விடுதலை’ நாளேடு துவக்கப் பெற்றது 1935இல். அது துவக்கப் பெற்றதிலிருந்து அதற்கு ஆசிரியர்களாகப் பல்வேறு சிறப்பான சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் தங்கள் தொண்டினை அதற்கு அளித்துள்ளனர். அந்த நீண்ட வரிசையில் டி.ஏ.வி.நாதன், பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை, அ.பொன்னம்பலனார், என்.கலிவரதசாமி, சாமி. சிதம்பரனார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் என்கிற பெருமக்களைப் பார்க்கையில், நான் மிகமிகச் சாராணமான எளியவன். எனக்குள்ள ஒரே தகுதி எனது சிறு பிராயம் முதல் வேறு கொள்கையோ, தலைமையோ, கொடியோ, இயக்கமோ அறியாமல் இன்றளவும் பெரியாரின் மாணவனாகவே என்னைக் கருதிக்கொண்டு வரும் இயக்கத்தின் தொண்டன் என்பதே ஆகும்!
அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோட வாய்ப்பு, ‘விடுதலை’க்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்றவுடன் எனக்குத் தொய்வின்றித் தொடர்ந்து கிடைத்தது; எனது வாழ்வின் திருப்பமாகவும் அது அமைந்துவிட்டது!
பல பெரிய அறிஞர்கள் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினர் என்ற போதிலும் கூட, தந்தை பெரியார் அவர்கள்தான் உண்மையான ஆசிரியர்; உண்மையான நிர்வாகி.
ஒவ்வொரு முறையும் அதற்கு நிதி ‘மூச்சுத் திணறல்’ ஏற்படும் போதெல்லாம், நிதி உதவியை அளிப்பது, ஆதரவு குறையும் போது இயக்கத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அதிகமாக அது பரப்பப்பட செயல்முறைத் திட்டம் என்ற ‘ரத்தம் கொடுத்து’ அதன் ரத்தச் சோகையை நீக்கியது எல்லாம் அய்யாவின் அருஞ்செயலேயாகும்.
எந்த ஒரு நாளேட்டையும்- அப்பட்டமான கொள்கை நாளேடாக நடத்துவது எளிதான பணியல்ல. அதிலும் பாமர மக்கள் பெரிதும் சுவைத்து எதிர்நோக்கும் சினிமா, சோதிடம், பரபரப்பூட்டும் அக்கப்போர்ச் செய்திகள்- இவைகளைப் போடாமல் செய்தி ஏடுகள்-, நாளேடுகள் வெற்றிகரமாகவோ, லாபகரமாகவோ நடத்திடவே முடியாது என்பது அனுபவங்களில் கண்ட உண்மையாகும்!
மிகமிக வசதி படைத்த கட்சிக்காரர்களால் கூட கட்சி- – இயக்க நாளேடுகளை நடத்தி வெற்றி பெற முடியாமைக்கு மேற்சொன்ன லட்சியப் பிடிப்பே காரணமாகும்!
‘விடுதலை எப்படியோ அய்யா அவர்கள் அந்தக் காலத்து நீதிக்கட்சி ‘ஜஸ்டிஸ் கட்சி’- புரவலர்களான பொப்பிலி அரசர், ராஜா சர் முத்தய்யா, சர்.ஆர்.கே.சண்முகம் போன்றவர்களது ஆதரவினையெல்லாம் பெற்று, தனது உழைப்பு, பொருள் ஆகியவைகளையும் போட்டு இயக்கப் பிரச்சாரத்திற்கு ஒரு அருமையான போர்க் கருவியை ‘தமிழ் மக்களின் உரிமைப் போர்வாளாக- – கேடயமாக தயாரித்துத் தந்தார்.
