ஓர் எண்பது ஆண்டு கால கட்டத்தில் நிற்காமல் ஓடி, 100 ஒலிம்பிக் போட்டிகளில் இருக்கும் நீச்சல் குளங்களைப் போல, நூறு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவு சுமார் 3.3 பில்லியன் லிட்டர் திரவத்தை இறைக்கும் ஒரு பம்ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், நம் இதயம்தான் அது.
வயிற்றில் கருவாக உருவாகி, முதல் இதயத் தசைகள் உருவான வுடன் துடிக்க ஆரம்பித்து கடைசி யில் நிற்கும் வரை ஓடும் ஒரு உறுப்பு. உண்மையில் இது ஒரு உயிரியல் விந்தை. யானை, நீலத் திமிங்கிலம் போன்ற விலங்குகளை கற்பனை செய்து பாருங்கள். பாரோசாரஸ் என்ற பெயரில் 12 மீட்டர் உயர மும் 20 மீட்டருக்கு மேல் நீளமும் கொண்ட டைனோசரின் இத யத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எப்படியும் நம் வீட்டு மின் மோட்டார்கள் அளவுக்கு அவற்றின் இதயங்கள் இருந்திருக்கும். வாழும் உதாரணம் ஒட்டகச்சிவிங்கிகள். நமக்கெல்லாம் இதயத்தில் இருந்து மூளை அதிகபட்சம் ஒரு அடிக்குள் வந்துவிட, ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தில் இருந்து மூளை ஆறடி தூரத்துக்கும் மேல் இருக்கும். அவ்வளவு தூரம் அது அழுத்தத்துடன் மூளைக்கு ரத்தத்தை அனுப்ப வேண்டும்.
கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரம் இதயம். துல்லியமாகச் சுருங்கி விரிந்து ரத்தத்தை ஓட வைக்கும் அதன் செயல்பாட்டில் சில நேரம் பிரச்சினை வரலாம். சிறு மின்சார சமிஞ்கைகள்தான் இதயத் தசைகளை ஓட வைக்கின்றன. அந்த சமிஞ்கைகள் உருவாக்கத்திலோ அல்லது சமிஞ்கைகள் இதயத்தில் பரவுவதிலோ பிரச்சினை இருந்தால், இதயம் தன் இயல்பான துடிப்பில் இருந்து மாறிவிடும். வேகமாகவோ அல்லது மெதுவாகவோ துடிக்க ஆரம்பிக்கலாம். இரண்டுமே, ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை செல்க ளுக்கு சரியானபடி கிடைக்காமல் செய்துவிடும். இது அயர்வு, உடல் அசதி முதல் தீவிரமான நிலைகளில் மரணம் வரை கொண்டுபோய்விடும். அம்மாதிரி நேரங்களில் உயிர்காப்பது தான் பேஸ்மேக்கர் (pacemaker). செயற்கையான மின் சமிஞ்கைகள் மூலம் இதயத்தின் ரத்தம் செலுத்தும் செயல்பாட்டை சரிசெய்யும் கருவி. அதற்கு முதலில் இதயத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.
இதயம், மேலிரண்டு கீழிரண்டாக நான்கு அறைகளைக் கொண்டது. மேலிருக்கும் அறைகளுக்கு ஏட்ரியா (atria), கீழிருக்கும் அறைகளுக்கு வென்ட்ரிகிள் (ventricle) என்று பெயர். இடதுபுறம் இருக்கும் ஏட்ரியா மற்றும் வென்ட்ரிகிள் இரண்டும் ஒரு தசை வால்வால் பிரிக்கப்பட்டிருக்கும். அதேபோல, வலதுபுறம் இருக்கும் ஏட்ரியா மற்றும் வென்ட்ரிகிளும் ஒரு வால்வால் பிரிக்கப்பட்டிருக்கும்.
வலதுபுறம் இருக்கும் அறைகள் ஆக்சிஜன் குறைந்த ரத்தத்தைப் பெற்று நுரையீரலுக்கு அனுப்பும். இடதுபுறம் இருக்கும் அறைகள் நுரையீரலில் இருந்து ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தைப் பெற்று உடல் முழுமைக்கும் அனுப்பும். இதில் சுவாரசியமே அந்த ஒழுங்குதான். இதயத்தின் துடிப்பு, அதன் தசை களுக்கு அளிக்கப்படும் மெல்லிய மின்சாரத்தால் நிகழ்கிறது. இது உற்பத்தி ஆகுமிடம் வலது ஏட்ரி யத்தை ஒட்டி இருக்கிறது. அந்த இடத்திற்கு சைனோ ஏட்ரியல் முனையம் (Sino Atrial Node) என்று பெயர். அங்கு உருவாகும் மின்சார சமிக்ஞைகள் ஏட்ரியத்தை சுருக்கி, வென்ட்ரிகிளுக்குள் ரத்தத்தைச் செலுத்தும். அதன்பின்னர், அந்த மின் சமிக்ஞைகள் நகர்ந்து வென்ட்ரிகிள்கள் பக்கம் வரும். இப்போது வென்ட்ரிகிள்கள் சுருங்கி ரத்தத்தை இதயத்தை விட்டு வெளியே அனுப்பும். இந்த மின்சமிக்ஞைகள் கச்சிதமாக தேவைக்கேற்ப இயங்கும்.
சாதாரணமாக இருக்கும் நீங்கள், ஒரு நாய் துரத்தி ஓட ஆரம்பிக்கிறீர்கள் எனில், மூன்றே விநாடிக்குள் துடிக்கும் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு ஈடுகொடுக்கும். ஆனால், சில நேரம் இந்த கச்சிதம் சீர்குலையும். மின் சமிக்ஞைகள் சரியாகப் பயணிக்கா ததால் இதயம் சீராய்த் துடிக்காது. தேவையான அழுத்தத்துடன் ரத்தம் பயணிக்காது. இது சோர்வு, ரத்த அழுத்தக் குறைவு, ஏன் அரிதாக மரணம் கூட நிகழலாம். அதைச் சரிசெய்யக் கிடைத்த சிறந்த பரிசுதான் பேஸ்மேக்கர்.