மிக சக்திவாய்ந்த இஸ்ரேல் நாட்டின் ஸ்பை கருவிகளை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இஸ்ரேல் நாட்டிடம் இருந்த வாங்கியதாக . பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘பைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ (Financial Express) நாளிதழில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
ஏற்கெனவே மோடி அரசு ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை உளவு பார்த்ததாக கடந்த 2021-ஆம் ஆண்டு பன்னாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அடுத்து ஒரு அதிர்ச்சி செய்தியை பைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ளது. அதில், “இஸ்ரேலின் செப்டயர், காக்னைட் ஆகிய நிறுவனங்களின் சக்திவாய்ந்த உளவுக் கருவிகளை மோடி அரசு வாங்கியுள்ளது. கடலுக்கு அடியில் உள்ள கேபிள் மய்யங்களில் இந்த உளவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், சிங்டெல் (சிங்கப்பூர் நிறுவனம்) ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த உளவுக் கருவிகள் வாங்கப்பட்டு ஆழ்கடல் கேபிள் மய்யங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த உளவுக் கருவிகள் மூலமாக அலைபேசி உரையாடல், குறுந்தகவல், வாட்ஸ் அப் தகவல், இணைய நடவடிக்கைகள், மெயில் தகவல்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும்.
இந்த உளவுக் கருவிகள் மூலமாக 104 கோடி இந்தியர்களின் அந்தரங்க தகவல்களையும், அவர்களின் உரையாடல்கள் உள்ளிட்ட விடயங்களையும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களால் வேவு பார்க்க முடியும்” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கேபிள் திட்டத்தில் உலகம் முழுவதும் பணிபுரிந்த முக்கிய அதிகாரிகளின் பேட்டியையும் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரிகள் கூறுகையில், “இந்தியா மட்டுமல்ல; பல நாடுகள் இந்த உளவுக் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், அந்த நாடுகள் யாருக்கும் தெரியாமல் இதை செய்வார்கள். ஆனால், இந்தியா மட்டும் தான் தங்கள் நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களை இந்த உளவுப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளன” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த வகையிலும் நேர்மையான அரசியலை நடத்துவதற்கான பண்பாடு பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசுக்குக் கிடையாது. கிடையவே கிடையாது.
சொந்த நாட்டு மக்களையே மதவாதக் கண்ணோட்டத்தோடு குடியுரிமையைப் பறிக்கும் அரசாயிற்றே!
உளவு பார்த்த விடயத்தில் அமெரிக்க அதிபரே பதவி விலக நேர்ந்ததெல்லாம் உண்டு.
‘பாரத் மாதா கீ ஜெய்!’ என்று 56 அங்குல மார்பை நிமிர்த்திக் காட்டும் இந்தப் பாரத புண்ணிய பூமியில்தான் மக்களை உளவு பார்க்க வெளிநாட்டிலிருந்து பெரும் அளவு பணம் கொடுத்து உளவுக் கருவிகள் வாங்கும் நிலை!
ஏன்? தன் ஆட்சியின் யோக்கியதை பற்றி தனக்கே நம்பிக்கை இல்லை என்பதுதான்!
சூதும் வாதும் நிறைந்திருந்தால் குறுக்கு வழியில்தானே சென்றாக வேண்டும்.