சென்னை, ஆக. 30 – அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் ஆகமம் சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக் கோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு இந்து சமய நிறுவன ஊழியர்களுக்கான சேவை விதிகள், 2020இன் கீழ் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது. அந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜெ.பி.பர்திவாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
ஆனால், இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.