புதுடில்லி, மே 29- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் விண்ணப்பத்தை பரி சீலிப்பது தொடர்பாக டில்லியில் நேற்று (28.5.2024) நடைபெற இருந்த நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
புதிய அணை கட்ட முயற்சி
தமிழ்நாடு நீர்ப்பாசனத்துக்கு பயன் அளிக்கும் முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயர நீர்மட்டம் கொண்டது. கேரள அரசின் நடவடிக்கைகளால் இந்த அணையின் நீர் மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளால் அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.
இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லையென கூறி. அதற்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயற்சித்து வரு கிறது. அதற்கான நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது. கேரளா கட்டவுள்ள புதிய அணை, தற்போது உள்ள அணையில் இருந்து 1,200 அடி கிழக்கே அமைய இருப்பதாக தெரிகிறது.
கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. அரசியல் கட்சியினரும் எதிர்க்கிறார்கள். ஆனாலும் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதில் கேரள அரசு முனைப்போடு செயல்படுகிறது.
நிபுணர் குழுவுக்கு விண்ணப்பம்
புதிய அணைக்கான சுற்றுச் சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய அணையில் ஆய்வு எல்லைகளை வரையறுத்து தருமாறு ஒன்றிய சுற்றுச் சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசின் நீர்வளத் துறை கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி விண்ணப்பித்தது.
இந்த விண்ணப்பம் மே மாதம் 28 ஆம் தேதி (அதாவது நேற்று) பரிசீலனை செய்யப்படும் என நிபுணர் மதிப்பீட் டுக்குழுவின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிட்டு இருந்தனர். இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் கொந்தளித்தனர். ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்துக்கு கிளம்பினர்.
முதலமைச்சர் கடிதம்
இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24 ஆம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு கடிதம் எழுதினார். அதில் சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை வழங்கக்கூடாது என வற்புறுத்தி இருந்தார். தற்போதுள்ள அணை பாது காப்பானதுதான் என்று நிபுணர் குழு வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரத்தையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இருந்தாலும், நிபுணர் குழுவினர் அனுமதியை வழங்கி விடுவார்கள் என அச்சம் கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் நேற்று (28.5.2024) காலை போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
ஆனால், சிறிது நேரத்தில் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவின் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தமிழ்நாடு விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர். தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த முடிவு களையும் ஒன்றிய அரசு எதிர்காலத்தில் எடுத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
ஏற்கெனவே, நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் கோவிந்த் ஜோசப் சக்கரபாணி, தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கேரளா புதிய அணையை கட்ட முடியாது என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு காரண மாக இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.