தியானம் வேண்டுமா – திராவிடம் வேண்டுமா? நமக்குத் தமிழ்நாடும் வேண்டும் – திராவிடமும் வேண்டும்!
கலைஞர் ஒரு நூற்றாண்டல்ல – பல நூற்றாண்டும் அவரின் தொண்டும், புகழும் நிலைக்கும்!
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஜூன் 4 மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆளும் முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அவர் பொறித்த முத்திரைகள் மகத்தானவை. அவர் தொண்டும், புகழும் நூற்றாண்டுகளையும் தாண்டி நிலைத்து நிற்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 1.6.2024 அன்று மாலை சென்னை ஓட்டேரி யில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. திரு.வி.க. நகர் வடக்குப் பகுதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடை பெற்றது. விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – விழா மட்டும் நிறைவல்ல – நம் உள்ளமெல்லாம் நிறைவாக இருக்கக்கூடிய அளவிற்கு நடந்து – நம்முடைய கருத்துப் பொழிவுகள்மூலம் அறிவுப் பசியும் நிறைவடைந்துள்ளது.
பசிக்கு உணவு – அது ருசிக்கு அல்ல. அதே போல, கருத்துப் பசி ஏற்படும்பொழுது, உணவு தரக்கூடிய அந்த வாய்ப்பினை தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம். அதனுடைய பயிற்சியாளர்களாக உள்ளவர்கள் பெற்றுள்ள சிறப்பு தமிழ்நாட்டுக்குரிய ஒன்றாகும்.
ஒரு குடும்பப் பாசத்தோடு இருக்கக்கூடிய குடும்ப இயக்கம் இது. தந்தை பெரியார், அண்ணா – அருமைத் தம்பிகள், உடன்பிறப்புகள் அப்படிப்பட்ட வாய்ப்புகளைப் பெற்றிருக்கக்கூடிய இயக்கம். அப்படிப்பட்ட ஓர் அருமையான இயக்கத்தின் சார்பில், அருமையாக கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டத்தினை நம்முடைய மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இவருடைய பெயருக்கு முன்னால், சேகர்பாபு என்றால், அவர் செயல்பாபு என்று அர்த்தம்.
அதனை பல நேரங்களில் பெரியார் திடலில் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்றாலும்கூட, இன்று அதனை முழுமையான, உறுதியாக்கப்பட வேண்டிய ஒரு பெரிய சான்றாகப் பார்க்கின்றோம். அதைத்தான் மிக அருமையாக இங்கே சொன்னார்கள்.
கலைஞரோடு கலந்தோம்!
நீங்கள் எல்லாம் காத்திருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வந்ததற்காகப் பொறுத்தருள வேண்டும். அதன்படி நம்முடைய அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகர் கலைஞர் அரங்கத்தைக் கண்டு, நாங்கள் ஒன்றரை மணிநேரம் அதிலேதான் செலவழித்துக் கொண்டிருந்தோம். அந்த ஒன்றரை மணிநேரமும் கலைஞரோடு இருந்தோம். உங்களை மறந்தோம்; கலைஞரோடு கலந்தோம். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்வில், பல நினைவுகளையெல்லாம் வர வழைத்தார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு ‘‘வற்றாத தமிழாறு – மகத்தான வரலாறு” என்று தலைப்பிட்டு இருக்கின்ற உங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கி றேன்.
அமைச்சர் அவர்கள் எதைச் செய்தாலும், அதில் ஒரு தனி முத்திரை இருக்கும்; அந்த முத்திரையை இங்கே கொடுத்திருக்கக் கூடிய மாண்புமிகு அமைச்சர் அவர்களே,
வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு அமெரிக்காவில் டாக்டர் பட்டம் – பாராட்டுகள், வாழ்த்துகள்!
