எனது உரையை நிறைவு செய்யும் முன்னர் நமது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு டாக்டர் நாயர் அவர்கள் ஆற்றியுள்ள மாபெரும் சேவைகளுக்காக அவருக்கு நமது நன்றிக் கடனை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். நமது இயக்கம் தொடங்கப்பட்ட தொடக்க காலத்திலேயே ஹோம் ரூல் இயக்கத்தினர் அதன் கழுத்தை நெரித்துக் கொல்லச் சதி செய்தபோது நமது உதவிக்கு அவர் வந்தார்.
நமது பத்திரிகை துவங்கப்படுவதற்கு முன், நமக்கும் திவான்பகதூர் கருணாகர மேனனுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது, அறிவிக்கப்பட்ட ‘ஜஸ்டீஸ்’ பத்திரிகை வெளியிட்டு தேதிக்கு ஆறு நாட்களுக்கு முன்னர் திருமதி பெசண்ட், திரு. சி.பி. ராமசாமி அய்யர், நமது மதிப்பிற்குரிய நண்பர் திவான்பகதூர் கேசவபிள்ளை ஆகியோர், நமது பத்திரிகைக்கு ஆசிரியரே இல்லாமல் போக வேண்டும் என்ற நோக்கத்தில், இப்பேச்சு வார்த்தைகளில் தடை ஏற்படுத்தினர். இதற்காகத்தானோ என்னவோ, இங்கிலாந்து நாட்டின் லிபரல் கட்சியில் ஓர் அரசியல் பணியாளராகப் பணி செய்து பயிற்சி பெற்ற, ஆங்கிலக் கல்வி அறிவு நிறைந்த, பத்திரிகை அனுபவமும் கொண்ட, இந்திய விவகாரங்களை விரைவில் புரிந்து கொள்ள இயன்றவருமான ஒருவர் நமது பத்திரிகையின் இயக்குநர் குழுவில் இருந்தது நமக்கு நல்வாய்ப்பாகப் போய் விட்டது.
எந்தச் செயலை மேற்கொள்ள அவர் முன் நின்றாலும், அதற்கு அவரது பணி இன்றியமையாததாக ஆகி விடுவது வழக்கம்.
திரு. கருணாகரமேனன் கடைசி நேரத்தில் நம்முடன் சேர்ந்து பத்திரிகையின் ஆசிரியராக இருக்க மறுத்த நேரத்தில் டாக்டர் நாயர் கவுரவ ஆசிரியராக இருக்க முன் வந்தபோது, இயக்குநர்கள் நன்றி உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் அதனை ஏற்றுக் கொண்டனர். நமக்காக அவர் செய்யும் நற்பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்குத் தேவையான மன உறுதியும், உடல் நலமும் பெற்று அவர் வாழ வேண்டும் என்று விரும்புகின்றோம்.
அவரது வழிகாட்டுதலில் நமக்கு உறுதி அளிக்கப்பட்ட சுதந்திர மண்ணின் தோற்றத்தை ஏற்கெனவே நம்மால் காண முடிகிறது.
நமது இலட்சியத்தை நோக்கி முன்னேறிச் சென்று வெற்றியடையும் நமது பணியில் நமது தலைவராக அவர் செயல்படட்டும்.
நமது இலட்சியத்துக்காகப் பெரும் பங்களிப்பை அளித்த திரு பி.என் ராமன்பிள்ளை அவர்களின் சேவையை அங்கீகரித்துப் போற்றாமல் இருக்க நம்மால் இயலாது.
இந்திய பத்திரிகையாளராக அவர் பெற்ற அனுபவமும் அவரிடமுள்ள ஆற்றலும் சென்னையில் உள்ள மற்றவர்கள் எவரது ஆற்றலையும்விடக் குறைந்தது அல்ல.
கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் ஆளாக்கப்பட்ட நமது சமூக மக்களின் கண்களைத் திறந்து வைக்கும் மாபெரும் பணியைச் செய்து வரும் நமது தமிழ் நாளிதழான ‘திராவிடன்’ இதழுக்கு, சுவாமி ருத்ரகோடி, பண்டிதர் வில்வபதி செட்டியார் மற்றும் அவர்களைப் போன்ற தனது திறமை மிகுந்த உதவியாளர் குழுவுடன் திரு எம். பக்தவத்சலம் பிள்ளை அவர்கள் ஆசிரியராக உள்ளார்.
நமது தெலுங்கு நாளிதழான ‘ஆந்திர பிரகாசிகா’ இதழுக்கு நமது பழைய நண்பரும் திறமை மிகுந்த பத்திரிகையாளருமான திரு. ஏ.சி. பார்த்தசாரதி நாயுடு அவர்கள் ஆசிரியராக இருக்கிறார்.
திரு. ராகவையா நாயுடு மற்றும் நரசிம்ம நாயுடு மற்றும் அவர்களைப் போன்ற திறமையான பிறரும் அவருக்கு உதவி செய்ய உள்ளனர். வடக்கு சர்க்கார் மாவட்டங்களிலுள்ள பார்ப்பனர்களின் செல்வாக்கிலிருந்து தெலுங்குப் பொது மக்களை மீட்கவும் அவர்கள் முயன்று வருகின்றனர்.
எந்தவித முணுமுணுப்பும் இன்றி, மிகுந்த ஆர்வத்துடன் தங்களது விலை மதிப்பில்லாத சேவையை அன்றாடம் தவறாமல் அளிக்கும் கவுரவப் பணியாளர்களின் எண்ணிக்கையே நமது இயக்கத்தின் குறிப்பிடத்தக்க ஓர் சிறப்பு அம்சமாகும். அவர்களுள், தங்களை முழு நேரப் பணியாளர்களாக மாற்றிக் கொண்டு இயக்கத்துக்காக சேவை செய்து வரும், நகராட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற திரு. டி. சிங்கார முதலியார், மற்றும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற திரு. பி. நாராயணசாமி முதலியார் ஆகியோரைப்பற்றி சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.
நீதிக்கட்சி இயக்கம் 1917 ப.357
தொகுப்பாசிரியர் டி. வரதராஜுலு நாயுடு.
சென்னைக் கூட்டமைப்பின் முதல் மாநாடு (1917 டிசம்பர் 28,29) உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனது வரவேற்புரையைப் படிக்க வரவேற்புக் குழத் தலைவர் ராவ்பகதூர் பி. தியாக ராயசெட்டி அவர்களால் இயலாமல் போனதால், அவருக்குப் பதிலாக திரு. திருமலைப்பிள்ளை அந்த வரவேற்புரையைப் படித்தார்.
– க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி