீதியாக மலேசிய திராவிடர் கழகமாக இயங்கி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியடை கிறேன். இளைய தலைமுறையினருக்கு தந்தை பெரியாரின் சுயமரியாதை மனிதநேயக் கொள்கையினை முழுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம், பயிற்சிப் பட்டறைகளை நடத்திட உறுதுணையாக இருக்கும். வாய்ப் புள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து அங்கு நடக்கும் பட்டறைகளில் பங்கேற்றிடலாம். உலகில் உள்ள மனிதர்களுக் கெல்லாம் உகந்த கொள்கையான மனிதநேயம், மனித சமத்துவத்தை வலியுறுத்தினார் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கை வழி நின்று வாழ்வில் வளம் பெறு வோம்; மற்றவர்களையும் வளப்படுத்திடுவோம்.’’
இவ்வாறு தமிழர் தலைவர் நிறைவாகப் பேசி முடித்தாலும், வருகை தந்த ஒவ்வொரு பொறுப்பாளரும் அவர்களது மாநில மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழர் தலை வருக்கு சால்வை அணிவித்தனர்; தமிழர் தலைவருடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். இளைஞர்கள் மகிழ்ச்சி யுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த தோழர் களின் திரளிலிருந்து தமிழர் தலைவரை மீட்டு வருவது பொறுப் பாளர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது. அனைவரது விருப்பத்துக்கும் ஒளிப்படம் எடுக்கும் வரை அரங்கத்தில் இருந்து விட்டு விடை பெற்று தமிழர் தலைவர் கிளம்பினார்.
மலேசியாவில் வந்திறங்கி தங்குமிடம் செல்லும்போது மூத்த தோழர் டத்தோ சிறீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களைச் சந்திக்க விரும்புவதை தோழர்களிடம் தெரிவித்து அவரது சூழலை தொடர்புகொண்டு கேட்கச் சொல்லியிருந்தார். அவரது உடல்நிலை காரணமாக வெளியூரில் இருப்பதாகத் தெரிவித்த அவர் தனது சார்பாக ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்தினை அவரது நண்பரும் தமிழர் தலைவருக்கு அறிமுகமான டத்தோ சகாதேவன் உடன் ஏற்றுக்கொள்ள வேண்டியும் தகவல் அனுப்பியிருந்தார்.
ராயல் கிளப் ஆப் மலேசியா
கோலாலம்பூர் வாழ் பெருமக்களை உறுப்பினர்களாகக் கொண்டு நடத்தப்படும் ராயல் கிளப் ஆப் மலேசியா (Royal Club of Malaysia) விற்கு தமிழர் தலைவருடன் தோழர்கள் சென்றனர். டத்தோ சகாதேவன் உரிய நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு அவர் வருகை தந்ததையும், தமிழர் தலைவரை சந்தித்து உரை யாடியதையும் நினைவு கூர்ந்தார். மலேசியப் பயணம் பற்றி தமிழர் தலைவரிடம் கேட்டறிந்தார். உரையாடிக் கொண்டிருக் கும் பொழுதே உணவு தேவைக்கு குறிப்பெடுக்க பணியாளர் வந்தார். சீன உணவு வகைகள் பரிமாறப்பட்டன. முதன்முதலில் சூப் போன்ற, ஆனால் அனைத்துச் சுவைகளும் அடங்கிய சுவை நீர் வழங்கினர். அதற்கு ஈடாக மிளகாய், பூண்டு இவற்றை சின்னஞ் சிறியதாக நறுக்கி அதை தட்டில் வைத்துக்கொடுத்தனர். இவற்றைப் பார்த்துக் கொண்டு. இருக்கும் பொழுதே எடுத்து சாப்பிட ஒவ்வொரு வருக்கும் இரண்டு குச்சிகள் (Chopsticks) வழங்கினர். அனைவரும் குச்சிகளை எடுத்து சின்னஞ்சிறு துண்டுகளை கவ்வி எடுத்து உண்ணத் தொடங்கினர். குச்சிகள் வைத்து உணவு அருந்துவது திரைப்படத்தில் மட்டுமே காட்சியாகப் பார்த்தது. அனைவரிலும் குச்சி மூலம் சாப்பிடத் தெரியாத ஒரே நபர் நானாகத்தான் இருந்தேன் (கட்டுரையாளர் வீ.குமரேசன்). ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே’ என்ற கலக்கம். அருகில் இருந்த தோழர் இராஜராஜனிடம் குச்சிகளின் உதவியுடன் எப்படி உண்ணுவது என்று கேட்டேன். அவரும் படிப்படியாக குச்சியை இரண்டு விரல்களுக்கு இடையே எப்படி கவ்விக் கொள்ள வேண்டும். ஒரு குச்சி மட்டும் நிலையாக இருக்க வேண்டும். மற்றொரு குச்சியை கை விரலால் நகர்த்தி உணவினை எடுக்க வேண்டும் என்று பொறுமையாக சொல்லிக் கொடுத்தார். இரண்டு முறை கவ்வி எடுத்து வாய் அருகில் சென்னதும் விரல் நகர்ந்ததால் உணவு கீழே விழுந்து விட்டது. மறுபடியும் கவ்வி எடுத்து விரலை நகர்த்தாமல் வாய்க்குள் வைத்த பின்பு விரலை நகர்த்திட வேண்டும் என்றார். நான்கு முறை செய்து பார்த்து, அய்ந்தாவது தடவை வெற்றிகரமாக எடுத்து சாப்பிட முடிந்தது. முடியாது என நினைத்திருந்தது இவ்வளவு எளிதில் முடியும் என நினைக்க வில்லை. உரிய முறையில் பயிற்சி அளிப்பவர் இருந்ததால் சீன உணவினை சீனர் உண்ணும் முறையிலேயே உண்ண முடிந்தது. ஒவ்வொரு வகை உணவு ஒரு சுவையுடன் இருந்தது. அப்பொழுதான் தமிழர் தலைவர், நான்மலேசியா வரும் பொழுது சீன உணவினை விரும்பி உண்ணுவேன்’ என்று கூறினார். முழு உணவையும் உட்கொண்டபின்பு வயிறு முழுவதும் நிறைந்த – அல்லல் தருவதாகவே இல்லை. ‘சீன உணவு வகையின் சிறப்பே எளிதில் செரிமானம் ஆகிவிடும்; உடலுக்கும் நல்லது’ என்று தமிழர் தலைவர் நினைவூட்டிப் பேசினார். ஏறக்குறைய 1 மணி நேரம் தோழர்கள் கலகலப்பாக தமிழர் தலைவருடன் இருந்தனர்.