தமிழ்நாடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமைபடக்கூடிய அளவிற்கு, ஒரு தனியார் பல்கலைக் கழகம் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய பல்கலைக் கழக வேந்தருக்கு சாதனையாளர் விருதை – நம்முடைய டாக்டர் பட்டத்தை அண்மையில் அமெரிக்காவில் வழங்கி யிருக்கிறார்கள். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
ஒரு தமிழன் பெருமைப் பெற்றால், அதுவும் கல்வியில் பெருமை பெற்றால், அதைவிட சிறந்தது – திராவிட இயக்கத்தால் தயாரிக்கப்பட்ட ஒருவர் பெருமை பெற்றால், கலைஞரால் பெருமை பெற்றார் என்று சொல்லக்கூடிய அருமைச் சகோதரர் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் அவர்களே,
இந்நிகழ்வில் ஒரு சிறந்த பதிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் அருமை நண்பர் சமஸ் அவர்களே,
அவருடைய பேனா எல்லோரையும் தாக்கும். ஆனால், அதற்காக யாரும் கவலைப்பட்டதில்லை. காரணம், அந்தப் பேனா, தாக்க வேண்டிய நேரத்தில் தாக்கும். தாங்கவேண்டிய நேரத்தில் தாங்கும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
தாக்குதல் எங்கே இருக்கிறதோ, அங்கே தாங்கு தலும் இருக்கவேண்டும் என்று சொன்னால், எங்களைப் போன்றவர்களுக்கு எந்த சங்கடமும், தடங்கலும் கிடையாது. ஆகவேதான், பாராட்டுகின்றவர்களை மட்டும் நாங்கள் அழைக்கவில்லை; எங்களை விமர்சிப்பவர்களைக்கூட இந்த மேடை அழைக்கும் என்பதற்காகத்தான் மிக முக்கியமாக அவரையும் அழைத்திருக்கிறார் நம்முடைய அமைச்சர், அவரைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்.
கலைத்துறையாக இருந்தாலும், கல்வித் துறையாக இருந்தாலும், அவர் கண்களுக்கு எப்படித்தான் புலப்படுவார்களோ – நுண்ணாடியைவிட, அவர் கண்ணாடி அணியாதவர் என்பது மிக முக்கியமானது.
அதேபோன்று, ஒரு பெண் பேராசிரியை மட்டு மல்ல; அவர் ஒரு பெண் போராளி. அப்படிப்பட்ட பர்வீன் சுல்தானா அவர்களே,
வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் அவர்களே, தி.மு. கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களே, திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களே, தோழர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய தோழர்களே,
ஆண்களைவிட பெண்கள்
நன்றி உணர்வு அதிகம் உள்ளவர்கள்!
இது ஒரு புதுமையான நிகழ்ச்சியாக இருக்கிறது. நன்றியுரை என்று போட்டுவிட்டு, இரண்டு பேர் பெயரைப் போட்டிருக்கிறார்கள். ஆண் – பெண் என்ற வேறுபாடின்றி, சம உரிமையை வலியுறுத்துகின்ற இயக்கமாகும்.
இதில் என்ன ஒரு சிறு குறை என்று சொன்னால், ஆண்களைவிட, பெண்கள்தான் அதிகமாக நன்றி காட்டக்கூடியவர்கள்.
அடுத்த நிகழ்ச்சியிலாவது, மகளிர் பெயரை முன்னால் போட்டு, அதற்கடுத்து ஆண்கள் பெயரை போடவேண்டும்.
ஏராளமாக திரண்டிருக்கின்ற தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பொதுக்கூட்டத்தின் தலைப்பு ‘‘வற்றாத தமிழாறு – மகத்தான வரலாறு”
தமிழுக்குச் செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்!
எம் மொழி தமிழ் மொழி, செம்மொழி என்று தமிழுக்குப் கலைஞர் போராடினார் என்பதெல்லாம் முற்பகுதி. ஆனால், இதுவரை தமிழுக்கு ஆற்ற வேண்டிய – தர்க்கபூர்வமாக – உலக அளவில், தமிழ் மொழி மதிக்கப்படக் கூடிய மொழியாக நம்முடைய மொழியை ஆக்கிய பெருமை கலைஞரையே சாரும்.
காரணம், தமிழ் வாழவேண்டும் என்று கொடி பிடித்தார். தமிழ்க் கொடி பிடித்தார்.
‘‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்!
நீ தேடி வந்த நாடல்ல இது!” என்று பாவலர் பாலசுந்தரம் எழுதிய பாட்டு.
