புதுடில்லி, ஜூன் 10- காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தரப் பிரதேச பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களவை தேர்தல் முடிவுகளை தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு ஆய்வு செய்தது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வென்றது. எங்களின் இந்தியா கூட்டணி மொத்தம் 43 இடங்களில் வென்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பெண்கள் உரிமை உட்பட 9 முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டன.
ராகுல் காந்தியின் தேசிய நடைப் பயணம் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு இடையே, உ.பி. மக்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியது பாராட்டத்தக்கது. உ.பி.யின் 403 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ள தகவல்களை தெரிவிக்கவும் நன்றி பயணம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இந்த நன்றி பயணம் நடத்தப்படும்.இவ்வாறு அவினாஷ் பாண்டே தெரிவித்தார்.
காத்திருங்கள்: இந்தியா கூட்டணி
ஆட்சி அமைக்கும் – மம்தா
கொல்கத்தா, ஜூன்10- ”இந்தியா கூட்டணி இப்போது ஆட்சியமைக்க உரிமை கோராமல் இருந்திருக்கலாம், ஆனால் நாளை எங்களால் ஆட்சியமைக்க முடியாது என்று அர்த்தமில்லை” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “இந்த நாட்டிற்கு மாற்றம் தேவை. நம் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது. இந்த ஆட்சி மாறிவிடும். நாங்கள் காத்திருந்து இந்த நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இந்த ஆட்சிக் கூட்டணி நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது. வேறு யாருக்காவது ஆட்சிப் பொறுப்பை வழங்க வேண்டும்”
”பாஜக அரசு சட்டத்துக்குப் புறம்பாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இன்று இந்தியக் கூட்டணி ஆட்சியமைக்க உரிமைக் கோரவில்லை. நாளையும் இதே போன்று இருக்கும் என்று அர்த்தமில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்” என்று பேசியுள்ளார்.
மேலும், ”பாஜகவின் கூட்டணி நிலையற்றது. இந்த பலவீனமான ஒன்றிய அரசு ஆட்சியிலிருந்து விலகினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மோடி பதவி யேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எங்கள் கட்சி பங்கேற்காது எனவும், எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும் மம்தா கூறினார். அத்துடன், திரினாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்றும் பேசியுள்ளார்.