மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு 2016-இல் கொண்டுவரப்பட்டதில் இருந்தே பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்ததேர்வை எழுத தேர்வு மய்யத்துக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகிறார்கள். இவ்வளவையும் தாண்டி தேர்வு எழுதினாலும், ஆண்டுதோறும் வினாத்தாள் திருத்துவதில் குளறுபடி, சில இடங்களில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் எழுதினார்கள். இந்த தேர்விலும் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்றமே இந்த தேர்வின் புனிதம் கெட்டுவிட்டது என்று சாட்டையடி கொடுக்கும் வகையில் பல குறைபாடுகள் நடந்துள்ளன.
‘நீட்’ தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் கடந்த ஆண்டு 2 பேர் மட்டுமே பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 650 முதல் 720 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரம்தான். அதுவே இந்த ஆண்டு 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுதான் சந்தேகத்தை மேலும் ஏற்படுத்துகிறது. அதிலும், அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு அறையில் அடுத்தடுத்த பதிவு எண்களைக்கொண்ட 6 பேர் முழுமதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள். இந்த தேர்வை பொறுத்தவரையில், ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண், தவறான விடைக்கு நெகட்டிவாக ஒரு மதிப்பெண், ஆக ஒரு வினா தவறானால் 5 மதிப்பெண்ணை தேர்வர்கள் இழக்கநேரிடும். அந்தவகையில் 720 மதிப்பெண்ணுக்கு நடக்கும் ‘நீட்’ தேர்வில் தேர்வர்கள் ஒரு வினாவுக்கு தவறாக பதிலளித்திருந்தால் 715 மதிப்பெண்தான் பெறமுடியும். ஆனால், சிலருக்கு 718, 719 மதிப்பெண்கள் எப்படி வந்தது? என்ற கேள்வியும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதவிர, நேர இழப்பு, ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தாமதமாக வழங்கப்பட்டது, கிழிந்த விடைத்தாள்கள் வழங்கப்பட்டது, தொழில்நுட்பக் குறைபாடு, வேறுமொழி வினாத்தாள் வழங்கியது போன்ற காரணங்களுக்காக 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மதிப்பெண்களெல்லாம் ‘ஜிவ்வெ’ன்று மேலே ஏறிவிட்டது. இந்த கருணை மதிப்பெண் பெற்றவர்கள்தான், 718, 719 மதிப்பெண்களை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவிக்கிறது. இப்போது ஒன்றிய கல்வி அமைச்சர், “கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 பேருக்கும் ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். அந்த தேர்வை எழுதவிரும்பாதவர்களுக்கு கருணை மதிப்பெண் ரத்துசெய்யப்படும்” என்று நேற்று அறிவித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், வினாத்தாள்கள் ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக பீகார், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் காவல்துறையில் புகார்களும் கூறப் பட்டுள்ளன. இதுதொடர்பாக மறு தேர்வு நடத்தவேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப் பட்டுள்ளது. ஒரு நல்லமுடிவு கிடைக்கும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்தி ருக்கிறார்கள். இந்த ஆண்டு நடந்த சம்பவங்கள் ‘நீட்’ தேர்வு மேலேயே ஒரு நம்பிக்கை இல்லாத தன்மையை ஏற்படுத்திவிட்டது. ‘நீட்’ தேர்வில் தொடர்ந்து முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்து வருவதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் குற்றம்சாட்டியுள்ளார். இவ்வளவு குறைபாடுகளையும் பார்க்கும்போது இனியும் ‘நீட்’ தேர்வு தேவையா? என்ற எண்ணமே சமுதாயத்தில் வலுப்பெற்றுள்ளது. 2017-க்கு முன்பு இருந்ததுபோல பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்சேர்க்கை நடந்தால் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும். மாணவர்களும் அதையே விரும்புகிறார்கள். மொத்தத்தில் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை தற்போது வலுப்பெற்றுவிட்டது.
நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம், 14.6.2024