அதை மாணவப் பருவத்திலேயே ஒலித்துக் கொண்டு வேகமாகப் போனார் கலைஞர் அவர்கள்.
அப்படிப்பட்ட தமிழ் மொழியை அவர் எப்படிக் கையாண்டார் என்பதைப்பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்.
சமஸ்கிருதத்திற்குச் செம்மொழி தகுதி
வந்தது எப்படி?
கலைஞர் அவர்கள் அதிகம் படிக்காதவர். ஆனால், கடுமையான உழைப்பு. அவருடைய படைப்பாற்றல். அதனால்தான், கலைஞர் என்ற ஒரு சொல்லையே அவர் தமக்குச் சொத்தாக ஆக்கிக்கொண்டார். உலகம் அதை அங்கீகரித்தது.
கலைஞர் என்றால், நிறைய கலைஞர்கள் இருந்தார்கள். ஆனால், பெரியார் என்றால் எப்படி ஒருவரோ – அறிஞர் என்றால், எப்படி அண்ணா ஒருவரோ – அதுபோல, கலைஞர் என்றால், கலைஞர் கருணாநிதி அவர்கள்தான் என்பது உலக அரங்கிலே ஒப்புக்கொள்ளப்பட்டதாகி விட்டது.
அப்படிப்பட்ட வற்றாத தமிழாசானாக அவர் விளங்கினார். எம்மொழி செம்மொழி என்ற பெருமை யோடு தமிழ்மொழி இன்றைக்கு இருக்கிறது என்றால், அதனைப் பெற்றுத் தந்த பெருமை கலைஞரையே சாரும்.
அன்றைக்குத் தமிழ்மொழிக்கு செம்மொழி தகுதி யைப் பெற்றுத் தந்தார். இதனை நாம் பரப்பவேண்டும்.
தமிழ் மொழியை செம்மொழியாக்கி, அதி காரப்பூர்வமாக ஆக்கினார்.
அதுவரையில் ஒரு நிலை என்னவென்றால், சமஸ்கிருத மொழியான வடமொழிதான் செம்மொழி யாக உள்ளது என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், அது அதிகாரப்பூர்வமான உண்மையல்ல. தமிழ் செம்மொழி தகுதி கிடைத்தபொழுதுதான், ஓர் உண்மை வெளியில் வந்தது.
வழிபாட்டு மொழியாக தமிழ்!
சமஸ்கிருத மொழியை தேவ பாஷை என்று சொன்னார்கள். அதுவரையில், தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்புப் பலகை வைத்திருந்தார்கள். கலைஞர் அவர்கள் முதலமைச்சரானவுடன், அந்த ‘உம்’ என்பதை எடுத்தார்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற கடவுள்களுக்குத் தமிழ் தெரியாதா? என்று பெரியார் கேட்டார். தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? என்று கேட்டார் கலைஞர்.
தமிழ் மொழி தெரியவேண்டும். ஆகவேதான், தமிழில் அர்ச்சனை என்று கொண்டு வந்தார்.
அந்தத் தமிழ் மொழி செம்மொழி தகுதியைப் பெற்றபொழுதுதான், சமஸ்கிருத மொழிக்கும் செம்மொழி தகுதி கொடுக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
அதுவரையில், தேவபாஷை என்று சொல்லக்கூடிய சமஸ்கிருதம் செம்மொழி தகுதி பெறவில்லை என்ற உண்மை வெட்ட வெளிச்சமானது.
தமிழ்மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்த ஓராண்டிற்குப் பிறகுதான், சமஸ்கிருத மொழிக்கு செம்மொழி என்ற தகுதி கிடைத்தது. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை முதன்முதலில் வாங்கிக் கொடுத்தது யார்? கலைஞர் அவர்கள்தான்.
‘‘நெல்லுக்கு இரைத்த நீர், வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் அங்கே பொசியுமாம்” – ஆம்! தமிழ் மொழிக்குக் கிடைத்த செம்மொழி தகுதியால், வடமொழியான சமஸ்கிருத மொழிக்கும் செம்மொழி தகுதியைப் பெற்றது.
