புதுடில்லி, மே 29 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் எச்சரித்தது போலவே தேசிய அளவில் மாற்றங்கள் நடக்கிறதோ என்று அரசியல் நிபுணர்கள் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர்.
கடைசி நிமிட ஆச்சரியமாக, பிரதமர் நரேந்திர மோடி அரசு இராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கி உள்ளதானது. அவர் ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை நியமிப்பதற்குப் பதிலாக இவரின் பணி நீட்டிக்கப்பட்டு உள்ளது. வயதில் மூத்தவர் அடிப்படையில்தான் பதவி வழங்கப்படும்.
துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை வயது அடிப்படையில் நியமித்து இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு இராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கி உள்ளது.
மேனாள் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷா 6 மாத காலம் ராணுவத் தளபதியாக இருந்தபோது 1975இல் கடைசியாக இதுபோன்ற நீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஜெனரல் பாண்டேவுக்கு வழங்கப்பட்ட இந்த நீட்டிப்பு அசா தாரணமானதாக பார்க்கப்படுகிறது. அடுத்த பதினைந்து நாட்களில் புதிய அரசு பதவியேற்கும் நிலையில் இந்த நீட்டிப்பு பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த இராணுவத் தளபதியை நியமிப்பதில் அரசாங்கம் வெறும் சீனியாரிட்டி மட்டுமே இத்தனை காலம் அடிப்படையாக வைத்து இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி சீனியாரிட்டியை அடிப்படையாக வைக்காமல் திடீரென பதவி நீட்டிப்பு செய்தது பல விதமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியமாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் எச்சரித்தது போலவே தேசிய அளவில் மாற்றங்கள் நடக்கிறதோ என்று அரசியல் நிபுணர்கள் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர்.
என்ன எச்சரித்தார்?
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார். மனைவி பாஜக ஆட்சியில் ஒன்றிய அமைச்சர் என்றாலும் கணவர் பாஜக ஆட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் தி வயர் ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காது. பெரும்பான்மை எண் 272. அதை பாஜக பெற வாய்ப்பே இல்லை. அந்த கட்சிக்கு 200- 220 இடங்கள் கிடைக்கும். ஆனால் அதில் கூட 220 என்பது அதிகபட்ச நம்பர்.
அவ்வளவு நம்பர் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. என்டிஏ கூட்டணிக்கு 272 கிடைக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் கூடுதலாக 30- 35 இடங்களை பெறலாம். சேர்த்து பார்த்தால் 250- 265 இடங்களை என்டிஏ மொத்தமாக பெறலாம். அதுதான் நிலை. இதுவும் கூட அவர்களுக்கு தாராளமாக இடத்தை கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என்று நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்திருந்தார்.
புதிய எச்சரிக்கை
இந்த நிலையில்தான புதிதாக, பாஜக தோற்றால் அந்த கட்சி எளிதாக தோல்வியை ஏற்றுக்கொண்டு போகாது. ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டில் இந்து ராஷ்டிரம் என்கிற திட்டம் நிறைவேறாமல் போகும். காந்தியைக் கொன்ற பிறகு நேர்ந்த கதிதான் நேரும். எனவே வீழ்ச்சியைத் தடுக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.
பாஜக வீழ்ந்தால் ரஃபேல், –’PM Cares’ உள்ளிட்ட பல மோசடிகள் வெளிவரும். இது, பாஜகவுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நடக்கும் சண்டை. இச்சண்டை, வாக்களிப்பதுடன் முடிவதுமல்ல; ஜூன் 4ஆம் தேதி முடிவு வெளியானதும் முடிந்துவிடக் கூடியதுமல்ல, என்று நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே எச்சரிக்கை
ஏற்கெனவே 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘இந்தியாவின் வரைபடம் மாறும்’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.