பொது வாழ்வில் ஈடுபடும் எவரும் ‘மானம் பாராது’ தொண்டு செய்ய வேண்டும் என்று இலக்கணம் கூறுவார் தந்தை பெரியார் அவர்கள். அதை அவர்கள் பிறருக்கு மட்டும் ‘உபதேசமாக’ச் செய்து சென்ற தலைவர் அல்லர். எதைச் சொன்னாலும் அதைத் தனது வாழ்நாளில் கடைப் பிடித்த ஒரு லட்சியத் தலைவர். அதற்கு இதோ ஒரு சான்று பகரும் கடிதம். (‘விடுதலை’யை- அதன் மூலம் இயக்கத்தினை வாழ வைக்க அவர்பட்ட துன்பம், எடுத்த மான அவமானம் கருதாத ‘பிச்சை’, நம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
அய்யா அவர்களது தியாகம், தகுதி, செல்வச் செழிப்பு, ஊர்ப் பெரிய தனக்காரர் அந்நாளில் என்ற நிலை, காங்கிரசில் காந்தியார் போன்ற தலைவர்களும், ஆச்சாரியார் போன்றவர்களும் “Head and Active Master) (இது ராஜாஜி பெரியார் பற்றிப் பயன்படுத்திய வார்த்தைகள்) என்று கூறத் தக்கவராகத் திகழ்ந்தவர். சமூகநீதிக்காக, சுயமரியாதைக்காக அதனை ஓர் நொடியில் தூக்கி, புத்தர் அரண்மனைப் பந்தத்தைவிட்டு வெளியேறியது போல, மக்களோடு மக்களாக வந்து பாடுபடத் தொடங்கி, தான் கொண்ட கொள்கையை நிலை நாட்ட எப்படியெல்லாம் பயன்பட்டிருக்கிறார்கள் என்ற வரலாறு இன்றைய தலைமுறைக்கும் இனி வருவோருக்கும் தெரிய வேண்டாமா?
‘சுதந்திர இந்தியாவின்’ முதல் நிதி அமைச்சர் என்ற பெருமைக்குரியவர் கோவை ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) அவர்கள். ஒட்டாவா (கனடா) சர்வதேச நிதி நிபுணர்கள் மாநாட்டில் அவர் ஆற்றிய உரை உலக நிபுணர்களில் அவரை ஒருவராக அனைத்துலகப் பொருளாதார வல்லுனர்களால் ஒப்புக்கொள்ளச் செய்தது.
அவர் ஒரு காலகட்டத்தில் சுயமரியாதை இயக்க, நீதிக் கட்சியின் தொட்டிலில் தாலாட்டப்பட்டவர்தான் என்பது பலருக்கு தெரியாது! அவருக்குத் தந்தை பெரியார்
அவர்கள் எழுதிய ஓர் கடிதம் இதோ:-
ஈரோடு
2.9.1937
அன்புள்ள நண்பர் அவர்களுக்கு, வணக்கம்.
விடுதலை தினசரிப் பத்திரிகை தினம் 5000 பிரதி வெளியாகின்றது. விடுதலைக்கு பண உதவி செய்வதாய் வாக்களித்த தோழர்கள் வெங்கிடகிரிராஜா மாதம் 50/-சர். பி.டி.ராஜன் மாதம் 50/- மற்ற 4 தோழர்கள் மாதம் 25/- வீதமாக மாதம் 200 ரூபாய் வீதம் எதிர்பார்த்தும் வரவில்லை. எழுதிய கடிதங்களுக்கும் தந்திகளுக்கும் பதில் கூட இல்லை. பத்திரிகை நடத்துவதில் எவ்வளவு சிக்கனமாக நடத்தியும் மாதம் 500 வீதம் நஷ்டமாகிறது. இனி நஷ்டம் அதிகமாகுமே தவிர குறையாது. காலை ஏழரை மணிக்கு ஆபீசுக்கு வந்தால் இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போகிறேன். இதன் மத்தியில் சுற்றுப் பிரயாணம்.
இந்த நிலைமையில் ரோஷம் என்னை அடிமையாக்கிக் கொண்டு இந்த மாதிரித் தொல்லையில் இறக்கி விட்டது. முன்பு திராவிடனை ஏற்று நடத்தியதில் திராவிடன் கடன்கள் என்னைத் தொல்லைப்படுத்தி சுமார் 4000 ரூபா வரை டிகிரிகளுக்கும் நான் அதற்காக வாங்கின கடன்களுக்கும் கொடுத்தேன். கோர்ட் செலவு 2000 ரூபாய் செய்து குமாரசாமி நாயுடு (ஜெயராம் நாயுடு) கேசில் தப்பினேன்.