அடுத்தபடியாக, கலைஞர் அவர்களைப் பார்த்து, செய்தியாளர்கள் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்து, இப்பொழுது கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்!” என்று மார்தட்டியவர் கலைஞர்!
‘‘உங்களை ஒரு வரியில் சுய விமர்சனம் செய்துகொள்ளுங்கள். உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்துகொண்டால், என்ன சொல்வீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அந்தக் கேள்விக்கான பதிலை சொல்வ தற்குக் கொஞ்சம் கூட யோசிக்காமல், ‘‘மானமிகு சுயமரி யாதைக்காரன்” என்றார்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்பதைப்பற்றி- ஒரு நாள் அல்ல, மூன்று நாள்கள் பேசலாம்.
இதுவரையில், மாண்புமிகு என்றுதானே சொல்வார்கள். மானமிகு என்று சொல்கிறீர்களே, என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
உடனே கலைஞர் அவர்கள், ‘‘மாண்புமிகு என்பது வரும், போகும். அதனை சட்டம் போட்டுக்கூட தடுக்க லாம்; ஆனால், மானமிகு என்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுவும் சுயமரி யாதைக்காரர்களிடமிருந்து பறிக்கவே முடியாது” என்றார்.
அந்த சுயமரியாதை இருந்த காரணத்தி னால்தான், தமிழுக்கு செம்மொழி என்ற உரிமை அவரால் பெற்றுத் தரப்பட்டது.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்!
அந்த சுயமரியாதை இருந்த காரணத்தினால், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லி, என் தந்தைக்கு இறுதி மரியாதையாக அரசு மரியாதையை செலுத்துகிறேன் என்று சொன்ன பொழுது, மானமிகு சுயமரியாதைக்காரராக இருந்த கலைஞர் அவர்களிடம், அதிகாரிகள் சொல்கிறார்கள்.
‘‘நீங்கள் இப்பொழுதுதான் அண்ணாவிற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறீர்கள். பெரியாருக்கு அரசு மரியாதைக் கொடுத்தால் சிக்கல் ஏற்படுமே? என்று சொன்னார்கள்.
சரி, என்ன சிக்கல் வரும்? என்று கலைஞர் அவர்கள், அந்த அய்.ஏ.எஸ். அதிகாரியிடம் கேட்கி றார்.
நம்முடைய ஆட்சிக்கே ஆபத்து வரலாம் என்று அந்த அதிகாரி சொன்னார்.
அவ்வளவுதானே, ‘‘என்னுடைய தந்தைக்கு, கொள்கைத் தந்தைக்கு, அறிவுலக ஆசானுக்கு, குருகுல ஆசானுக்கு இறுதி மரியாதை – அரசு மரியாதையைக் கொடுப்பதால், என்னுடைய ஆட்சிக் கலைக்கப்பட்டால், அதைவிட பெருமை வேறு கிடையாது?” என்று சொன்னார்.
இதுதான் கலைஞர் அவர்களுடைய பெருமை.
ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிலிருந்து ஒருவரை விலகச் சொன்னாலே, வேறொரு கட்சிக்குப் போகலாம் என்று நினைப்பார்கள்.
ஆனால், ஓர் ஆட்சி – கிடைத்த ஆட்சி போவ தைப்பற்றி அவர் கவலைப்படவில்லை.
நெருக்கடி நிலையை எதிர்த்தவர்!
நெருக்கடி காலத்தில், எங்களைப் போன்றவர்கள் எல்லாம் மிசாவில் சிறைச்சாலையில் இருந்தோம். அப்பொழுது உருவானவர்தான், இன்றைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக, இந்தியா கூட்டணி வெற்றி வாகைச் சூடக்கூடிய அளவிற்கு வியூகம் வகுத்த நம்முடைய அருமை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் என்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஆவார்.
ஆகவே, அந்த நெருக்கடி நிலையை இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள். நீங்கள் அதற்கு ஆதரவு கொடுத்தால், உங்களுக்கு எல்லாவிதமான சலுகைகளும் கிடைக்கும் என்று கலைஞரிடம் சொன்னார்கள்.
