குவைத் சிட்டி, ஜூன் 13 குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (12.6.2024) அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அலசும் போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது குறித்து அந்த நாட்டு அதி காரிகள் விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணம்: எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்தது தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டடத்தின் கீழ்தளத்தில் அந்த காவலாளி தங்கியுள்ளார். அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ள னர். அதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர்களில் 92 பேர் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் இரவு வேலை என்பதால் பணிக்கு சென்றுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் என்பிடிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர்.தீ விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்று உயிரிழந்துள்ளனர்.
கடுமையான நடவடிக்கை எடுக்க குவைத்தின் எமிர் ஷேக் அல்-சபா உத்தரவு: தீ விபத்தை அடுத்து குவைத்தின் எமிர் ஷேக் அல்-சபா தெரிவித்தது: ‘உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். இந்த விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் துரிதமாக விசாரிக்க வேண்டும். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பதை அந்த நாட்டின் தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.
குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா நிலைமையை மதிப்பிடுவதற்காக தீ விபத்து ஏற்பட்ட மங்கஃப் பகுதிக்கு விரைந்தார். பிறகு 30-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அல்-அதான் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பல நோயாளி களை சந்தித்து, தூதரகம் சார்பில் முழு அளவில் உதவிகள் செய்யப்படும் என அவர்களுக்கு உறுதி அளித்தார்.
இதையடுத்து தீ விபத்தில் தொடர்புடைய இந்தியர்களின் குடும்பத்தினருக்காக 965-65505246 என்ற ஹெல்ப்லைன் எண்ணை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.