இவ்வளவுக்கும் இயக்கத்தின் மூலமோ கட்சியின் மூலமோ நான் அடைந்த பலன் ஏதாவது உண்டா என்பது தங்களுக்கு தெரியும். கவுரமாகக் கூறி ராசியாகப் போவதற்கு இராஜ கோபாலாச்சாரியார் மூலம் முயற்சிக்கிறதில் பிடிவாதமாய் இருந்து விட்டேன். இன்று சொந்த சினேகித முறையில் கட்டுப்பட தங்களைப் போன்ற இரண்டொருவர்களைத் தவிர கட்சி விஷயமாகப் பேசக்கூட எனக்கு ஆதரவில்லை. ஜஸ்டிஸ் கட்சிக்காகவே சுயமரியாதை வேகத்தையும் குறைத்துக் கொண்டேன். 7000 பிரதிகள் போய்க் கொண்டிருந்த குடியரசு 2000 தான் போகிறது. இதற்கும் மாதம் 100, 200 நஷ்டம் ஆகிறது. புத்தக விற்பனையால் ஒரு விதத்தில் சரி ஆகிறது. காசு பணம் எதிர்பார்த்து இவற்றை நான் எழுதவில்லை. நிலைமை இப்படியே இருந்தால் என் நிலைமை என்ன ஆவது? கட்சி நிலைமைதான் என்ன ஆவது? விட்டுப்பிரிய முடியாத மாதிரி சிக்கிக் கொண்டேன். எப்படி விலகுவது அல்லது எப்படிச் சமாளிப்பது என்பதற்குத்தான் ஒரு வழி வேண்டும்.
சர்.மகம்மது உஸ்மான் அவர்கள் காங்கிரசை ஆதரிக்கப் புறப்பட்டு விட்டார். அதற்கு காங்கிரசு மந்திரிகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்கிறார். பலரை காங்கிரசில் சேர்த்து விட்டார். பொப்பிலி ராஜா அவர்கள் என் தொந்தரவுக்காக ஏதாவது செய்ய ஆசைப்படுகிறார். மற்றபடி ஒரு முயற்சியையும் காணோம். இவைகளை தயவு செய்து கவனித்துப் பார்த்து ஏதாவது யோசனை சொல்லுங்கள்.
தங்கள் அன்பான
ஈ.வெ.ராமசாமி
சர்.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் அவர்கள்,
எர்ணாகுளம்
கடிதம்
மேலே காட்டிய கடிதம் எப்படியெல்லாம் வியர்வையை, ரத்தத்தினை, பொருளை, ‘மான மரியாதையை’ச் செலவழித்துத் தந்தை பெரியார் அவர்கள் இந்தத் திராவிட இயக்கத்தினை- – அதன் நாளேட்டினைக் கட்டி வளர்த்தார் என்பதைப் புரிய வைக்கும்.
அந்த நிலையில், சிந்தாதிரிபேட்டையில் 2, பாலகிருஷ்ணப்பிள்ளைத் தெருவில்தான் பல ஆண்டு காலம் ‘விடுதலை’ அலுவலகம் இருந்தது. அதற்கு முன்பு அண்ணா சாலைப் பகுதியிலும் கூடத் தற்காலிகமாக இருந்துள்ளது!
ஒரு பெரிய ‘குடோன்’ போன்ற அந்தக் கொளுத்தும் தகரக் கொட்டகை அல்லது சீமை ஓடு கொட்டகையின் முன்புறம் ஓர் அறை; அதில் தான் அய்யா வந்தால் அமர்ந்து எழுதுவார். நிர்வாகி இருப்பார். மற்றபடி, பயங்கர மெஷின் ஓடும் சத்தம்- – ஆசிரியர் பகுதி- – மடித்துப் பார்சல் அனுப்பும் பகுதிகள் எல்லாம் ஒரே இடத்தில் அடுத்தடுத்துத்தான். எதிரே உள்ள ஓர் தோழரின் தேநீர்க் கடையில், கருத்துப் போன கண்ணாடி கிளாசில் தான் எவருக்கும் ‘தேனீர் விருந்தளிப்பு’ என்பது அங்கே வாடிக்கை!
தேவகோட்டை நகரத்தார் ஒருவர்க்குச் (மெய்யப்பச் செட்டியார்) சொந்தமான அந்தக் கட்டிடத்திற்கு 5 ரூபாய் வாடகையிலிருந்து நான் பொறுப்பேற்ற போது, 1962-இல் 30 ரூபாய் மாத வாடகையாக உயர்த்தப்பட்டது.
பக்கத்துப் பகுதியில் உள்ள ஆதிதிராவிட சமுதாயத் தோழர்கள் அனைவரும் ‘விடுதலை’யின் நெருங்கிய உறவினர்கள்-, பாதுகாவலர்கள். துணை மேயராக இருந்து மறைந்த கபாலமூர்த்தி உட்பட!
