மோடி பதவிக்கு தகுதியில்லாதவர்- மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்! – சோனியா காந்தி விமர்சனம்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 9 தற்போதைய மக்களவைத் தோ்தல் முடிவுகள், பிரதமா் மோடிக்கு அரசியல்-தார்மிக ரீதியில் தோல்வி என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவா் சோனியா காந்தி விமா்சித்தார். அதேநேரம், மக்களவைத் தோ்தல் மூலம் தனது மீட்சியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது காங்கிரஸ் என்றும் அவா் குறிப்பிட்டார்.

டில்லியில் உள்ள பழைய நாடாளுமன்றத்தின் மய்ய மண்டபத்தில் நேற்று (8.6.2024) நடைபெற்ற காங்கிரஸ் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் நாடாளு மன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தோ்வு செய்யப்பட்டார்.

பின்னா், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவா் பேசியதாவது:
மக்களவைத் தோ்தலில் சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை ஒதுக்கிவிட்டு, தனது பெயரை மட்டுமே முன்னிறுத்தி மக்களிடம் வாக்கு கோரினார் மோடி. ஆனால், மக்களவைத் தோ்தல் முடிவுகள், அவருக்கு அரசியல்-தார்மீக ரீதியில் தோல்வியாக அமைந்துவிட்டன. உண்மையில், மக்களிடம் அவா் கோரிய தீா்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தலைமைத்துவத்துக்கான உரிமையை அவா் இழந்துவிட்டார். தனது தார்மீக தோல்விக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக, நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கப் போகிறார்.
தனது நிர்வாகப் போக்கை அவா் மாற்றிக் கொள்வார் என்றோ, மக்களின் விருப்பத்தை கவனத்தில் கொள்வார் என்றோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மோடி மற்றும் அவரது தலை மையிலான புதிய அரசு பொறுப்புடன் செயலாற்றுவதை உறுதி செய்வதில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழிப்புடனும், ஊக்கத்துடனும் பணியாற்ற வேண்டும்.

‘நாடாளுமன்றத்தின் குரலை இனி நசுக்க முடியாது’
கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற மாண்புகளை சிதைத்ததைப் போல் இனி சிதைக்க முடியாது. நாடாளு மன்றப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவோ, உறுப்பினா்களைத் தவறாக நடத்தவோ, உரிய பரிசீலனை-விவாதமின்றி சட்டங்களை அவசர கதியில் நிறைவேற்றவோ ஆளும் தரப்பை அனுமதிக்க முடியாது. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்றக் குழுக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததைப் போல் இனி புறக்கணிக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் குரலை நசுக்கியதைப் போல இனி மேல் நசுக்க முடியாது. அதேநேரம், அரசமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளை சிதைக்கவும், மக்களை பிளவுபடுத்தவும் ஆளும் தரப்பு தனது முயற்சி களை அதிகரிக்கக் கூடும். இத்தகைய முயற்சிகளைத் தடுக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடாளுமன்றத்தில் நமது கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணியின் பலம், நமக்கு மேலும் வலுசோ்க்கிறது. தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியிலான விமா்சனங்களை எதிர்கொண்டு, விடாமுயற்சி- உறுதியுடன் மேற்கொண்ட போராட்டத்துக்காக ராகு லுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அவரது இந்திய ஒற்றுமை பயணங்கள், வரலாற்று இயக்கங்களாக உள்ளன. நமது வாக்குறுதிகள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது தொடா்பான பிரச்சாரத்தை அவா் கூா்மை யாக வடிவமைத்தார்.
நாம் எதிர்பார்த்ததை விட குறைவாக வெற்றி பெற்ற மாநிலங்களில் கட்சியின் நிலையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *