புதுடில்லி, ஜூன் 4- பருவநிலை மாற்றத்தால் கோடைகாலம் முடிவடைந்த பின்பும் வட மாநிலங்களில் வெயில் மிக அதிக அளவில் தாக்கி வருகிறது. டில்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, அரியானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டிகர், மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 45 முதல் 50 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் மிரட்டி வருகிறது.
டில்லியின் ஒரு சில பகுதிகள், ராஜஸ்தானின் பலோடி, மகாராட்டிராவின் சில பகுதிகளில் 53 டிகிரி அளவில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் வீடுகளிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்து வருகின்றனர். வடமாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.
200-அய்த் தாண்டியது
இந்நிலையில், பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், 31.5.2024 அன்று 54 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து 1.6.2024 அன்று மாலை நிலவரப்படி வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உண்மையில் வட மாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-அய்க் கடந்துள்ளதாகவும், சரியாக கணக்கிடப்படாததால் உயிரிழப்பு எண்ணிக்கை 100க்குள் இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.
பாஜக ஆளும் ராஜஸ்தானில் மட்டும் வெப்ப அலை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆளும் பாஜக அரசு இதனை மறைத்து வருவதாக அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதன்காரணமாகவே ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, வெப்ப அலையை சமாளிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.
27 தேர்தல் அலுவலர்கள் உயிரிழப்பு
7 கட்டமாக நடைபெற்ற 18ஆவது மக்களவை தேர்தலின் கடைசி கட்டத் தேர்தல் 1.6.2024 அன்று நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற பகுதிகள் அனைத்தும் வடமாநிலங்கள் என்ற நிலையில், தேர்தல் பணிக்கு வந்த அலுவலர்கள் வெப்ப அலையை தாங்க முடியாமல் வாக்குச்சாவடி மய்யங்களிலேயே சுருண்டு விழுந்தனர். சனியன்று மாலை 4 மணி நிலவரப்படி 27 தேர்தல் அலுவலர்கள் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாப்பூரில் 15 தேர்தல் அலுவலர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் வெப்ப அலையால் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் 100க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்துள்ள நிலையில், 600க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலா னோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே போல உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெப்ப பக்கவாதத்தால் 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் 1200 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்புகளை கண்டுகொள்ளாத பா.ஜ.க. மாநில அரசுகள்
இந்திய வானிலை மய்யம் ஒவ்வொரு 4 மணிநேரமும் வெப்ப அலை தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
டில்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மக்களுக்கு எச்சரிக்கையையும், வேலை நேரத்தை மாற்றியும், பல்வேறு மக்கள் நலன் எச்சரிக்கை விதிகளையும் செயல்படுத்தியுள்ளன. ஆனால் பாஜக ஆளும் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை பற்றி எச்சரிக்கையோ, எச்சரிக்கை விதிகள் தொடர்பான உத்தரவோ எதுவும் பிறப்பிக்கப்பட வில்லை.
இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் வெப்ப அலையின் பாதிப்பு உச்சத்தில் உள்ளன.
மோடியின் “ஏசி அறை தியான காணொலி” தான் முக்கியமாம்!
பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் கன்னியாகுமரியில் 45 மணிநேர தியானம் என்ற பெயரில் வெள்ளி, சனி ஆகிய 2 நாட்களில் தனது அரசியல் ஆதாயத்திற்காக சிறப்பு ஷூட்டிங் நடத்திக் கொண்டார்.
வட மாநிலங்கள் பாலைவன பூமியாக கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், வெப்ப அலையில் இருந்து மக்களை காக்க மோடியின் கட்சியான பாஜக ஆளும் மாநிலங்கள் எதுவும் செய்யவில்லை.
குறிப்பாக பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மோடியின் தியான காணொலிகளுக்கு சமூகவலைத் தளங்களில் விருப்பங்களை தெரிவித்து, பகிர்ந்து பிரபலமாக்கும் வேலையை மட்டுமே கவனித்துள்ளனர்.
அதாவது வெப்ப அலையால் மக்கள் மடிந்தால் என்ன ஏசி அறையில் தியானம் செய்த மோடியின் காணொலி மட்டுமே முக்கியம் என பாஜக ஆளும் மாநில அரசுகள் தங்களின் இழிவான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.