நான் பொறுப்பேற்றுச் சில மாதங்களில் வாடகையை உயர்த்திட வேண்டும் என்பதற்காகவோ வேறு ஒருவருக்கு புதிதாக திருத்திக் கட்டி வாடகைக்கு விட்டால் பல மடங்கு அதிக வாடகை கிட்டும் என்பதாலோ, வெளியேறும்படிப் பத்திரிகை உரிமையாளர் அம்மா, ஈ.வெ.ரா.மணியம்மையார் மீது கட்டிட உரிமையாளர் வழக்குத் தொடுத்தார். வழக்கினை அன்று பிரபல வழக்கறிஞரான திரு. பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் (பின்னாள் அவர் தலைமை நீதிபதியானார்) அவர்கள்தான் அய்யா சார்பில் நடத்தினார்.
கட்டிடத்தினை உடனடியாகக் காலி செய்ய வேண்டாம் எனவும், மாதம் 30 ரூபாய் வாடகையை 90 ஆக உயர்த்தித் தரவேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்புக் கூறி விட்டார்!
இதற்கே விடுதலை அலுவலக நிர்வாகி, ஆசிரியர் ஆன நாங்கள் எல்லோரும் அய்யாவின் கடுமையான கண்டனம், கோபத்திற்கு ஆளானோம்; வேறுவழியில்லை.
குறிப்பிட்ட காலம் சென்ற பிறகு காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றே அப்பீலிலும் தீர்ப்பு – கட்டிடக்காரருக்கு வாய்ப்பாக வந்து விட்டது!
ஏற்கெனவே பழைய டிராம் ஷெட் பகுதியை கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் அவரது நெருங்கிய பிரதிநிதி நண்பரான கே.ஜி.லட்சுமிபதி அவர்கள் மூலமாக (இன்று பிரபல காண்ட்ராக்டர் அவர்) விலைக்கு வாங்கினார்கள். முன்பகுதி (அன்றைய பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதி) அவர் வைத்து, நடுப்பகுதியை வான்கார்டு இன்ஷுரன்ஸ் அதிபர் எச்.டி.ராஜா அவர்களுக்கும் உள் பகுதி தந்தை பெரியாருக்கும் என வாங்கப்பட்டது!
பிறகு ‘தினத்தந்தி’ நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அந்த நடுப்பகுதியை, எச்.டி.ராஜா அவர்களிடமிருந்தும் பிறகு ஜி.டி.நாயுடு அவர்களிடமிருந்து மற்றொரு பகுதியையும் வாங்கி இன்றைய ‘தினத்தந்தி’, ‘ராணி’, ‘மாலை மலர்’ அலுவலகக் கட்டிடப் பகுதிகளை உருவாக்கினார் என்பது இங்கே சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
அய்யாவுக்குரிய பகுதியையும் ஆதித்தனார் விலைக்குக் கேட்டார். அய்யா கொஞ்சம் யோசித்தார். அன்னை மணியம்மையார்தான் அதில் முழு உறுதியுடன் இருந்து, அது நம் இயக்கப் பணிகளுக்கே பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இடத்தைத் தக்க வைத்தார்கள். அங்கே ‘விடுதலை’ அலுவலகத்தினை அமைப்பது என்று முடிவாகி, அதற்காகக் கட்டிடம் எழுப்பிட அய்யா அவர்கள் ஏற்பாடு செய்து ஒப்பந்தக்காரரிடம் விடப்பட்டது. ஆனால், அது சரியாக நிறைவேற முடியாமல் ஒப்பந்தக்காரர் வழக்கு மன்றத்திற்குச் சென்று ‘சிக்கல்’ ஏற்பட்டது!
தற்போது ‘விடுதலை’ பணிமனை உள்ள கட்டிடத்தினைக் கட்ட திரு.கிருஷ்ணசாமி என்ற ஓர் ஒப்பந்தக்காரரிடம் பொறுப்பை ஒப்படைத்து, ஒவ்வொரு கட்டம் முடிந்ததும் அய்யாவிடம் அவர் பணம் பெறுவதாக ஏற்பாடு! இரண்டு, மூன்று கட்டங்கள் முடிந்து, ஏறத்தாழ முடிவடையும் கட்டத்தில் (ஒரே கீழ் பகுதி மட்டும்தான்) அதற்கு சென்னையில் ஒப்பந்தக்காரருக்கும், அய்யா அவர்களுக்கும் இணைப்புப் பாலம் போல் சென்னையில் தொகையைப் பெற்றுத் தந்த ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு ‘குத்தூசி’ குருசாமி அவர்கள், அக்கட்டத்தில் சில மாறுதல்களை கூடுதலாக- பிளானில் இருந்ததைவிட- சொல்லி, அந்த ஒப்பந்தக்காரரும் செய்துவிட்டு, மேற்கொண்டு கூடுதல் தொகையை அய்யாவிடம் கேட்டார்.
