அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு
சென்னை, ஜூன் 13 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை – மாலை என இரு வேளையும் கூட்டம் நடத்தப்பட்டு 16 அமர்வுகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளில் விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதையடுத்து, 2024-2025 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் நிதி நிலை அறிக்கை 19, 20-ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவாக, விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்தனர்.இதையடுத்து, மக்களவை தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படாமல், பேரவைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ஆம் தேதிக்கு பதிலாக, முன்கூட்டியே 20-ஆம் தேதி தொடங்கும் என்று மு.அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று (12.6.2024) நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஜூன் 29 வரை நடத்துவதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து அப்பாவு கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும். மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு 20-ஆம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய நாள் பேரவை ஒத்திவைக்கப்படும். 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும்.
வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் பேரவை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்க, விதிகள் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21-ஆம் தேதி பேரவை கூடியதும் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும். 29-ஆம் தேதி தவிர மற்ற நாட்களில் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை என 2 பிரிவுகளாக கூட்டம் நடைபெறும். அதாவது மொத்தம் 16 அமர்வுகளாக பேரவை கூட்டம் நடத்தப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவித்ததால்தான் கூட்டத்தொடரை 4 நாட்கள் முன்னதாகவே தொடங்கி காலை, மாலை என இரு வேளையும் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மானிய கோரிக்கை விவாதம் 8 நாட்கள் மட்டும்தானா என கேள்வி எழுப்பப்படுகிறது. 2004-ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு சூழலில் இங்கு வெறும் 6 நாட்கள் மட்டுமே மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்துள்ளது என்றார்