கலைஞர் அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ‘‘நெருக்கடி காலம் என்பதை ஏற்க முடியாது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கிறதே தவிர, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக அல்ல – ஜனநாயகத்தை வீழ்த்துவதை, உரிமைகள் பறிக்கப்படுவதை ஒரு நாளும் நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம்” என்று தீர்மானம் போட்டு, பிரதமரால் அனுப்பப்பட்ட தூதுவரிடம், ஆட்சிப் போனால், பரவாயில்லை; என்னுடைய கொள்கை நிலைக்கட்டும் என்று சொன்ன, அந்த மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் காட்டிய துணிச்சல்தான், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர், இந்தியாவிலேயே சவால் விடக் கூடிய முதலமைச்சராக, சரித்திரத்தை உயர்த்திவிடக் கூடிய முதலமைச்சராக, இன்னுங்கேட்டால், ஆதிக்கவாதிகள் கலங்கக்கூடிய ஆட்சியை நடத்துகின்றார்.
அதன் காரணமாகத்தான், இதுவரையில் சாதார ணமாக இருந்த பிரதமர் மோடி, திடீரென்று ‘கடவுள் அவதாரமாக’ போய்விட்டார்.
எனவே, நெருக்கடி காலத்தில்கூட நின்றார் கலைஞர் அவர்கள்.
அதற்குப் பிறகு, ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தார். அதைப்பற்றியும் கலைஞர் அவர்கள் கவலைப்படவில்லை.
நண்பர்களே, ஆட்சியினுடைய சிறப்புகள், சாதனை களைப்பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தபோதும்
முத்திரை பொறித்தவர் கலைஞர்!
ஒரு மிகப்பெரிய பதவியில் இருந்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவராக மறுபடியும் மாறும்பொழுது, ஓர் எட்டாண்டு காலத்திற்கு மேலாக அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார் என்று சொன்னால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுதும் அவர் முத்திரைப் பதித்தவர். ஆளுங்கட்சி யாக இருந்தபொழுது மட்டும் முத்திரைப் பதித்தவர் அல்ல.
அதனால்தான் அவர் மானமிகு சுயமரியா தைக்காரர்.
மானமிகு சுயமரியாதைக்காரர் போட்ட சட்டம்தான், அதுவும் தாய்மார்களே, சகோதரிகளே, உங்களுக்கு நகை வாங்கிக் கொடுத்தார்களா? நட்டுவாங்கிக் கொடுத்தார்களா என்று நீங்கள் சண்டை போடுகிறீர்களே உங்கள் வீட்டுக்காரரோடு – அதைவிட உங்களுக்குச் சொத்தில் பங்கு இருக்கிறதா? என்று அக்கறையோடு கேட்டு, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்த மாபெரும் தலைவர் – அந்த மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள்தான். பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று கொண்டு வந்த சட்டத்தை அன்றைக்குத் தோற்கடித்தார்கள்.அந்த சட்டத்தை மறுபடியும் கொண்டு வந்து, டில்லியின் வாய்ப்பைப் பெற்று, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அந்தச் சட்டத்தை நிறைவேற்றும்படி செய்தவர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்கள்.
மகளிருக்குச் சொத்துரிமை சட்டம்
கொண்டு வந்தவர்
அதனால், தகப்பன் சொத்தில், ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அதே உரிமை பெண்களுக்கும் உண்டு என்றாக்கி, அம்பேத்கருடைய கனவையும், பெரியாருடைய திட்டத்தையும் சட்டமாக்கிய பெருமை – ஒன்றிய ஆட்சியில் சட்டமாக்கிய பெருமை – மானமிகு சுயமரியாதைக்காரர் – நூற்றாண்டு நிறைவு விழா நாயகர் கலைஞர் அவர்களைத்தான் அந்தப் பெருமைச் சேரும்.
எனவே, இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். காலம் இடந்தராது; காலத்தை வென்றவர் அவர்.
உடல் ஊனமுற்றவர்களை ‘‘பிசிக்கலி ஹாண்டிகேப்” என்று சொன்னார்கள். அந்த வார்த்தையைக் கேட்டால், அவர்களின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.
