ஜெய்ப்பூர், ஜூன் 1 ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மாநிலத்தில் வெப்ப அலைக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊடகங்களில், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாகவே உயிர்பலி நேரிட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனூப் குமார் தாந்த் அமர்வு, தமாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்ற நிலையில், வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய பேரிடராக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கருத்துத் தெரிவித்துள்ளது. வெப்ப அலையில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம், மாநில முதன்மை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்குமாறும் வலியுறுத்தியிருக்கிறது.