வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட எல்லா கட்டடங்களிலும் கண்ணாடிகளின் பயன்பாடு உள்ளன. ஒளி புகக்கூடியபடி, வெளியில் இருந்து அல்லது உள்ளே இருந்து பார்க்கின்ற வகையில் உள்ள கடினமான கட்டுமானப் பொருள் கண்ணாடி மட்டுமே.
பொதுவாகக் கண்ணாடிகள் மணல் சிலிக்காவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது கனமாகவும் அதே நேரத்தில் உடையக்கூடியதாகவும் உள்ளன. இவற்றுக்கு மாற்றாக ஒளி ஊடுருவக் கூடிய மரப் பொருட்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மர நார்களில் உள்ள லிக்னினை நீக்கிவிட்டுச் சில வேதிப்பொருட்களைக் கலந்து, இவை உருவாக்கப்படுகின்றன. இவை சாதாரண கண்ணாடிகளை விட அதிக வலிமை உடையவை. ஆனால், எடை குறைந்தவை.
அதேபோல ஏற்கெனவே மரப் பொருட்களுக்கு அதிகமான தேவை உள்ளது. காடுகள் இதற்காக அழிக்கப்படுகின்றன. ஆகவே இதற்கு மாற்றாக ஒன்றை சீனாவில் உள்ள சி.எஸ்.யு.எப்.டி. (CSUFT) பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
சாதாரண மரத்திற்குப் பதிலாக மூங்கில்களைக் கண்ணாடி உற்பத்தி செய்ய பயன்படுத்தலாம் எனக் கண்டறிந்துள்ளனர். மூங்கில்கள் மிக வேகமாக வளர்பவை என்பதால், அவற்றை வெட்டி கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவது சுலபம். அதேபோல மூங்கிலின் வேதியியல் தன்மை மரத்திற்கு ஒப்பானது. மூங்கிலை வெட்டி அதில் உள்ள லிக்னினை நீக்கிவிட்டு, சோடியம் சிலிகேட் எனும் வேதிப்பொருளோடு வேதிவினை புரிய வைக்கும் போது மூங்கில் துண்டுகள் கண்ணாடி போல் ஆகின்றன.
இப்படித் தயாரிக்கப்படும் மூங்கில் கண்ணா டிகள் எளிதில் தீ பிடிக்காதவை. நீரினால் பாதிக்கப்படா தவை. அதுமட்டுமன்றி புகை, கார்பன் மோனோ ஆக்சைடு ஆகியவற்றை வெளியில் இருந்து உள்ளே அனுமதிக்காதவை. இதனால், இவற்றைக் கண்ணாடிகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சில வகையான சோலார் செல்களில் இதைப் பயன்படுத்தி பார்த்த போது, அவற்றின் ஆற்றல் 16 மடங்கு உயர்ந்தது.