சென்னை, ஜூன் 10- தமிழ் நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று (10.6.2024) அனைத்து பள்ளிகளும் திறக் கப்படுகின்றன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்றே பாடப் புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தி ருக்கிறது.
தமிழ்நாட்டில் நாடாளு மன்ற தேர்தலும் வந்ததால், பள்ளிகளுக்கு இறுதி தேர்வு இந்த முறை முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட்டது. 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வரை நடந்தது. அதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் விரைவாக நடத்தப்பட்டது.அதாவது 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி ஆண்டு தேர்வு நிறைவு பெற்றது. அதே நேரம் 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு பின்னர் 12 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்படட்ன. பின்னர் 23-ஆம் தேதி கடைசி தேர்வு நடத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது..
பொதுவாக, மாணவர் களுக்கு கோடை விடுமுறை சுமார் ஒன்றரை மாதம் விடப்படும். பின்னர் ஜூன் மாதம் 1ஆம் தேதி அல்லது முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். வெயில் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளி வைக்கப்படும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியாக இருந்ததால், 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை முதலில் அறிவித்து இருந்தது.
இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று (10.6.2024) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற் பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நாளான இன்றே விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப் படுகிறது.
சுமார் 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவி களுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட இருக்கிறது. இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும் தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதுதவிர புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் சீருடை யுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.