– கி.வீரமணி –
இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களது நினைவு நாள் (30.8.2023)!
கலைவாணரின் பகுத்தறிவுத் தேன் தடவிய நகைச்சுவைக்கு ஈடேது? இணையேது?
அறிவுக்குப் பெருவிருந்து;
அறியாமைக்கு தகுமருந்து!
எப்போதும் மகிழும் சிரிப்பு விருந்து!
வாழ்நாள் எல்லாம் வையத்தாருக்குக்
கொடையளித்து அரைத்த சந்தன மான
அற்புத வள்ளல்!
ஆனால், அவர் என்றும் ‘அறவிலை வணிகர்’ அல்லர்!
தொண்டறத்தின் தூய உருவம்
தொலைநோக்குப் பெரியாரின் ஒளிபட்டு
ஜொலித்த நகைச்சுவைக் கடல்!
படித்த பாட புத்தகமோ
பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ வார ஏடு!
‘குடிஅரசு’ ஏட்டில், ‘‘அய்யோ கிருஷ்ணா உனக்கா 14 ஆண்டுகள் சிறை!” – பெரியாரின் உருக்கமான தலையங்கம் ஒரு தனி இலக்கியம்!
உடுமலை நாராயண கவிராயரும், கலைவாணரும், அம்மையார் டி.ஏ.மதுரமும், அவரது குழுவினரும் அமைந்ததுபோல், வேறு ஒரு குழு கலை உலகம் எங்கும் காணாத புதுமை!
‘50-ம் 60-ம்’ என்று 1960 இல் மாற்றம் வரவேண்டும் என்று விழைந்தார்.
மற்றொரு 60 ஆண்டுகளும் கழிந்து விட்டது.
மாற்றத்தை ஒழிக்க சனாதனம் சல்லடம் கட்டி சவால் விடுகிறது!
இன்றும் ஆயிரம் கலைவாணர்கள் தேவை!
அவர் என்றும் வாழ்கிறார் –
வெல்க அவர் புகழ்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2023