ஆகவே, அவர்களுக்குக் கலைஞர் அவர்கள் என்ன பெயர் கொடுத்தார் தெரியுமா?
‘‘மாற்றுத் திறனாளி!” என்று.
சுயமரியாதைக்காரர் என்றால் என்ன பொருள் தெரியுமா?
என் சுயமரியாதை மட்டும் முக்கியமல்ல; உங்கள் சுயமரியாதையையும் நான் காப்பாற்றுவது மிகவும் முக்கியம்.
பெரியார் அவர்கள் அமர்ந்திருந்த மேடையில், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவர், கால்மேல் கால் போட்டிருந்தார். அதைக் கவனித்த ஒரு கழகத் தோழர், கால் மேல் கால் போட்டிருந்தவர் அருகில் சென்று, அவருடைய காலை நகர்த்துவதுபோன்று கையைக் கொண்டு சென்றார்.
அதைப் பெரியார் அவர்கள் கவனித்துவிட்டு, ‘‘இங்கே வாருங்கள்!” என்று அழைத்தார்.
என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார்.
‘‘அய்யா உங்கள் முன் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருக்கிறார். அதனால், அவருடைய காலை சரியாக வைக்கலாம் என்று சென்றேன்” என்றார்.
‘‘ஏம்பா, நாமெல்லாம் சுயமரியாதைக்காரர்கள்தானே! கால் அவருடையது. அவருடைய காலை, அவருடைய கால்மேல் போட்டிருக்கிறார். என் கால்மேல், அவருடைய காலைப் போட்டிருந்தால்தானே தவறு” என்றார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு ஓர் ஆணையத்தை அமைத்தவர் கலைஞர்!
அதுதான் சுயமரியாதை. மானமிகு சுயமரியாதைக்காரர் என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், நான் மட்டும் சுயமரியாதைக்காரனாக இருந்தால் போதாது. என்னுடைய சகோதர, சகோதரிகளுக்கும் அந்த மான உணர்ச்சி வரவேண்டும்.
அந்தக் காலத்தில், ‘‘குற்றப் பரம்பரையினர் ஜாதி” என்ற ஒரு பிரிவை வைத்திருந்தார்கள். நாள்தோறும் மாலையில் சென்று காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவேண்டும். கைரேகை வைக்கவேண்டும்.
நீதிக்கட்சி ஆட்சியில்தான் பொப்பிலி அரசர்தான் அந்த நிலையை மாற்றினார்.
முதன்முதலில் இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஓர் ஆணையத்தை உருவாக்கிய பெருமை கலைஞர் அவர்களையே சாரும்.
அதற்கு முன், பிற்படுத்தப்பட்டவர்களுக்காக தனியாக ஆணையம் கிடையாது.
ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களைக் குற்றப்பரம்பரையினர் என்று சொல்லப்பட்டு இருந்ததை, ‘‘சீர்மரபினர்” என்று அழகாக மாற்றினார்.
தியானம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா?
எனவே, மானமிகு சுயமரியாதைக்காரருடைய நூற்றாண்டு – பல நூற்றாண்டுகளைத் தாங்கும், தாண்டும். அந்த நூற்றாண்டு சூரியன் – உதயசூரியனைக் கண்டு, நமது முதலமைச்சரைக் கண்டு, வடக்கில் உள்ள சிலர் அஞ்சி நடுங்குகின்றனர். இப்போதும் உதயசூரியன் தகித்துக் கொண்டுதானிருக்கிறது. அந்த வெப்பம் ஜூன் 4 ஆம் தேதிக்குப் பின் தான் தணியும். சிலர் அந்த வெப்பம் தாங்காமல் தியானம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எல்லோரையும்கூட தமிழ்நாடுதான் காப்பாற்றுகிறது. தியானம் வேண்டுமா? திராவிடம வேண்டுமா?
நமக்கு தமிழ்நாடு வேண்டும் – திராவிடம் வேண்டும் – கலைஞர் ஒரு நூற்றாண்டல்ல – அவரின் தொண்டும், புகழும்! பல நூற்றாண்டு வாழ்க, வளர்க!
இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!
நன்றி, வணக்கம்
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.