இதற்கிடையில், 1962-இல் விடுதலை ஆசிரியர் சா.குருசாமி அவர்களுக்கும், அய்யா அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வளர்ந்து, அவர் ‘விடுதலை’யை விட்டு விலகியதோடு, தனியே ‘குத்தூசி’ என்ற ஒரு மாத ஏட்டினையும் துவக்கி, சுயமரியாதைக் கொள்கையைப் பரப்பினாலும், அய்யாவை சாடை மாடையாகத் தாக்கி எழுதும் அளவுக்குச் சென்று விட்டார். ஒப்பந்தக்காரர் வழமை போல் திரு. குருசாமி அவர்களிடம் பணம் கேட்டார். அவர் கையை விரித்துவிட்டு, ‘எனக்குத் தெரியாது’ நீங்கள் நேரே பெரியாரிடமே போய்க் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று தயவு தாட்சண்யமின்றிக் கூறிவிட்டார். அவர் அய்யாவிடம் பணம் கேட்டபோது, கூடுதலாக தொகை கேட்கிறீர்களே ஏன் என்று அய்யா சொல்ல, குருசாமிதான் சில கூடுதல் மாற்றங்களைக் கட்டிடம் கட்டும்போது சொன்னார்! அதன்படிச் செய்தோம். அதற்குத்தான் இந்தப் பணம் என்றார்.
தந்தை பெரியார் அவர்கள் ‘என்னிடம் நீங்கள் நேரில் வந்து விவாதித்துப் பிறகு நாம் ஒப்புக்கொண்டபடியே தான் கட்டிடம் கட்டப்பட்டிருக்க வேண்டும். எனது ஒப்புதல் இன்றி நீங்கள் எப்படி மாறுதல் செய்யலாம்? அது சரியல்லவே என்று வாதிட்டார். அவரோ நான் குருசாமி அவர்கள் சொன்னபடி செய்துவிட்டேன் என்றார். இதன் விளைவாக ‘விடுதலை’ பணிமனை கட்டிடம் முடியும் தருவாய்க்கு வந்தும் கூட பூச்சு, தரை முதலியவை மற்றும் கழிப்பறை வசதிகள் கூட செய்யப்படாமல் அரை குறையாகவே நின்றுவிட்டன. இதில் ஓரிரு ஆண்டுகள் ஓடியது மட்டுமல்ல. அந்த ஒப்பந்தக்காரர் அய்யாவின் மீது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தனக்குச் சேரவேண்டிய பாக்கி தனக்குக் கிடைக்க வேண்டும் என்று வழக்கும் தொடுத்து விட்டார்.
அய்யா சார்பில் வழக்கினை நடத்திட பிரபல சிவில் வழக்கறிஞராக அப்போது விளங்கிய மயிலாப்பூர் திரு. டி.கே.சுப்ரமணியம் (பிள்ளையை) அவர்களை ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோகனின் ‘சீனியர்’ வழக்கறிஞர் ஆவார்!
அய்யா பெயரை சிவில் நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் கூப்பிட்டு, வழக்கு விசாரணை நடப்பது பற்றி எனக்கும் முக்கிய கழகப் பொறுப்பாளர்களுக்கும் சற்றே சங்கடமாகவே இருந்தது! ஆனால், அய்யாவிடம் சொல்லி வேறு வகையில் பரிகாரம்- சமாதானம்- காண எங்கள் அளவுக்கு அன்று இயலாத ஒருநிலை!
எனது மாமனார், மாமியார் (சிதம்பரம்–ரங்கம்மாள்) ஆகியவர்களிடம் அய்யாவுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரை (சிதம்பரம்) பெரியார் அறக்கட்டளைத் துணைத் தலைவராகவும், மாமியாரை அதன் உறுப்பினராகவும் தந்தை பெரியார் அவர்கள், திரு. தி.பொ.வேதாசலம், திரு.சா.குருசாமி ஆகியோரது விலகல் கடிதங்களைப் பெற்ற பிறகு போட்டார் என்றால் அவரது நம்பிக்கைக்குரியவர்களாக அவர்கள் இருந்ததற்கு அது ஒரு முக்கியச் சான்றாகும்.