இரவு நேரம் அதிகமானதால் டத்தோ சகாதேவன் அவர் களுக்கு நன்றியினையும் டத்தோ சிறீ, டத்தோ கே.ஆர் சோமசுந்தரம் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் தமிழர் தலைவர் தெரிவிக்கச் சொன்னார். விடைபெற்று விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
மலேசியாவிலிருந்து புறப்பட்ட நாள்
முந்தைய நாள் பேராசிரியர் டத்தோ சிறீ த. மாரிமுத்து அவர் களைச் சந்தித்து பாராட்டிய வேளையில், தமிழர் தலைவரிடம் அடுத்த நாள் காலையில் தங்கும் விடுதிக்கு வந்து பார்ப்பதாகக் கூறியிருந்தார். சொன்னபடி காலை 9 மணிக்கு பேராசிரியர் தமிழர் தலைவர் தங்கியிருந்த அறைக்கு வந்துவிட்டார். இருவரும் – இருவர் மட்டுமே பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மன்ற செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். பின்னர் பேராசிரியர் தமிழர் தலைவரிடம் விடை பெற்றுச் சென்று விட்டார்.
சற்று நேரம் தோழர்களுடன் அறையில் தமிழர் தலைவர் உரையாடிக்கொண்டிருந்தார். சரியாக 11 மணி அளவில் விடுதியிலிருந்து புறப்பட்டு பன்னாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தோம். Check-in உடைமைகளைஅளித்து பயண அட்டையை தமிழர் தலைவரும் தோழர் ராஜராஜனும் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு முனையத்தினை அடைந்தனர். இந்த முறை மலேசியாவிற்கு உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட் டிற்கு வந்தது, பங்கேற்றது மூன்று நாள்களும் பெரியார் இயக்க தமிழர்களுடன் முழு நேரமும் கழித்தது என முற்றிலும் மாறுபட்ட, மனநிறைவைத் தரும் பயணமாக இருந்தது எனக் கூறி தோழர்கள் ரெ.சு. முத்தையா, நாக. பஞ்சு, இரா. அன் பழகன் ஆகியோரிடம் விடை பெற்று சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிக்க தமிழர் தலைவர் விடை பெற்றார். நானும், தோழர் ச. பிரின்சு என்னாரெசு பெரியாரும் அன்று இரவே சென்னை செல்லும் விமானத்தில் புறப்பட்டு திரும்பி னோம்.
சளைக்காத தோழமைகள்
இந்த முறை மலேசியப் பயணத்தின் பொழுது பெரியார் இயக்கத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் மூன்று நாள்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றது, தமிழ்நாடு, மலேசியா என்ற மாறுபாடே தெரியவில்லை. தந்தை பெரியார் ஏற் படுத்திய கொள்கை உறவு – எல்லை தாண்டியும் நீடித்து நிலைத்து இருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. குறிப்பாக மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் ரெ.சு. முத்தையா, நாக. பஞ்சு எடுத்துக்கொண்ட முயற்சிகள், தமிழர் தலைவரை விடுதியிலிருந்து குறித்த நேரத்தில் மாநாட்டு வளாகம் மற்ற இதர இடங்களுக்கு அழைத்துச் சென்றது என்றும் நினைவில் நிற்கும். அவர்கள் காட்டிய விருந்தோம்பல், செல்லும் இடங்களிலெல்லாம் சந்திப்புகள். புதிதாகச் சந்தித்த தமிழர்களுடன் ‘தமிழ் நாட்டில் எந்த ஊர்? எவ்வளவு காலம் மலேசியாவில் இருக்கிறீர்கள்?’ என்ன தொழில் செய்கிறீர்கள்?’ என குடும்ப உறுப்பினர்களைப் போல விசாரித்து கேட்டது தமிழர் தலைவரை முதல் முறை பார்ப்பவர்களுக்கு உரிய மனமார்ந்த மகிழ்ச்சியை அளித்தது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான தமிழர் தலைவரின் மலேசியப் பயணம் இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமாகவே அமைந்துவிட்டது.
– நிறைவு