நரேந்திர தபோல்கரின் நூல்களில் அதிக ஆர்வம் கொண்ட நந்தினி பட்டப்படிப்பு முடித்துவிட்டு தையற்கலையில் புதிய நுணுக்கங்களை செய்து ஆடை வடிவமைப் பாளராக மாற விரும்பினார். அப்போது அவர் ஊரில் சில சிறுமிகள் தலையில் அழுக்கடைந்த சிக்கலான முடிகளோடு திரிவதைக் கண்டார்.
இது குறித்து கேட்ட போது இது பெண்கடவுளின் அருளால் நடக்கிறது என்ற பதில் தான் வந்தது.
முதலில் தனது தோழியின் மூலம் அறிமுகமான 73 வயது மூதாட்டியின் ஜடா முடியை அகற்றுவதற்கு முடிவு செய்து அவரின் அனுமதியோடு அவரது ஜடா முடியை அகற்றினார்.
இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த மூதாட்டி பல ஆண்டு களாக பல்வேறு தொல்லைகளுடன் இருந்துள்ளார்.ஆகையால், அவர் முடியை அகற்ற ஒப்புக்கொண்டார்.
அது அவ்வளவு எளிதான பணி அல்ல என்பதைக் கண்டறிந்தார். பல ஆண்டுகளாக தலையில் உள்ள இந்த ஜடா முடியுடன் சதையும் ஒட்டிக்கொண்டு வெட்ட இயலாதவாறு இருந்தது, மருத்துவ ஆலோசனை மற்றும் செவிலியர் உதவியோடு ஹைட்ரஜன் பெராக்ஸைட் என்ற திரவத்தை முதலில் தெளித்து முடிக்கும் தோலுக்கும் இடையே இடை வெளியை உருவாக்கி மெல்ல மெல்ல முடியை அகற்றி இறுதியில் ஒட்டுமொத்த தலைமுடியையும் நீக்கினார்.
அவரது முதல் பணி வெற்றிகரமாக முடிந்தது. இதனை அடுத்து அவர் சுமார் 276 பேரின் ஜடாமுடியை அகற்றியுள்ளார். இதில் சில ஆண்களும் அடங்குவர். ஜடா முடியினால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை புரிய வைப்பதற்குள் படாத பாடுபட்டுள்ளார்.
முக்கியமாக ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் பலர் தங்கள் நம்பிக்கையின் அடையாளமாக ஜடாமுடியைப் பார்க்கின்றனர்.
முடி புனிதமானது என்று அவர்கள் நம்புகிறார்கள். ‘ஜடா’ ஒரு தெய்வீகச் செயல் என்றும், அதை வெட்டுவது தெய்வங்களின் கோபத்தை ஈர்க்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.
சில சமூகங்களில், ‘ஜடா’ முடி உடைய ஒரு பெண் அல்லது இளம் பெண், ‘தேவதாசி’யாக (தெய்வத்திற்கு அல்லது கோவிலுக்கு) தன் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.
பெண்களுக்கு ஜடா முடி வளருவது என்பது மோசமான உடல் சுகாதாரம், முறையான முடி பராமரிப்பு இல்லாததுதான் காரணம். இது ஒன்றும் பரம்பரை பழக்கமோ அல்லது கடவுள் செயலோ அல்ல. அது தூய்மை இல்லாமல் இருப்பதால் வரும் சிக்கல் ஆகும்.அதை அப்படியே விடுவதால் அது தலை முழுவதும் படர்ந்து விடுகிறது.
நந்தினி ஆகஸ்ட் 2013இல் சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கர் தலைமையிலான மகாராட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் (விகிழிஷி) தீவிர உறுப்பினர் ஆவார்.
