கவிஞர் கரிகாலன்
செருப்புத் தைப்பவரின் மகன்
அய்.அய்.டி செல்கிறார்
மலம் அள்ளியவரின் பெயர்த்தி
மருத்துவம் படிக்கிறார்
சாமி கும்பிடவும்
அனுமதி மறுக்கப்பட்டோரின்
வாரிசுகள்
அதே ஆலயத்தில்
அர்ச்சகரானார்கள்
புரியாத மொழியில் பாட்டுக் கேட்ட
கடவுளின் செவிகளில்
மாணிக்கவாசகரும் அப்பரும்
தமிழில் பாடுகிறார்கள்
கூரையைப் பொத்துக் கொண்டு ஊற்றிய
நீரை அலுமினியக் கிண்ணங்களில்
சேகரித்தோரின் மழைக்காலம்
ஒருவழியாக முடிவுக்கு வந்தது
இவற்றுக்கெல்லாம் காரணம்
ஓர் இதழனெ அறிந்தபோது
அக்ரஹாரங்கள்
வேதப் புத்தகங்களை மூடி வைத்து
திருட்டுத்தனமாக விடுதலையைப்
படிக்கத் தொடங்கின
ஆங்கிலேயர்களாவது
தேசத்தின் அரியணையில்
அமர்ந்தார்கள்
ஆரிய மநுவோ
இந்திய மனங்களில் அமர்ந்து
ஆளத் தொடங்கினான்
ஆங்கிலேயரை எதிர்க்கத் துப்பாக்கி போதும்
ஆரியமோ மக்களுக்கு எதிராக
கடவுளை நிறுத்திப் போரிட வைத்தது
திரிசூலம் பசுபத அம்போடு
சிவன் நின்றார்
சங்கு சக்கரம் கதாயுதம்
நந்தகத்தோடு
மகாவிஷ்ணு நின்றார்
முப்பத்து முக்கோடி
தேவர்கள் நின்றார்கள்
வேதங்கள்
புராணங்கள்
ஸ்மிருதிகள்
சம்ஸ்காரங்கள்
ஏந்தி மநுப் படை நின்றது
எதிர்த்துப் போராட முடியுமா?
நிராயுதபாணியாக நின்ற
தமிழர் திகைத்தபோது
ஈரோட்டுப் பெருவீரன்
அவர்தம் கைகளில்
‘விடுதலையைக்’ கொடுத்தார்
கௌரவருக்கும் பாண்டவருக்கும்
நடந்த போர் ஒரு நாள் ஓய்ந்ததாம்
கலிங்கத்துப்போர் முடிவுக்கு வந்தது
பானிப்பட்டுப் போர்கூட முடிந்தது
உலகப்போர்கள் ஓய்ந்தன
ஆனாலும்
விடுதலை யுத்தத்துக்கு
முடிவே இல்லை
மௌண்ட் ரோடு
ஈரோடு
சிந்தாதிரிப்பேட்டை
பெரியார் திடலென
களம் மாறியது
இந்தி ஒழிப்பு
தேவதாசி முறை ஒழிப்பு
சமஸ்கிருத ஒழிப்பு
குலக்கல்வி ஒழிப்பு
சமூக நீதி
சுயமரியாதை
என்றும் களம் மாறியது
டி. ஏ. வி நாதன்
பண்டித எஸ். முத்துசாமிபிள்ளை
அ. பொன்னம்பலனார்
சாமி. சிதம்பரனார்
கா. ந. அண்ணாதுரை
குத்தூசி குருசாமி
மணியம்மை
கி. வீரமணியென
தளபதிகள் மாறினார்கள்
எதிரே மனு நின்றார்
கொஞ்சம் நாள் பிள்ளையார் நின்றார்
பிறிதொருநாள் ராஜாஜி நின்றார்
சிலகாலம் சத்தியமூர்த்தி நின்றார்
வேதமெழுதியோர்
பைனரி எழுத
சிலிகான் சென்றபிறகு
அண்ணாமலை கையில்
வாள் கொடுத்து அல்ல
மூளையில் நூலுடுத்தி
களத்தில் நிறுத்தியிருக்கிறார்கள்
ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும்
புதிய எதிரிகள் புதிய ஆயுதங்கள்
மலக்கூடை
இருந்த கைகளில் ஸ்டெத்தா?
சவரக் கத்தியெடுத்த கைகளில்
ஸ்கேல்பெல்லா?
‘நீட் ‘ ஏந்தி நின்றனர்
எதிரிகள்
அரியலூர் அனிதா
திருச்சி சுபஸ்ரீ
திருப்பூர் ரிதுஸ்ரீ
தருமபுரி ஆதித்யா
திருச்செங்கோடு மோதிலாலென
பதினாறு பேரை
இழந்தோம்
இதுவரை கோல்வால்கர்
வாரிசு என்றவர்கள்
‘நான் கடவுள்’ என்று
எதிரே வந்து நிற்கிறார்கள்
அஞ்சுபவரா தமிழர்?
அவர்களின் கைகளில் ‘விடுதலை’!
யுத்தம் தொடர்கிறது!