வண்டலூர், ஜூன் 1- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.
நெரிசலை குறைக்கும் வகையில்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிளாம்பாக்கம் பேருந்து நிலை யம் கடந்த 30.12.2023 அன்று திறந்து வைக்கப்பட்டு, தற்போது முழு வீச்சில் இயங்கி வருகிறது.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற வகையில், தேவையான வசதிகள் ஏற்கெனவே ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள நிலையில், பேருந்து நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிகளின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், இனிமையான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு, பல்வேறு கூடுதல் பணிகளும்சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயர்மட்ட மேம்பாலம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலையை கடந்து சென்னை மார்க்கமாக செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் தற்போது அயனஞ்சேரி சந்திப்பு வரை சென்று ‘U’ வடிவ வளைவில் திரும்பி, சென்னை நோக்கி சென்று வருகின்றன. இதனால் தேவையற்ற கால விரயமும், போக்குவரத்து நெரிசலும் அங்கு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஜி.எஸ்.டி சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக ஒரு உயர் மட்ட மேம்பாலம் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தற்போது விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதற்கு தற்காலிக தீர்வாக சென்னை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகளை எளிதில் கையாளும் வகை யில் தற்போதைய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநகர பேருந்துகள் மாநகர பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே ஜி.எஸ்.டி.. சாலையை கடந்து எளிதாக சென்னை செல்ல இயலும். மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலின் போது செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கத்தை நோக்கி வரும் பேருந்துகள் வண்டலூர் சந்திப்பு வரை சென்று திரும்புவதை தவிர்த்து புதிதாக அமைக்கப்படும் மேற்கண்ட பணிகளின் மூலம் எளிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்றடையவும் வசதிகள் ஏற்படுத்தப்படும். – இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.