“டாக்டர் தபோல்கரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மூடநம்பிக்கை எதிர்ப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
2015ஆம் ஆண்டு ஒரு படித்த பெண் அதிகாரி முடியுடன் இருப்பதைக் கண்டார். அவரிடம் அதை அகற்றக் கூறும் போது அது பாவம் என்று கூறினார். படித்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்தனர். அந்தப் பெண் அதிகாரி பல மணி நேர ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதியாக ‘ஜடா’ முடியை அகற்ற ஒப்புக்கொண்டார். இன்று அவர்கள் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
புனேவில் பணிபுரியும் ஷில்பா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயார் சமீபத்தில் ஜடா முடியை அகற்றி விட்டதாகவும், இன்று சாதாரண வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் கூறினார். “என் அம்மாவின் தலையில் உள்ள ‘ஜாடா முடியை அகற்றக் கூறிய போது, அதை அகற்றினால், அவர் இறந்துவிடுவார் என்று பொதுமக்கள் என் தந்தையிடம் சொன்னார்கள். என் தந்தை அதை வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்து அதை வளர அனுமதித்தார்” என்று அவர் கூறினார். முடி நீண்டு வளர்ந்து, அவள் கால்களைத் தொட்டது. இரண்டு கிலோகிராம் எடையுள்ள ஜடாமுடி காரணமாக, அவளுடைய மூளைக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இதன் காரணமாக, இரத்த ஓட்டம் குறைந்து, பக்கவாத நோய்க்கு ஆளாக நேரிடும் என்று ஒரு மருத்துவர் கூறியிருந்தார். அதன் பிறகு, முடியை அகற்ற முடிவு செய்தோம். இந்த நிலையில் அந்த தாயின் ஜடா முடியை அகற்றியதால் அவளது மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்த மாப்பிள்ளைக் குடும்பம் அந்த திருமண நிச்சயத்தை முறித்துக் கொண்டது. இதைக் கூட அந்த இளம் பெண் கவலைப்படாமல் ஏற்றுக்கொண்டார். காரணம் இவ்வளவு மூடநம்பிக்கையில் இருக்கும் குடும்பத்தோடு வாழ்வது சிரமம் என்று கூறிவிட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹர்ஷதா என்ற சிறுமி ஜடா முடியோடு இருப்பதாக கிராமத்தில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ‘தேவதாசி’ ஆகப் போவதாகவும் கூறினார்கள். “நாங்கள் குடும்பத்தினரை அணுகி அவரது தாயாருக்கு அறிவுரை வழங்கினோம். அந்தப் பெண் பிடிவாதமாக இருந்தார். மேலும் தனது கணவர் இல்லை என்றும், தனது மகளின் ‘ஜடாமுடியை’ வெட்டினால், அவரது மகளும் இறந்துவிடுவார் என்றும் எங்களிடம் கூறினார்”. பள்ளிக் கல்வியை பாதியில் விட்ட அந்த சிறுமியின் ஜடா முடியால் அவள் தலையில் பேன் தொற்றிக் கொண்டு துர்நாற்றம் வீசியது. இந்த முடியால் ஏற்படும் நோய்த்தொற்றால் அவளது உடல் நிலை மோசமாகிக் கொண்டு இருக்கிறது என்று எடுத்துரைத்து குடும்பத்தினருக்கு ஆலோசனை கூறி ‘ஜாடா முடியை’ அகற்றினோம்.
மகாராட்டிரா மாநிலத்தில் 18 மாவட்டங் களில் இதுவரை 276 பேரின் அச்சத்தை நீக்கி ஜடாமுடியை அகற்றி உள்ளதாக ஜாதவ் கூறினார். “ஆறு வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் ஜடாமுடியை அகற்றி உள்ளேன். ஜடாமுடிகள் பல்வேறு அளவுகளில் இருந்தன – சிறியது முதல் கிட்டத்தட்ட ஒன்பது அடி நீளம் வரை.”
மும்பையைச் சேர்ந்த அஞ்சலி டி சவுசா, சுமார் எட்டு ஆண்டுகளாக ‘ஜடா’ முடியை நீக்கும் பணியில் ஈடுபட்டவர். இதை நான் செய்வதால் நான் ஹிந்து மதத்தினை இழிவு படுத்துவதாகச் சில அமைப்புகள் என்னை மோசமாக சித்தரித்து தகவல்களைப் பரப்பி வந்தன. காரணம் நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் நான் இந்தப் பணியை தொடர்ந்து செய்துவந்ததால் இதுவரை 40க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.