தருமபுரி மாவட்டத்துக்கும் பெரியாருக்கும் இடையிலான – நினைவுகூரத்தக்க தொடர்புகளும் நிகழ்வுகளும் ஏராளம். பெரியார் விதைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் செழித்துத் தழைத்த மண் தருமபுரி. குறிப்பாக, அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் பெரியாரின் சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் அளப்பரியவை.
‘அறியாமையில் மூழ்கிக் கிடந்த எங்கள் பகுதி மக்களின் ஏற்றத்துக்காகவும் எழுச்சிக்காகவும் அயராது பாடுபட்ட ஓர் ஏந்தல் பெரியார்’ என்கிறார் அரூர் வட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும், பாரதிதாசன் தொடங்கிய ‘குயில்’ பத்திரிகையை இன்றளவும் நடத்தி வருபவருமான, 85 வயதைக் கடந்துவிட்ட கவிஞர் கண்ணிமை. அந்த வார்த்தைகள் 100% உண்மையானவை.
வடக்கு நோக்கிய (சென்னை) பயணங்களின்போதும், தெற்கு நோக்கிய (ஈரோடு) பயணங்களின்போதும் பெரும்பாலும் தருமபுரியிலும் அரூரிலும் கால் பதித்து, கருத்து விதைத்துச் சென்றிருக்கிறார் பெரியார்.
ஒருமுறை அரூர் வட்டம் ராமியம்பட்டியில் திராவிடர் கழகக் கூட்டம் நடைபெற்றது. பெரியார் இந்நிகழ்ச்சிக்கு வரக் கூடாது என அவ்வூரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘கடவுள் இல்லை என்னும் பெரியாரே திரும்பிப் போ’ என்று எழுதப்பட்ட அட்டைகளைக் கழுதைகளின் மேல் கட்டிவைத்துத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரியார் கூட்ட மேடைக்கு வந்து பேசத் தொடங்கியிருக்கிறார். எதிர்ப்புத் தெரிவித்த அணிக்குத் தலைமை வகித்தவர் சாமிக்கண்ணு. எங்கோ நின்றபடி வேண்டாவெறுப்பாகப் பெரியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சாமிக்கண்ணுவின் மனதில், அந்தப் பேச்சு என்ன மாயம் செய்ததோ தெரியவில்லை. கூட்ட முடிவில், பெரியாரைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று தட்டு நிறைய பழங்களையும், பட்டுத் துண்டையும் வைத்துப் பரிசாக வழங்கி பெரியாரை வணங்கியிருக்கிறார் சாமிக்கண்ணு.
மற்றொரு முறை அரூர் வட்டம் மெனசியில் நடந்த ‘பெரியார் பிறந்த நாள் விழா’ கூட்டத்தில் பங்கேற்று பெரியார் பேசியிருக்கிறார். கூட்டத்தில் பெரியாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் என்பவர், வேகமாக வீட்டுக்குச் சென்று ஓர் உண்டியலுடன் வந்திருக்கிறார். கூட்ட முடிவில் மேடையேறிய பெருமாள், குடும்பத்துடன் திருப்பதி செல்ல தான் சேர்த்து வைத்த உண்டியல் பணம் முழுவதையும் கழகத்துக்கு அன்பளிப்பாகத் தருவதாகக் கூறி பெரியார் கைகளில் உண்டியலை ஒப்படைத்துள்ளார்.
– எஸ்.ராஜாசெல்லம்,
முதுநிலை செய்தியாளர், இந்து தமிழ் திசை