பெங்களூரு, ஜூன் 5- இந்தியா கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (81) கடந்த 1972ஆம் ஆண்டில் இருந்து 2008ஆம் ஆண்டு வரை நடந்த கருநாடக சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் குல்பர்கா தொகுதியில் வெற்றிப்பெற்ற அவர், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் தலைவராக இருந்ததால் அந்த தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடவில்லை.
தனக்கு பதிலாக தன் மருமகன் ராதாகிருஷ்ணா தொட்டமணியை தேர்தலில் நிறுத்தினார். அவருக்கு எதிராக கார்கேவை வீழ்த்திய பாஜக வேட்பாளர் உமேஷ் யாதவ் மீண்டும் களமிறங்கினார். மருமகனுக்கு ஆதரவாக கார்கே குல்பர்காவில் 3 நாட்கள் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் தன் மகனும், கருநாடக அமைச்சருமான பிரியங்க் கார்கேவை தொகுதியிலே தங்கி பணியாற்றுமாறு உத்தரவிட்டார். உமேஷ் யாதவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற் கொண்டனர்.
நேற்று (4.5.2024) வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது ராதாகிருஷ்ணாவை விட உமேஷ்யாதவ் 5 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகித்தார். அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணப்பட்ட போது இருவருக்கும் இடையேகடும் போட்டி நிலவியது. இறுதியில் ராதாகிருஷ்ணா (6,52,321) பாஜக வேட்பாளர் உமேஷ் யாதவை (6,25,116) விட 27,205 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.