புதுடில்லி, மே.22- தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று கருநாடக மாநிலத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு ள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 16ஆம் தேதி காவிரி ஒழுங் காற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் நாட்டுக்கு மே மாதத்துக்கு வழங்க வேண்டிய 2.5 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் திறந்து விடவேண் டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30ஆவது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.அல்தார் தலைமையில் டில்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, கருநாடகம் உள்ளிட்ட 4 மாநில அதி காரிகளும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் நீர் வளத்துறை கூடுதல் தலைமைச் செய லாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் பேசுகையில், கடந்த 15ஆம் தேதி வரை சுமார் 96.456 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் வழங்காமல் இருப்பதாகவும், ஆணை யத்தின் கடந்த கூட்டத்தில் நிர்ணயிக் கப்பட்ட நீரையும் கருநாடகம் வழங்க வில்லை என்றும் தெரிவித்தனர்.
கருநாடக மாநிலம் பெரிய அணை களில் தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு, குடிநீர் தேவையை காரணம் காட்டி தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் தந்திரத்தை கையாள்வதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், மே மாத தண்ணீரையும், ஜூன் மாதம் பிலிகுண்டுலுவில் 9.19 டி.எம்.சி. தண்ணீரையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது தவிர மேகதாது அணை விவகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்தில் பேசக்கூடாது என்றும், அது தொடர் பான விரிவான திட்ட அறிக்கைமீதான தீர்மானம் பற்றியும் எடுத்துரைத்தனர்.
அதுபோல சிலந்தியாறில் தடுப் பணை கட்டுவதற்கான விவரங்களை கேரள அரசு தமிழ்நாடு அரசிடம் தெரி விக்காமல் இருப்பதாகவும் கூறினர்.
மாநில அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களையும் கேட்டுக் கொண்ட ஆணைய தலைவர் எஸ்.கே.அல்தார், மே மாதத்துக்கு தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்து விடவேண்டும் என்று கருநாடகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.