மும்பை, ஜூன் 15 கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் இந்தி யா்கள், ஒன்று அல்லது அதற்கும் மேற் பட்ட நிதி மோசடிகளில் சிக்கியுள்ளனா் என்பது ஆய்வில் தெரிவியவந்துள்ளது.
இதில் பொதுவாக, நாட்டின் இணையவழி பணப் பரிவா்த்தனை தளமான ‘யுபிஅய்’ மற்றும் கடன் அட்டைகளில் (கிரெடிட் கார்டுகளில்) அதிகப்படியான மோசடிகள் பதிவாகி யுள்ளன. இணையவழி நிதி மோசடி தொடா்பாக 302 மாவட்டங்களில் 23,000 பேரிடம் ‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ‘53 சதவீதம் மக்கள் தங்களது கடன் அட்டைகளில் (கிரெடிட் கார்டுகளில்) உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிகா்கள் அல்லது இணையதளங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைச் சுமத்தியுள்ளதாக தெரிவித்தனா். 36 சதவீதம் மக்கள் இணையவழி பணப் பரிவா்த்தனை தளமான ‘யுபிஅய்’யில் நிதி மோசடியை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனா்.
கடந்த மூன்று ஆண்டுகளில், நிதி மோசடியில் சிக்கிய 10-இல் 6 இந்தியா்கள் மோசடி குறித்து ரிசா்வ் வங்கி அல்லது சட்ட அமலாக்க நிறுவனங்களிடம் புகாரளிப்பதில்லை. ரிசா்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.13,930 கோடி அளவுக்கு பொதுமக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டிருந்தது.
நிதி மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பு மற்றும் நுகா்வோர் விழிப்பு ணா்வை ஏற்படுத்துவதற்கான அவசரத் தேவை இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.