புவனேஷ்வர், மே 31 ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் நிகழ்ந்த பட்டாசு வெடித்த விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்தனர்.
ஒடிசாவின் பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலில் 42 நாள் சந்தன் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு நரேந்திர புஷ்கரணியில் நடைபெறும் விழாவை காண அதன் கரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இங்கு பக்தர்களில் ஒரு குழுவினர் பட்டாசு வெடித்து விழாவை கொண்டாடினர். அப்போது அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு குவியல் மீது தீப்பொறி விழுந்தது. இதில் பட்டாசு குவியல் முழுவதும் தீப்பற்றி ஒரே நேரத்தில் சரமாரியாக வெடிக்கத் தொடங்கியது.
இதையடுத்து அருகில் இருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த வெடி விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் கட்டாக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறுவனும் புவனேஸ்வர் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 32 பேர் பூரி, புவனேஸ்வர் மற்றும் கட்டாக் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
ஒடிசா தலைமைச் செயலாளர், பிரதீப் குமார் ஜெனா, சுகாதார செயலாளர் ஷாலினி பண்டிட், மாவட்ட ஆட்சியர் சன்சல் ரானாஉள்ளிட் அதிகாரிகள் புதன்கிழமை இரவு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று காயம்அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஆய்வு செய்தனர்.
முதலமைச்சர் நவீன் பட்நாயக் பூரியில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவோரை சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மம்தா அதிர்ச்சி
இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தனது ‘எக்ஸ்’ பதிவில்,
“ஜெகந்நாதரின் சந்தன் யாத்திரை விழாவில் பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்து பலரும் காயம் அடைந்தது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும். ஒடிசா அரசுடன் எனது கவலையை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.