அவர்கள் இருவரிடம் நானும் தோழர் நாகரசம்பட்டி சம்பந்தம் அவர்களும் ‘விடுதலை’ பணிமனைக்கான பெரியார் திடல் கட்டிடம் இப்படி முற்றுப் பெறாமல் இருக்கிறதே, மேலும் வழக்கு வேறு. இந்நிலை தவிர்க்கப்பட தங்களைப் போன்றவர்கள் தான் அய்யாவிடம் எடுத்துரைத்து மேலும் சிக்கலைத் தீர்க்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மேலும் பழைய, சிந்தாதிரிப்பேட்டை 2 பாலகிருஷ்ண பிள்ளைத் தெரு இடத்தினை ஓராண்டுக்குள் காலி செய்து கொடுத்து விட வேண்டுமென்று உயர்நீதிமன்ற ஆணை வந்துவிட்டது. அதில் தந்தை பெரியார் அவர்களுக்கு வழக்கறிஞர் – குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்ந்த திரு. பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் அவர்கள் ஆவார்கள்!
இதையெல்லாம் அய்யா அவர்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறிட, மேலே குறிப்பிட்டப்படி, எனது மாமனாரும், மாமியாரும் – அய்யா அவர்கள் திருச்செங்கோடு பயணியர் விடுதியில் தங்கியிருந்தபோது எடுத்துரைத்து, இந்த கட்டிடத்தை பூர்த்தி செய்யும் பொறுப்பினை ஏற்பதாகக் கூறி, பணச் செலவினைப் பற்றிக் கூட கவலை வேண்டாம். நாங்கள் பேசிக் கொள்கின்றோம் என்று கேட்டு, ஒரு வகையாக ஒப்புதலைப் பெற்றுத் தந்தனர். உடனே மகிழ்ச்சியோடு சென்னைக்கு தர்மபுரி வழியே லாரி மூலம் நானும், சம்பந்தம், பெண்ணாகரம் பி.கே.இராமமூர்த்தி ஆகியோர் திரும்பி உடனே வழக்கறிஞர் டி.கே.எஸ். அவர்களிடம் கூறி, சமாதானம் பேசச் செய்தோம். அவரும் அதை முழு மனதோடு ஏற்று, வழக்குப் போட்டவரிடம் சமரசம் பேசி உடன்பாடு கண்டார். அய்யா எதிர்பார்த்து சொன்ன தொகையைவிட (எனது அடையாறு வீட்டில் அய்யா தங்கியிருந்தார்; தொலைபேசி மூலம் ஒப்புதல் பெற்றோம்) ரூ.5,000/- அதிகம் கொடுக்க வேண்டிய நிலை, வழக்கறிஞர் டி.கே.எஸ். அவர்கள் அதற்கு அந்த ஒப்பந்தக்காரர் ஒப்புக் கொண்டது நமக்கு லாபமான முயற்சி என்று கூறி அய்யாவை ‘திருப்தி’ செய்ய முயன்றார். அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. ‘செக்’ கொடுத்துவிட்டு எங்களை கடுமையாக ரூபாய் 5000/- என்றால் அதன் அருமை உங்களுக்குத் தெரியவில்லையே! என்று கோபித்தார். உள்ளுக்குள் அய்யாவுக்கு பணியை முடித்தது குறித்து ஒருவகையான மகிழ்ச்சிதான் என்ற போதிலும் கூட!
நாங்கள் ‘அன்பான உரிமை வசவினை’ மகிழ்ச்சியோடு தாங்கிக் கொண்டோம். வேலை முடிந்து புதியக் கட்டிடம் இனி வரும் வாய்ப்பு எண்ணியே அம்மகிழ்ச்சி! திரு. என்.எஸ்.ஏகாம்பரம் பி.இ., அவர்கள் மேற்பார்வையில் எஞ்சிய பகுதி கட்டி முடிக்கப்பட்டது. அய்யாவும், அதனை முடிக்க எந்தவித மறுப்பும் கூறவில்லை.
புதிய பணிமனை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நான் ‘விடுதலை’ ஆசிரியர் என்ற முறையில் வரவேற்புரை ஆற்றினேன். ‘ஒருவருடைய இல்லம் தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் அங்கு ‘விடுதலை’ இருப்பதே என்று மொழிந்தார் தவத்திரு அடிகளார்!