புதுடில்லி, மே 28 அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை ஊழலாகக் கருதமுடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கருநாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் சாம்ராஜ் பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜமீர் அகமது கான், வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர் ஷஷாங்காசிறீதரா, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
“காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக நிதி உதவி அளிப்பதாக இருக்கின்றன. இது ஊழல் தேர்தல் நடைமுறைக்கு சமம்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அந்த மனு நேற்று (27.5.2024) தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
“ஓர் அரசியல் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் உள்ள உறுதிமொழிகள், இறுதியில் பொது மக்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி உதவி செய்ய வழிவகுப்பது, அந்த கட்சியின் வேட்பாளரின் ஊழலுக்கு சமம் என்ற மனுதாரரின் வாதம் தொலைநோக்கு பார்வையற்றது. ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் அளித்துள்ள வாக்குறுதிகள், தேர்தல் சட்டங்களின் கீழ் ஊழல் நடவடிக்கையாக கருதப்படாது.
எந்த வழக்கிலும் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் இல்லாதபோது நாம் இது போன்ற கேள்விகளுக்குள் ஆழமாக செல்ல வேண்டியதில்லை. அதன்படி மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.”
-இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இவர் கருநாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அப்போது “காங்கிரசின் 5 உத்தரவாதங்கள் சமூகநல கொள்கைகளாக கருதப்பட வேண்டும். அவை நிதிரீதியாக லாபகரமானதா இல்லையா என்பது முற்றிலும் வேறுபட்டது. தேர்தல் வாக்குறுதிகளை ஊழல் நடைமுறைகள் என்று கருத முடியாது” என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.