* கருஞ்சட்டை *
ராம் தஹாம் சேனா (ராமர் கோவில் படை) என்ற அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் ‘‘அயோத்தி’’ என்று பெயர் எழுதி அதற்கு நெருப்பு வைத்து, ‘‘அயோத்தியில் பிறந்த பாவிகளே, ராமருக்குத் தீங்கிழைத்த ராவணனின் இலங்கையை அனுமன் எரித்துச் சாம்பலாக்கினார்; அதேபோல் நாங்கள் ராமனுக்கு கோவில்கட்டியவர்களை தோற்கடித்த அயோத்தியை தீவைத்து அழிக்கப் போகிறோம்’’ என்று கூறி, பெட்ரோலில் ஊற வைக்கப்பட்ட துணியில், ‘‘அயோத்தி’’ என்று எழுதி, அதற்குத் தீவைத்து, மள மள என்று எரியும் நெருப்பின் முன்னால் நின்று, ‘‘அக்னிதேவன் சாட்சியாக அயோத்தியை எரித்துச் சாம்பலாக்குவோம்’’ என்று மனநோயாளிபோல் கத்துகிறார். இவர் பாஜகவின் சின்னம் அணிந்த துண்டையும் கழுத்தில் போட்டுள்ளார்.
இது எப்படி இருக்கிறது?
அயோத்தி ராமன் கோவில் இருக்கும் ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பி.ஜே.பி. வேட்பாளர் லல்லுசிங்கை 54,467 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் சமாஜ்வாடி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் – தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஃபைசாபாத் பொதுத் தொகுதியில் இவர் வெற்றி பெற்றது இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நெற்றியை உயர்த்திப் பார்க்கச் செய்தது.
இராமன் கோவில் கட்டுவதற்குக் காரணமாக இருந்த பி.ஜே.பி., இந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டதை பி.ஜே.பி., சங் பரிவார்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை! மக்கள் தீர்ப்பை மதிக்கத் தயாராகவும் இல்லை. ஜனநாயகத்திற்கும், பி.ஜே.பி.,க்கும்தான் எந்த சம்பந்தமும் கிடையாதே! அந்த வெறியில்தான் இராமன் பூமியில் இராவணனின் வெற்றியா? என்ற ஆத்திரத்தில், அன்று இலங்கையைக் கொளுத்தியதுபோல், இப்பொழுது என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அயோத்தி என்று துணியில் எழுதி, அதனைக் கொளுத்தியிருக்கிறார்.
ஒரு வகையில் பார்க்கப்போனால், இராவண லீலாவை பா.ஜ.க.வினர் உத்தரப்பிரதேசத்தில் நடத்தியிருக்கின்றனர்.